
உண்மையில் மனிதர் எவரையும் கடினமானவர், எளிதானவர் என்று இனம் பிரிக்க முடியாது. நீங்கள் கடினமானவராக நடந்து கொள்கிறீர்கள் என்றால், சந்தோஷமற்று இருக்கிறீர்கள் என்று அர்த்தம். நான் முதலாளி, அவன் தொழிலாளி என்று தேவையில்லாத அடையாளங்களை உருவாக்கிக் கொள்வதால் உள்ளே அகங்காரம் வளர்கிறது. சந்தேகம் பிறக்கிறது. சந்தோஷம் தொலைக்கிறது. ஒரு குறிப்பிட்ட நபர் சந்தோஷமாக இருக்கும் போது, அவருடன் பணிபுரிவது மிகச் சுலபமாக இருக்கும். அதுவே அவர் சந்தோஷமற்று இருக்கும்போது, இணைந்து செயல்படுவது கஷ்டம். மற்றவரைப் துச்சமாக பார்க்கும் உங்கள் பழக்கத்தை முதலில் விடுங்கள்.
ஒரு காட்டில் நான்கு எறும்புகள் நடந்து போய்க் கொண்டிருந்தன. எதிரில் ஒரு யானை வந்தது. அதைப் பார்த்ததும் " டேய்!, என்னடா இவன் நம் வழியில் வருகிறான். கொன்றுவிட லாமா இவனை" என்றது ஒரு எறும்பு. " சீ சீ இவன் சிறுவனாக இருக்கிறான் அவன் 4 கால்களையும் உடைத்துப் போடலாம்" என்றது இன்னொரு எறும்பு. "அதெல்லாம் எதற்கு. அவனைத் தூக்கி தூர எறிந்து நாம் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருக்கலாம்" என்றது மூன்றாவது எறும்பு. நான்காவது எறும்பு யானையை மேலும் கீழும் பார்த்துவிட்டு" இது நியாயமே அல்ல. நாம் நாலுபேர் இருக்கிறோம். அவன் ஒருவரைத் தாக்குவது சரியல்ல. அவனை மன்னித்து நகர்ந்து வாருங்கள்" என்றது.
நாம் நினைப்பதுதான் சரி என்ற அகங்காரம் உள்ளே வந்துவிட்டால் இந்த எறும்புகளைப் போலத்தான் யானைகளைக் கூட துச்சமாக பார்ப்பீர்கள். விளையாட்டோ, வியாபாரமோ, அலுவலகமோ எந்த துறையானாலும் அங்கு பலர் ஒன்று சேர்ந்துதான் செயலாற்ற வேண்டியிருக்கிறது. மொத்த குழுவும் முழுத்திறமையுடன் செயல்பட வேண்டுமென்றால் , ஒவ்வொரு தனி நபரிடமும் அமைதியும், சந்தோஷமும் குடிகொண்டிருக்க. வேண்டும். அப்போதுதான் மகிழ்ச்சி வேரூன்றி இருக்கும்.
எந்த துறையானாலும் போட்டிகள் மிகுந்துவிட்ட இந்நாளில் எதிர்பாராமல் வந்து தாக்கும் பிரச்னைகளே பல இருக்கும் போது, சக மனிதர்களையே பிரச்னையாக்கிக் கொள்வது முட்டாள்தனம் அல்லவா?
ஒவ்வொரு நிறுவனத்திலும் அங்கு இருப்பவர்களைக் குறைத்து மதிப்பிடாமல் அவர்களுடைய மேம்பாட்டிற்காக சிறிது நேரமாவது ஒதுக்க வேண்டும். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். நாம் விரும்பியதை அடைய மற்றவர்கள் ஒத்துழைப்பு மிக அவசியம். எனவே அவர்கள் உங்களிடம் நேசம் கொள்ளும்படி நீங்கள் நடந்துகொள்ள வேண்டும். அப்படியொரு சூழ்நிலை அமைக்கப்பட்டு விட்டால் உங்கள் கீழ் பணிபுரிகிறார்கள் முழுத்திறமையுடன் செயல்படுவார்கள். நீங்கள் கடினமாக நடந்துகொண்டு வேலை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. இது நீங்கள் அறிய வேண்டிய ரகசியமாகும்.