

மனித குலம் பயனடைய கன்ஃபூசியஸ் என்ற மாபெரும் தத்துவ ஞானி பல எண்ணற்ற சிறந்த அறிவுரைகளை வழங்கிவிட்டு சென்றிருக்கிறார். ஆடம்பரமான வாழ்க்கையை தவிர்த்த அவர் தவறான வழிகளில் ஈட்டிய செல்வம் மகிழ்ச்சியை தராது என்று கூறினார்.
எனக்கு கொஞ்சம் அரிசிச் சாதமும் குடிக்க தண்ணீரும் கிடைத்தால் போதும். தூங்குவதற்கு தலையணை மெத்தை இல்லாமல் மடித்த கைகளை தலையணையாக வைத்துக் தரையில் படுத்து நன்கு தூங்கிவிடுவேன். குறைந்த அவசியமான தேவையானவற்றைக் கொண்டே கூட என்னால் மகிழ்ச்சியாக வாழ முடியும் என கன்ஃபியூஸியஸ் எளிய முறையில் வாழ்ந்து காட்டினார்.
உலக மக்கள் தீங்கைப் பற்றி நினைக்காமல் நல்லனவற்றையே நினைத்து மனதை கட்டுப்படுத்தி நல்லனவற்றையே செய்து வரும்போதுதான் அனைவருக்கும் ஆனந்தமும் அமைதியும் கிட்டும்.
இயற்கை வைத்தியத்தை பற்றி தான் எழுதிய புத்தகத்தில் டாக்டர் ஜே. எம் ஜஸ்ஸாவாலா என்பவர் "தவறாக வாழ்ந்து வருவதாலோ அல்லது தவறான தீய எண்ணங்களை நினைத்து வருவதாலோ பலதரப்பட்ட வியாதிகள் தோன்றுகின்றன".
இலவசமாக நமக்கு தரும் காற்று, சூரிய வெளிச்சம், தண்ணீர் போன்றவைகளைச் சரியாக உபயோகபடுத்திக்கொள்ள கற்றுக் கொள்வதுதான் இயற்கை வைத்தியம் ஆகும்.
வெளித்தோற்றத்தில் மட்டும் ஆரோக்கியமாக இல்லாமல் உள்ளுக்குள்ளும் ஒருவன் ஆரோக்கியமாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். கவலை, பொறாமை, பேராசை போன்றவைகளினால் ஒரு மனிதனுக்கு உடல் ஆரோக்கியம் கிடைக்காமல் போகிறது.
நோய் நொடியின்றி மிருகங்கள் இயற்கை வைத்தியத்தை கடைபிடித்து வாழ்ந்து வருகின்றன. நோயால் பாதிக்கப்பட்ட நாய் அது குணமாகும் வரை பட்டினி கிடக்கும். பாதிக்கப்பட்ட பூனையோ வெயிலில் அமர்ந்து சூரிய கிரகணங்களில் குளித்து தன்னுடைய சருமத்தை காப்பாற்றிக் கொள்கிறது.
நாகரீகம் நிறைந்த நகரங்களில் வாழும் மக்களைவிட ஆப்பிரிக்கா காட்டில் வாழும் பூர்வீகக் குடிகள் மருத்துவர்களின் துணை இன்றி ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். இயற்கையான வாழ்வு வாழ்வதால்தான் இவர்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.
முற்றும் துறந்த துறவிகள் ஆசை வெறியில் தங்களை அழித்துக் கொள்ளாமல் உள்ளங்களை தூய்மைப்படுத்தி ஆடம்பரம் இன்றி வாழ்ந்து வருகிறார்கள்.
சூரியன் உதிக்கும்போது நான் உழைக்க ஆரம்பித்து விடுகிறேன். சூரியன் மறையும்போது நான் ஓய்வெடுத்துக் கொள்கிறேன். எனக்கு வேண்டிய நீரை நானே கிணறு வெட்டி எடுத்துக் கொள்கிறேன். எனக்கு வேண்டிய உணவுப் பொருட்களை நானே பயிரிட்டுக் கொள்கிறேன். அரசாங்கமும், அரசனும் வரியும் எனக்கு வேண்டியது இல்லை என சீன தேசத்தில் நாட்டுப்பாடல் ஒன்று பாடப்பட்டு வருகிறது.
இயற்கையான வாழ்வு வாழ்ந்து எளிமையை பின்பற்றினால் என்றென்றும் இன்பம் காணலாம்.