
மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று சொல்கிறோம்; சமயங்களில், எனது மகிழ்ச்சியே போய்விட்டது என்றும் சலித்துக்கொள்கிறோம்.
மகிழ்ச்சி என்றால் என்ன...? மகிழ்ச்சி என்றால்... மகிழ்ச்சியாக இருப்பது...? என்றுதான் உடனே பதில் சொல்லத் தோன்றும்.
மகிழ்ச்சி என்பதே, அவரவர் மனப்பான்மையையும், வாழ்க்கையை அவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதையும் பொருந்தது.
கல்லூரிப் பருவம்வரை பெரும்பான்மையான நமது இளைஞர்கள் ஜாலியாக இருப்பார்கள். வாழ்க்கையைப் பற்றிய கவலைகள் ஏதுமின்றி நண்பர்களுடன் பேசி. அரட்டை அடித்துச் சிரித்துக்கொண்டு, தங்களுக்கு என்ன பிடிக்கிறதோ அவற்றைச் செய்து வாழவே விரும்புவார்கள்.
ஆனால், இந்த ஜாலிதான் வாழ்க்கையின் நிலையான மகிழ்ச்சி என்று அவர்கள் நினைத்துவிட்டால், அதுதான் பிழையாக முடிகிறது.
தனது படிப்பில் வெற்றி கண்டு நல்ல வேலையில் அமர்ந்து முதல் மாத சம்பள பணத்தினை தனது தாயின் கரங்களில் கொடுக்கும் நேரத்தில் கண்களில் ஓரத்தில் நீர் தேங்கி நிற்க அந்த பணத்தினை அவள் வாங்கும் போது மனதில் தோன்றுமே அதைவிட மகிழ்ச்சியாக அப்போது வேறு எதுவும் இருக்க முடியாது.
நெறி தவறாமல், முறையோடு வந்தால்தான் அது மகிழ்ச்சி நெறி தவறிய இன்பம், மகிழ்ச்சி அல்ல;
நாம் பணிபுரியும் இடத்தில் 'தனது கடமைகளைச் செய்வதில் சிறந்தவர்... என்ற பாராட்டு கிடைப்பதில் மகிழ்ச்சி பதவி உயர்வு கிடைப்பதில் மகிழ்ச்சி, சம்பளம் அதிகமாகக் கிடைப்பதில் மகிழ்ச்சி, இல்லறத்தில் மகிழ்ச்சி, நல்ல பிள்ளைகளாய்க் குழந்தைகளை வளர்ப்பதில் மகிழ்ச்சி.
இவையெல்லாம் தனி வாழ்க்கையின் மகிழ்ச்சி நிலைகள். தனி வாழ்வின் உன்னதமான மகிழ்ச்சியே வயதான பெற்றோரின் ஆசிகளோடு, மனைவி குழந்தைகளுடன் மகிழ்வான குடும்பமாக வாழ்வதுதான்.
ஆனால், இத்தகையத் தனிவாழ்வின் மகிழ்ச்சியோடு நிறைவடையது. சுயநலத்தின் எல்லைக்குள் நம்மை கருக்கிவிடவும் வாய்ப்பிருக்கிறது.
குடும்பத்தைத்தாண்டி, சமூக வாழ்வில் பெறும் மகிழ்ச்சிகள் உண்டு என்பதையும் உணரவேண்டும்.
நமது ஆற்றல்களை வளர்த்துக்கொண்டு, அதனால் பெருமை பெறுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி மிகவும் உயர்வானது; உன்னதமானது.
விளையாட்டுத் திடலில் தங்களது ஆற்றல்களை வெளிப்படுத்தும் வீரர்கள்; தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மக்களைத் தங்கள் வயப்படுத்தும் கலைஞர்கள் போன்றோர், ரசிகர்களால் பாராட்டப்படும்போதே ஈடில்லா மகிழ்ச்சியினைப் பெறுகிறார்கள்.
மிகச் சிறந்த மருத்துவராக, வழக்கறிஞராக, பொறியியல் நிபுணராக, அல்லது மக்களுடன் நேரடியாகப் பணிபுரியும் பிற துறைகள் வாயிலாகப் பெருமை பெறும்போதும், நமது செயல்களால் பயன் பெற்ற மக்கள் பாராட்டும்போதும் கிடைக்கும் மகிழ்ச்சி, அனுபவித்துப் பார்க்க வேண்டிய ஒன்று.
இதுதான் மகிழ்ச்சி என்று வரையறை செய்து நாம் சொல்ல முடியாதுதான் ஆனால் உயர்ந்த சிந்தனைகளாலும் செயல்களாலும் வரும் மகிழ்ச்சிக்கு இணை ஏதுமில்லை.