

சிலர் பேசுவது நன்றாகப்புரியாது. ஆதலால் இன்னொருமுறை சொல்லுங்கள் என்று கேட்போம். அவர்களெல்லாம் இரண்டாவது முறையும் பேசுவார்கள். மிக விரைவாகப் பேசிவிட்.டு நிறுத்தி விடுவார்கள். நாம் இரண்டுமுறை கேட்ட பிறகு அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது புரியாமல் திரும்பவும் கேட்க முயற்சிப்போம். அவர்களுக்கும் தர்ம சங்கடமாகி போய்விடும். அதனால் பேசுபவர்கள் தெளிவாக பேசினால் கேட்பவர்கள் இன்னொருமுறை கூறுங்கள் என்று கேட்கவேண்டிய அவசியம் இல்லை. அதற்கு நாம் செய்ய வேண்டியது இதுதான்.
பேசும்போது வாயை நன்று முழுமையாகத் திறக்காவிட்டால் சப்தம் மூக்கின் வழியே தப்பித்துவிடும். இதற்கு முன்னர் நன்றாய் வாய் திறந்து "ஆ" என்று சத்தமிட்டு பழகலாம். பிடிப்பான தாழ்வாய்க் கட்டைப்பகுதியை ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு அசைத்துப் பழகலாம். இதுபோல் பழகும் பொழுது பேச்சு தெளிவாக வரும்.
ஒவ்வொரு வாக்கியம் முடிவிலும் நாம் சொல்ல வேண்டியதை சொல்லி முடிக்காவிட்டால் குரலில் த்வனியை குறைக்காமல் இருக்கவேண்டும்.
யாரிடம் எதைப் பேசினாலும் பேசும்போது அடிக்கடி உம், ஆ, வந்து என்று சொல்லும் வார்த்தைகளை தவிர்த்தால் பேச்சு அழகு பெறும்.
வாக்கிய முடிவின்போது குரலை உயர்த்தினோமானால், நாம் ஏதோ கேள்வி கேட்பது போல் ஆகிவிடும். இல்லாவிட்டால் நாம் சொல்லும் விஷயத்தில் நமக்கே நம்பிக்கை இல்லாததுபோல் இருக்கும்.
குரலின் தொனியில் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். ஏனெனில் நாம் பேசும் தொனிதான் எவ்வளவு பெரிய விஷயத்தையும் சாதாரணமாகவும், சாதாரணமான விஷயத்தை மிக உயர்ந்ததாகவும் வெளிப்படுத்தும்.
பேச்சின் நடுவே ஆழ்ந்த சுவாசத்தை இழுக்க வேண்டும்போல் இருந்தால் அதற்கு தயங்காமல் இழுத்துவிட்டு பின்னர் பேசலாம். இதனால் பேச்சு தெளிவாக இருக்கும்.
குறிப்பாக டெலிபோனில் பேசும்போது சடக்கென்று பேச்சை நிறுத்தாமல் பேசவேண்டும். அப்படி நிறுத்தினால் பேச்சை முடித்துவிட்டோம் என்று நினைத்து எதிர்முனையில் போனை வைத்து விடுபவர்களும் உண்டு.
இதுபோல் பேசினால் பேசுபவர்கள் மீது நல்ல அபிப்பிராயம் ஏற்படும். என்ன சொன்னீர்கள், என்று மீண்டும் மீண்டும் கேட்க வேண்டிய அவசியம் ஏற்படாது. இப்படிப்பட்ட பேச்சுக்கு முழு மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். பேச்சு ஓர் கலை என்பதால் இப்படி பேசிப்பழகுவோம்!