வாழ்க்கையை சுமுகமாக எடுத்துச்செல்ல வேண்டிய சில விதிமுறைகள்!

Some rules to make life easier!
Lifestyle articles
Published on

வாழ்க்கை என்பது ஏணி போல நம் பயன்பாட்டை பொறுத்து ஏற்றியும் விடும் இறக்கியும் விடும். ஒரே சீராக எந்தவித பிரச்னைகளும், மன உளைச்சலும் இல்லாமல் சுமுகமாக செல்ல யாருக்கும் தீங்கு நினைக்காமல் இருப்பதும், முடிந்தவரை மற்றவருக்கு மனதாலோ, உடலாலோ உதவியாக இருப்பதும் என்று இருந்தாலே போதும் வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும். அடுத்ததாக எதற்காகவும் யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்ளாமல் இருப்பது வாழ்வில் ஏமாற்றத்தை தவிர்த்து நிம்மதியாக இருக்க உதவும்.

மனம் திறந்து பேச, பழக நல்ல நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்வதும் வாழ்க்கை சுமுகமாக செல்ல உதவும். சிறுசிறு பிரச்னைகள் தலை தூக்கும் பொழுது விதி செய்த சதி என்று முடங்கி மூலையில் உட்காராமல் இதுவும் கடந்து போகும் என பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் வாழ்க்கையை ஈசியாக எடுத்துச் செல்வது அவசியம். எந்தப் பிரச்னைக்கும் ஃபுல் ஸ்பீடில் (முழு வேகத்தில்) தீர்வைத் தேடாமல் வேகக் கட்டுப்பாடு வைத்துக் கொள்வது தேவையில்லாத மன உளைச்சலை தவிர்க்க உதவும்.

நினைப்பது ஒன்று நடப்பது வேறாக இருக்கும் பொழுது டேக் இட் ஈசி பாலிசியை கடைப்பிடிப்பது நல்லது. எதற்கும் அளவோடு ஆசைப்படுவது தேவையில்லாத மனச்சிக்கலை தவிர்க்கும். எது கிடைக்கிறதோ அதைக் கொண்டு திருப்தியாக, சந்தோஷமாக வாழ்வதும், தேவையை குறைத்துக் கொள்வதும் மன அமைதிக்கான ரகசிய சூத்திரங்கள்.  மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்ற ரகசியத்தை புரிந்து கொண்டால் வாழ்வில் என்றும் சந்தோசமே நிலைக்கும்.

தன் கையே தனக்கு உதவி என்பது போல் எதற்காகவும், யாரையும் சார்ந்திராமல் சுயமாக சிந்திப்பதும், முடிவெடுப்பதும், செயலாற்றுவதும்  நம் வாழ்க்கையை எந்த ஸ்பீட் பிரேக்கும் இல்லாமல் சுமுகமாக கொண்டு செல்ல உதவும். அத்துடன் வாழ்வில் எவரையும் பகைத்துக் கொள்ளாமல் நட்புடன் பழகுவது நிம்மதியான வாழ்விற்கு அச்சாரமாகும். மற்றவர்களின் கருத்துக்களை காது கொடுத்து கேட்கலாமே தவிர அதனால் வரும் பிளஸ் மைனஸ்களை ஆராய்ந்து தெளிந்து முடிவெடுத்து செயலாற்றுவது நம் நிம்மதியான வாழ்வுக்கு மிகவும் தேவை. அறம் செய விரும்பு, ஆறுவது சினம் போன்ற ஔவையாரின் ஆத்திச்சூடியே இந்த டிஜிட்டல் உலகத்திலும் வாழ்க்கையை சுமுகமாக கொண்டு செல்ல கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிகளாகும்.

நம்முடைய ஏற்ற தாழ்வுக்கு நாம்தான் பொறுப்பேற்று முழு ஈடுபாட்டுடன் உழைத்தாக வேண்டும். அன்று மட்டும் இப்படி நடந்திருந்தால் நான் எங்கேயோ போயிருப்பேன் என்று கற்பனை உலகில் சஞ்சரிப்பதை நிறுத்தி நிஜ வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து வாழ்வது, வாழ்க்கையை சுமுகமாக நல்லபடி கொண்டு செல்ல உதவும். மற்றவர்களுடன் நம்மை ஒப்புநோக்கி நிம்மதி இழப்பதை தவிர்ப்பதும், பிறருடன் பகைமையை வளர்த்துக் கொள்வதும் நம் வாழ்வில் நிம்மதி இழக்கச் செய்யும்.

இதையும் படியுங்கள்:
உறுதியான முடிவுகள்தான் பல வெற்றிகளைக் குவிக்கும்!
Some rules to make life easier!

மொத்தத்தில் வாழ்க்கை சுமுகமாக அமைதியான நீரோடை போன்று  செல்ல வேண்டுமென்றால் கடந்து வந்த பாதையில் சந்தித்த துரோகங்கள், ஏமாற்றங்கள் ஆகியவற்றை மனதிலிருந்து ஒதுக்கி நல்லவற்றையே அசை போடுவதும், நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்க்கொள்வதும், இயற்கையை ரசிப்பதும், கள்ளம் கபடமற்ற குழந்தைகளுடன் நட்புடன் கைகோர்த்து விளையாடுவதும் அவசியம். நம்மால் முடியாத, நம்மை மீறிய செயல்களை பற்றி சிந்தனை செய்வதை ஒதுக்குவதும், அளவோடு ஆசைப்படுவதும், உழைப்புக்கு அஞ்சாமல் இருப்பதும், கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பிறர் குறைகளை தேடுவதையும் நிறுத்தினாலே வாழ்க்கை வாழ்வது ஒரு சுகமான அனுபவமாக இருக்கும்.

சுகமான வாழ்வு பெற வாழ்த்துக்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com