
தொழிற்சாலை ஒன்றில், தயாரிக்கப்பட்டப் பொருட்களை வைக்கும் குளிர்ப்பதன அறையில் சிறு பழுது. அதற்குள் நுழைந்து சீர் செய்துகொண்டிருந்தார் அலுவலர் ஒருவர். நேரம் கடந்தது கொண்டிருந்தது.
அலுவல் நேரம் முடிந்ததும் எல்லோரும் விளக்குகளை யெல்லாம் அணைத்துவிட்டு, தொழிற்சாலையைப் பூட்டி விட்டு சென்றுவிட்டார்கள். தன்னை மறந்து வேலையில் ஆழ்ந்திருந்த அவர் உள்ளே இருந்ததை யாரும் எண்ணிப்பார்க்கவில்லை.
உள்ளே சிக்கிக் கொண்டவருக்கு, வெளிச்சமும் காற்றும் கொஞ்சமும் இல்லை. கைபேசியின் இணைப்பும் வேலை செய்யவில்லை. நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. இனி அடுத்த நாள் வந்துதான் தொழிற்சாலையைத் திறப்பார்கள்.
'எப்படி முழு இரவைக் கழிப்பது...? வீட்டில் கவலைப்படுவார்களே...' என்றெல்லாம் எண்ணி சோர்ந்திருந்த நேரத்தில், தொலைவில் தெரிந்த 'டார்ச் லைட்' வெளிச்சமும், 'சார்...சார்...' என்று காவலாளி அழைக்கும் குரலும் கேட்டபோது, உயிர் வந்ததைப்போல் இருந்தது.
'எப்படி சார் உள்ளேயே தங்கிட்டீங்க...?' என்று கேட்ட காவலாளிக்கு பதில் சொல்லாமல், இவர் கேட்டார்; 'நான் உள்ளே சிக்கிக் கொண்டதை உங்களுக்கு யார் சொன்னது.....?"
'யாரும் சொல்லவில்லை சார்...' என்று சொன்னக் காவலாளி, தொடர்ந்து சொன்னதுதான் வியப்பு!
“சார்.... காலையில் தினமும் அலுவலகத்தில் நுழையும்போது, எல்லோருக்கு சல்யூட் வைப்பது போல்தான் உங்களுக்கும் வைப்பேன். யாரும் என்னைப் பொருட்படுத்துவதுகூட கிடையாது. ஆனால் நான் சல்யூட் வைத்ததும், நீங்கள் சிரித்துக்கொண்டே ஒரு நாள் 'ஹலோ' என்பீர்கள்; ஒரு நாள் 'எப்படிப்பா இருக்கிற...?' என்பீர்கள்; ஒரு நாள் 'ஹாய்' என்பீர்கள்.
அதேபோல், தினமும் திரும்பும்போதும் நான் சல்யூட் வைத்ததும், "பை பை.' என்று கையாட்டிவிட்டுப் போவீர்கள்; அல்லது 'ஹாய் தாங்க் யூ...' என்று சொல்லிவிட்டுப் போவீர்கள்.
'இன்று காலையும் 'ஹலோ...' என்று சிரித்துவிட்டு உள்ளே வந்தீர்கள். மாலை நீங்கள் வெளிவரவில்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும். உங்களுக்கு என்னதான் ஆனது என்று சந்தேகப்பட்டு தேடிக்கொண்டு வந்தேன்.'
எல்லாருக்கும் எல்லா இடத்திலும் ஓடிப்போய் அவர்கள் வேலையை நாம் செய்ய முடியாதுதான். ஆனால், நம்மைவிடக் கீழ்நிலை அலுவலரைப் பார்க்கையில், மலர்ந்த முகத்துடன் ஒரு புன்னகை போதும் அவர்கள் வேலையை அவர்கள் இன்னும் சிறப்பாக செய்வார்கள்!
தனியார் நிறுவனங்கள் சிலவற்றில், சில மாதங்களுக்கு ஒரு முறை ஒரு நாள் அல்லது இருநாட்கள் எல்லா ஊழியர்களுக்கும் சுற்றுலா ஏற்பாடு செய்வதன் காரணம் அதுதான்.
அலுவலகப் பதவியில் உயர்வு தாழ்வு பார்க்காமல் எல்லோரும் சிரித்து, விளையாடிப் பழகுவதற்கான வாய்ப்பு அது. அந்தச்சூழல் மன இறுக்கத்தைத் தளர்த்தும்.
என் வேலை.... உன் வேலை...' என்று பார்க்காமல், 'என் வேலை நேரம் முடிந்தது.....' என்று எழுந்துபோகாமல், 'வேலையை முடிக்க வேண்டும்...' என்பதை மட்டுமே தாரக மந்திரமாக வைத்து, தனியார் நிறுவங்களால் வேலை வாங்க முடிவதன் காரணம் அதுதான்.
'இது என் வேலை இல்லை....' என்ற எண்ணம், கூம்பிய மனத்தின் வெளிப்பாடு.
'வேலை முடியவேண்டும்; அதற்கான என் பங்களிப்பினை முழுமையாகத் தருவேன்....' என்ற எண்ணம், மலர்ந்த மனத்தின் வெளிப்பாடு.
பெரியவர், சிறியவர் என்று பார்க்காமல், உயர் நிலை, இடை நிலை, கடை நிலை என்றெல்லாம் எண்ணாமல் மனிதரை மனிதராகப் பார்ப்பதும் மலர்ந்த மனத்தின் வெளிப்பாடுதானே....?
கீழ்நிலைப் பணியாளர்களை மதிப்பது; அவர்களைப் பார்த்து புன்னகைப்பது; மனமுவந்து அவர்களுக்கு உதவி செய்வது; அவர்களுடன் இணைந்து வேலைகளைச் செய்வது; போன்றவை நமது ஆளுமைத் திறனைக் கூட்டுகின்றன என்னும் உண்மையை நாம் உணரத்தான் வேண்டும்.