
அமெரிக்கப் பெருநாட்டின் வெள்ளை மாளிகை வெண்புறா என பாராட்டப்படுகின்ற ஆபிரகாம் லிங்கன் தன் குழந்தையை பள்ளியில் சேர்த்து விட்டு மாளிக்கைக்குத் திரும்பிய கையோடு தனது மகன் படிக்கும் பள்ளியின்ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதுகின்றார். தனது மகன் எவ்வாறு வளர்க்கப்பட வேண்டும் என ஒரு சாதாரணத் தந்தையின் ஆசையை வெளிப்படுத்திய அந்தக் கடிதம். இன்றைக்கும் அருங்காட்சியகத்திலே கண்ணாடிப் பேழைக்குள் பாதுகாப்பாக பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதோ அந்தக் கடிதம். கடிதத்தை படிப்பதற்குள் அதிர்ச்சியைத் தருகின்ற செய்தியை தெரிந்து கொள்ளுங்கள்.
ஆபிரகாம் லிங்கன் ஒரு சாதாரண தச்சுத் தொழிலாளியின் மகன். மனநோயால் தாக்கப்பட்ட மனநோயாளி. உறவுகள் எல்லாம் "பைத்தியம்" என்று நகையாடியதும் உண்டு. அவரது திருமண நாளன்று காணாமல்போய்விட்டாராம். பின்னர் தேடிக்கண்டுபிடித்து திருமணம் நடந்தேறியதாம். சொன்ன வார்த்தையையே திரும்பத் திரும்ப அர்த்தமில்லாது சொல்லிக்கொண்டே அங்கும் இங்கும் திரிவாராம்.
சில நேரங்களில் தற்கொலை செய்து கொள்ள முயன்றிருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. எப்போதும் ஒரு கத்தியை தனது சொக்காய் பைக்குள் வைத்திருப்பாராம். இனி இவர் எதற்கும் பயன்படமாட்டார், தீராத மன நோயாளியாகிவிட்டார் என்று எல்லோரும் நினைத்தபோதுதான் அவரது வாழ்வில் கவ்வியிருந்த இருள் ஒரு நொடியிலே மறைந்து ஒளிவீசும் நட்சத்திரமாக பிரகாசிக்கத் தொடங்கியது. என டாக்டர் கார்ல் மெனிங்கர் என்ற மன இயல் ஆய்வாளரது அறிக்கை தெரிவிக்கிறது. லிங்கனைப் பற்றி மூன்றாண்டுகள் ஆய்வு செய்த அறிவிப்பு இது.
உலகத்தின் பார்வைக்கு துருவநட்சத்திரமாக ஒளிவீசிய வரலாற்று நாயகர்களை அவர்களது வாழ்வியலை ஆய்வுகள் செய்து பார்த்த உலகளாவிய ஆய்வாளர்கள் அத்துணைப் பேரும் ஒரே ஒரு தீர்ப்பைத்தான் பதிந்து வைத்துள்ளனர். "மிகவும் இருண்டு விடுகின்ற போது நட்சத்திரங்கள் கண்விழிக்கின்றன" என்று.
நாளைய உலகத்தின் வரலாறுகளை புனிதமாக்கிட இன்றைக்கு தளிராக இருக்கும் கண்மணிகளுக்கு லிங்கனது கடிதம் ஒரு விடிவெள்ளி. இருட்டிலேயிருந்து விழித்தெழுவதற்கு அறிவின் மெழுகுத்திரி. இதனை சரியான பருவத்தில் ஏற்றி ஒளி விளக்கைக் கொடுக்கின்ற கடமை இன்றைய தந்தைமார்கள் தலைமுறையின் முதற்கடமை. சத்தியப் பிரமாணம் செய்து இத்தீபத்தை அவர்கள் ஏற்றி வெற்றிநடை போடட்டும்.
கி.பி. இரண்டாயிரத்தில் இந்த வையகத்தில் காழ்ப்புகள் - கசப்புகள் பொறாமை ஒருவரை ஒருவர் மதத்தால், மொழியால், இனத்தால், நாட்டால் குண்டு மழை பொழிந்து வீழ்த்துகின்ற தீய எண்ணங்கள் சவக் குழிக்குள் புதைந்துபோகும் என்பது சத்தியம். நாளும் கோளும் பார்க்காது இன்றைக்கே இப்புனித வேள்வி மலரட்டும்.
மனித இயல்பின் முத்தான தத்துவமே புகழ்ச்சிதான். வாழ்வில் நாம் மற்றவர்களை மனதார புகழக் கற்றுக்கொள்ள வேண்டும். மனித வளர்ச்சிக்கு ஒரு காயகல்பம் நீங்கள் மகிழ்வாகப் பாராட்டுகின்ற போது புகழ்கின்றபோது அவர்களது சிறப்பும் மேன்மையும் உங்களின் சொத்தாகிவிடுகிறது.
வெற்றியானாலும் தோல்வியானாலும் மனதின் ஆற்றலை பொறுத்து அமைவதைவிட மனோபாவ நிலைகளை பொருத்தே அது அமையும்.