
மகிழ்ச்சி ஒவ்வொரு மனிதருக்கும் எண்ணங்களினால் வெளிப்படுகிறது. மகிழ்ச்சி என்பது பொருட்களில் இல்லை. நம் மனதில்தான் இருக்கிறது. ஒலிக்கின்ற அருவியில், தழுவுகின்ற தென்றலில், உதிக்கின்ற சூரியனில், மலர்ந்திருக்கும் பூக்களில், ஒளிர்கின்ற சந்திரனில், புலர்கின்ற பொழுதினில் இப்படி எங்கும் எதிலும் மகிழ்ச்சி பரவிக்கிடக்கிறது.
நன்றாக இருக்கிறோம். நல்லதுதான் நடக்கிறது கசப்பான சம்பவங்களும் நல்லவற்றை அடையாளம் காட்டவே நடந்தன என வாழ்க்கையில் நம்பிக்கை கொண்டால் மகிழ்ச்சியின் கதவுகள் தானாக திறக்கும்.
மனிதனாக பிறந்ததற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். இயற்கை அனைவர்க்கும் பிரச்னைகளைத் தீர்க்கும் சக்தியைக் கொடுத்திருக்கிறது. பிரச்னைகள் தீர்ந்தால் மகிழ்ச்சி தானாகவே வரும். மனித மனமே அவனை வாழவைக்கும் முக்கிய அம்சமாக இருக்கிறது. மன அழுத்தம் மன அதிர்ச்சி இல்லாமல் எல்லா நிகழ்வு களையும் ஏற்றுக் கொள்ளும்போது மனித மூளையில் எண்டார்ஃபின் மற்றும் மெலடோனின் அதிகமாகும்.
வாழ்க்கை ஒரு இனிய பயணம். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க முடியும். வாழக்கை. பந்தயம் அல்ல. இனிய பயணம். இனிய பயணத்திற்கு நல்ல எண்ணங்கள் தேவை.
இந்த உலகம் ஒரு கண்ணாடி. நாம் எப்படி இருக்கிறோம் என்பதை பிரதிபலிக்கிறது. இந்த பிரதிபலிப்பை மகிழ்ச்சியான செயல்பாடுகளே முடிவு செய்கின்றன.
பிறருடன் பகிர்ந்து கொள்வதில்தான் வாழ்வின் சுவை அதிகரிக்கும். மகிழ்ச்சியாளர்கள் நீண்ட காலம் வாழ்ந்தால் அந்த நாடே வளம் பெறும்.
இடுக்கண் வருங்கால் நகுக. இறைவன் ஒரு கதவை சாத்தினால் இன்னொரு கதவைத் திறப்பான் என்று சொல்வார்கள். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. துன்பம் நம்மைப் புடம் போடுகிறது. புல்லாங்குழல் இசை எழுப்ப வேண்டுமென்றால் மூங்கில் குழலில் துவாரம் போடவேண்டும். சந்தனம் அரைக்க அரைக்கக்தான் மணம் தரும். துன்பமும் இன்பத்திற்கு ஒரு வழிதான்.