

சங்கடமான சூழ்நிலை என்பது ஒரு நபர் தான் இருக்கும் சூழ்நிலையால் அசௌரியமாகவும், மன அழுத்தமாகவும் அல்லது கூச்சமாகவும் உணரும் ஒரு தருணமாகும். இது எதிர்பாராத, சங்கடமான அல்லது தவறான விதத்தில் கேள்வி கேட்பது போன்ற சம்பவங்களால் ஏற்படலாம். இதனால் பதட்டம் அல்லது பயம் உண்டாகும். இதுபோன்ற சூழ்நிலைகளை நிர்வகிக்க அல்லது சமாளிக்கக் கற்றுக்கொள்வது ஒரு முக்கியமான வாழ்க்கைத் திறனாகும்.
சங்கடமான சூழ்நிலையில் இருந்து வெளிவருவதற்கு முதலில் பதட்டப்படாமல் அமைதியாக இருக்கப் பழகவேண்டும். ஒரு நிமிடம் அமைதியாக இருந்து சுற்றி நடக்கும் விஷயங்களை உற்று கவனிக்கவேண்டும். அடுத்ததாக என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம். நமக்கு சங்கடமாக உணரவைக்கும் காரணத்தைக் கண்டறிந்து, அது உண்மையிலேயே பெரிய பிரச்சனையா அல்லது சிறிய ஒன்றா என்பதை முடிவு செய்யவேண்டும்.
சில சமயங்களில் சங்கடத்தை நகைச்சுவையாக கையாள்வது உதவும். இது ஒரு பதட்டமான சூழ்நிலையை எளிதாக்குவதுடன் பாதி பிரச்சனையை தீர்த்துவிடும். நமக்கு அதிக சங்கடத்தைத் தந்து நெளிய வைக்கும் சூழ்நிலையாக இருந்தால், ஒரு குறிப்பிட்ட காரணத்தைச் சொல்லி அந்த இடத்தை விட்டு வெளியேறுவது சிறந்த வழியாகும். முக்கியமான வேலை ஒன்று இருக்கிறது நான் செல்லவேண்டும் என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடலாம்.
சங்கடமான சூழ்நிலையில் இருந்து வெளியேறுவதற்கு நம் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் ஒரு குறியீட்டு வார்த்தையை பயன்படுத்தலாம். இந்த வார்த்தையை நாம் சொல்லும் பொழுது, அவர்கள் நம்மை அந்த சூழ்நிலையில் இருந்து வெளியேற உதவுவார்கள்.
சில சமயங்களில் நம் கவனத்தை வேறு திசையில் திருப்புவதும் சங்கடமான உணர்வைக் குறைக்க உதவும். மொபைல் போனை பார்ப்பது அல்லது அருகில் உள்ள நம் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் பேச்சுக் கொடுப்பது போன்றவை பலன் தரும்.
சங்கடமான சூழ்நிலைகள் நம்மை மிகவும் மோசமாக உணர வைக்கும். அதைக் கடந்து வந்த பின்பும் அதைப் பற்றிய நினைவுகள் மனதை விட்டு அகலாமல் இருந்துவிடும். ஆனால் சங்கடமான சூழ்நிலையில் நம் கோபத்தையோ வெறுப்பையோ வெளிப்படுத்தாமல் அமைதியாக கடந்து செல்வது மன அமைதிக்கு வழிவகுக்கும்.
ஒரு புன்னகையோ, லேசான நகைச்சுவை உணர்வோ சூழ்நிலையை எளிதாக்க உதவும். ஒவ்வொரு சங்கடமான தருணமும் தனிப்பட்ட வளர்ச்சிக்கும், அடுத்த முறை சிறப்பாக அதனைைக் கையாளவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்பதை நினைவில் கொண்டாலே போதும் சங்கடமான சூழ்நிலையில் இருந்து எளிதில் வெளிவந்துவிடலாம்.
நான் சொல்வது சரிதானே நண்பர்களே!