
நாம் போட்டிகள் நிறைந்த உலகிலேயே வாழ்கிறோம். நாம் நம் முன்னேற்றத்தை நோக்கி ஓடுகிறோம். ஆனால் எல்லாவற்றிலும் நிதானம் வேண்டும் என்பதை மறந்து விடுகிறோம்.
நீங்கள் உங்களுக்குப் பிடித்த வேலையில் ஈடுபடும்போது தடையில்லாத சக்தி தேவை. உங்கள் சக்தி முழுவதையும் உங்கள் வேலைக்காக அர்ப்பணிக்கும்போது வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும்.
வேலையிலிருந்து நீங்கள் ஓய்வு பெறலாம். வாழ்க்கையிலிருந்து ஓய்வு இல்லை. உங்களுக்குப் பிடித்ததை தொடர்ந்து செய்யலாம்.
நீங்கள் மற்றவர்களை உங்கள் கார், பணம், வீடியோ விளையாட்டு மூலமாக மட்டும் ஜெயித்து விடமுடியாது. நீங்கள் உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் உடன் மனம் விட்டு ஒருமணி நேரம் பேசினால் கிடைக்கும் சந்தோஷம் அதைவிட அதிகமாகும். மனதும் இலேசாக ஆகும்.
ஆரோக்கியம் என்பது பல மணிநேரம் ஜிம்மில் இருப்பதோ, ஆகாரத்தைக் குறைப்பதோ அல்லது சோர்வடையும் வரை ஒர்க் அவுட் செய்வதிலோ இல்லை. நடைப்பயிற்சி, தோட்ட வேலை, நடனம் ஆடுதல் போன்ற நடவடிக்கைகளிலும் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
பல புத்தகங்கள் உங்களுக்கு நல்ல பதிலைத் தரலாம். ஆனால் இகிகாய் உங்களுக்கு சில கேள்விகளைக் தருகிறது. நீங்கள் எதை அதிகம் விரும்புகிறீர்கள், எதில் அதிக சந்தோஷம் பெறுகிறீர்கள் போன்ற கேள்விகளே அவைகளாகும்.
வாழ்க்கையில் எப்போதும் வேகமும் அவசரமும் வேண்டாம். நமக்கு என்ன தேவையோ அதில் திருப்திபட்டாலே போதுமானது.
வாழ்க்கை என்பது எப்போதும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது மட்டுமல்ல. உங்களுக்குப் பிடித்தவர்களோடு பழகுதல் மற்றும் பிடித்தவற்றை செய்தலுமே வாழ்க்கையாகும்.
கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தை விட நிகழ் காலத்தில் முழுமையாக வாழ்வதே வாழ்க்கை.
ஒரே நேரத்தில் பலவேலைகளைச் செய்வதை விட ஒரு வேலையில் முழு சக்தியையும் செலுத்துவது அதில் முழுமையும் திருப்தியும் கிடைக்கும்.