
உங்கள் நேரத்தைப் புத்திசாலித்தனமாய் செலவிடுகிற போதும், பணத்தைக் கவனமுடன் பங்கீடு செய்கிறபோதும் நீங்கள் உங்களைப்பற்றி நல்ல விதமாய் உணர்வீர்கள். மாறாக, நேரத்தை வீணடித்து, பணத்தை விரயம் செய்கிறபோது ஒரு கையாலாகாத உணர்வை அடைவீர்கள்.
நேரத்தைச் சிறப்பான முறையில் பங்கீடு செய்யத் தெரிந்து கொண்டுவிட்டால் நீங்கள் பலவற்றை வெற்றிகரமாய் செய்து முடிக்கலாம். அப்போது நேரத்தைப் புத்திசாலித்தனமாய் பயன் படுத்துவதோடு, ஆற்றல்மிக்க விதத்திலும் நீங்கள் பயன்படுத்து கிறீர்கள். வழக்கமான வேலைகளை துரிதமாகவும், திறமையோடும் செய்யும் வழிகளைக் கண்டறிகிறீர்கள். வேலைகளுக்கு முன்னுரிமை அளிப்பதிலும் தேர்ந்து விடுகிறீர்கள்.
முன்பு சலிப்பூட்டிய, அதிக நேரத்தை விழுங்கிய வேலைகளை இப்போது விரைவாய் செயல்படுத்த முடிவதையும் காண்பீர்கள். அதுமட்டுமா, ஆர்வத்தை ஏற்படுத்துகிற, அறைகூவல் விடுக்கிற வேலைகளையும் கையிலெடுக்கிறீர்கள். தன்னார்வக்கொள்கை தொடர்பாய் இப்படி பழமொழி உண்டு.
"உங்களுக்கு ஏதாவதொருவேலை ஆகவேண்டுமென்றால் அதை சுறுசுறுப்பானவர் கையில் ஒப்படையுங்கள்'
உங்களை அச்சுறுத்துகிற வேலைகளும் நீங்கள் செயலில் இறங்கிவிட்டால் எளிதாகிவிடும். இந்த உண்மையை சுறுசுறுப்பானவர் அறிந்திருப்பார்.
"ஆ, இது எத்தனை கடினமான வேலை, நம்மால் ஆகக் கூடியதா?" என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பதைவிட வேலையைத் தொடங்கிவிடுங்கள். பிறகு அது கடினமாயிருக்காது.
"இப்போதே செயல்படுங்கள்' என்கிறார் ஸ்டோன். தேர நிர்வாகத்தில் இதனை ஒரு 'செயலூக்கி' என்றே சொல்லலாம். செயலில் தாமதம் உண்டாக்கித் தள்ளிப்போடுவது தன்மீதே அவநம்பிக்கையும், அனாவசியக் கவலையையும் உண்டுபண்ணும் நாளை பார்த்துக் கொள்வோம் என்று தள்ளிப்போடுவது நாளை மறுநாள், அடுத்த வாரம் என்று மேலும் தள்ளிப்போடுகிற மனப்போக்கைத் தரும். பணத்தைக் கவனமாய் நிர்வகிப்பதும் ஒரு சிறந்த செயலூக்கி எனலாம்.
கழிவுபோக மிஞ்சியுள்ள தொகை கணிசமாய் இருந்தால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் பல அனுகூலங்களைப் பெறமுடியும். தகுதியான நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் அது வகை செய்யும். வரவு செலவுத்திட்டம் ஒன்றை தயார் செய்துகொள்ளுங்கள். அதில் உள்ள மிகப்பெரிய அனுகூலம், உங்கள் மனதைச் சில்லறைக் குழப்பங்களில் சிக்காமல் வைத்துக்கொண்டு, குறிக்கோளை அடைவதில் ஒருமுனைப்பட முடிவது.
செலவுகள் எதிர்கொள்ளப்பட்டு, இனி எந்த பாக்கியும் செலுத்த வேண்டியிருக்காது என்கிறநிலையில் நீங்கள் கவலை இல்லாமல் உங்கள் நேரத்தையும், ஆற்றலையும் குறிக்கோளை அடையும் முயற்சிக்கு ஒதுக்க முடியும்.