
இன்ப வாழ்வில் அடிப்படையாக அமைவது வெறுப்பு அல்லது பகை. பொதுவாக மனித வாழ்க்கை இரண்டு முக்கிய எதிரிடையான அடிப்படைப் பண்புகளினால் இயங்கி வருகின்றது.
அவையே அன்பு அல்லது விருப்பு. வெறுப்பு அல்லது பகை. அன்பின் அடிப்படையில்தான் ஒற்றுமை, சமாதானம், அமைதி முதலியவை நிலவுகின்றன. வெறுப்பின் அடிப்படையில்தான துன்பங்கள், அழிவு, சண்டை சச்சரவுகள் முதலியன நிகழ்கின்றன.
குடும்பம், சமூகம், இளம் சகோதரத்துவம் முதலிய எல்லா இணைப்புகளும் அன்பின் வழியிலேயே உருவாகின்றன. ஒரு தனிமனிதன், தன் இனத்தவரிடமிருந்து விலகி வாழ்கின்றான் என்றால் அதற்குக் காரணம் இனத்தவரிடம் அவனுக்கு உள்ள வெறுப்புதான்.
நட்பு, திருமணம், உறவு, ஒத்துழைப்பு, சகோதரத்துவம் முதலியவையெல்லாம் அன்பின் சின்னங்கள். அவையே சிதறிக் கிடக்கும் மனிதர்களை ஒன்று சேர்க்கும் பாலமாக அமைகின்றன.
தாய் தன்னுடைய குழந்தையிடம் அன்பு செலுத்தவில்லை யென்றால், அக்குழந்தை நல்ல முறையில் வளர்ந்து மனிதனாக வாழமுடியுமா? கணவன் மனைவி இருவரிடையே அன்பு நிலவவில்லை என்றால், குடும்ப வாழ்வு எவ்வாறு சீராக நடைபெற முடியும்?
ஒருவன் இன்பமாக வாழவேண்டும் என்று விரும்பினால், முதலில் அன்பு செலுத்தக் கற்றுக்கொள்ளுதல் வேண்டும். நாம் ஒருவரிடம் அன்பு செலுத்தாமலிருந்து, நம்மீது அவர் அன்புடையவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அறிவீனமாகும்.
இயல்பான அன்பு நம்மிடையே நிலவவேண்டும். உற்றார் உறவினரைவிட்டு, மனைவி மக்களைத் துறந்து, காடுகளிலும் மலைக்குகைகளிலும் வாழ்ந்து வருபவர்கள், கடவுள் மீது அன்பு செலுத்தி, சிந்தனைகளைச் சிதறவிடாமல ஒருமைப்படுத்தி வாழ்வதன் மூலம் திம்மதியைப்பெற முடிகின்றது.
ஒற்றுமையான குடும்ப வாழ்க்கைக்குக் கணவன் மனைவியரிடையே நிலவும் அன்பு காரணமாகின்றது. மனிதரிடையே தோன்றும் அன்புக்கும் விலங்குகள், பறவைகளிடம் தோன்றும் அன்புக்கும் முக்கிய வேறுபாடு உண்டு. விலங்குகள், பறவைகள் ஆகியவற்றினிடையே ஏற்படும் அன்பு. உணர்வின் அடிப்படையில் தோன்றுவதன்று. எனவேதான் அவற்றால் அன்பினால் ஏற்படும் பலன்களை அனுபவிக்க முடியாமல் போய் விடுகின்றது. ஆனால் மனித அன்பு அத்தகையதன்று.
மனிதரிடையே நிலவும் அன்பு உணர்வின் அடிப்படையில் தோன்றுவது, அன்பு வற்றினால் அதனால் ஏற்படும் விளைவை மனிதன் துன்பமாக அனுபவிக்கின்றான். திருமணத்தால் தோன்றும் அன்பு ஒவ்வொருவரையும் சமூகத்தோடு பிணைத்து வைக்கிறது. சகோதரபாசம் ஒவ்வொருவரிடையேயும் நிலவத் துணைபுரிகின்றது. மனமொத்த இனிய குடும்ப வாழ்கைக்கு அன்பு இன்றியமையாததாக அமைந்துவிடுகின்றது.
அத்தகைய அன்பு இல்லாவிட்டால் குடும்ப வாழ்க்கை, துன்பக் களமாக அமைந்து விடுகின்றது. எனவே, அன்புதான் இன்ப வாழ்வின்-இனிய குடும்ப வாழ்வின் அடிப்படை என்பதைச் சிறிதும் மறந்துவிடக்கூடாது.
அன்பு செலுத்தி அன்பைப் பெறுவதற்கு மனம்தான் காரணம். மனத்தால் வாழ்வதால்தான் மனித வாழ்க்கைக்குத் தனி மகத்துவம் கிடைக்கிறது. மனத்தால் வாழக்கூடிய தன்மையும் ஆற்றலும் மனிதனைத்தவிர பிற உயிரினங்களுக்கு இல்லை.
ஒரு மனிதன் துன்பமடைந்து திண்டாடுகிறான் என்றால் அவன் மனத்திலே துன்ப அலைகள் மோதுகின்றன என்றுதான் அர்த்தம். ஒருவன் இன்பமயமான வாழ்க்கையில் திளைத்துச் சுவைக்கிறான் என்றால் அவன் மனத்திலே இன்ப ஊற்று கொப்பளித்துப் பொங்குகிறது என்றே பொருள் கொள்ளவேண்டும்.
நம் மனத்தில் எந்நாளும் ஓர் இன்ப ஊற்றுப் பொங்கிவழியட்டும். அதனால் துயரங்கள் மனத்தை விட்டே ஓடட்டும்!