ஒருவரது வாழ்க்கையைத் திருப்பிப் போடும் அந்த ஒரு வார்த்தை!
ஐந்து பெண்கள் சேர்ந்து ஆரம்பம் முதலே ஒரே பள்ளியில் படித்து மருத்துவராக வேண்டும் என்ற ஆசையில், அதற்கான பரீட்சைகளை எல்லாம் எழுதி இருந்தார்கள். அதில் ஒரு பெண்ணுக்கு மட்டும் மருத்துவ சீட் கிடைத்திருந்தது. மற்றவர்களுக்கு கிடைக்காததால், கிடைத்த பெண்ணுக்கும் யாரும் வாழ்த்து கூறவில்லை. அனைவரும் ஒதுங்கிவிட்டார்கள்.
வெற்றி பெற்றவர் தோழிகளிடமிருந்து பாராட்டு வரவில்லையே என்ற ஏக்கத்தில் தவித்துக் கொண்டிருந்தார். மேலும் அவர்களுக்கும் கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நமக்கு மட்டும் கிடைத்தும் இதை கொண்டாட முடியாமல் போய்விட்டதே என்றும் அவள் நினைத்தாள்.
அந்த நேரத்தில் கால்கள் இரண்டும் நடக்க முடியாத ஒரு பெண் அவர்கள் வீட்டின் கீழ் வீட்டில் இருப்பவர், மாடி ஏறிச்சென்று அந்தப் பெண்ணின் கையை பிடித்து அன்புடன் பாராட்டை பகிர்ந்து கொண்டார்.
அதை சற்றும் எதிர்பாராத அந்த பெண்ணும் ஏன் அக்கா இவ்வளவு சிரமப்பட்டு மேலே ஏறி வந்துதான் என்னை பாராட்ட வேண்டுமா? கீழே நான் வரும்போது என்னை பாராட்டி வாழ்த்து சொல்லி இருக்கலாம். இல்லையென்றால் இந்த ஃபோனில் ஒரு வார்த்தை கூறி இருக்கலாமே என்று கேட்டாள்.
அதற்கு இந்த பெண் அப்படியெல்லாம் ஒன்றும் சிரமம் இல்லை. உனது தந்தை சமீபத்தில்தான் இறந்தார். அப்பொழுது உனக்கு சரியான பரிட்சை நேரம் வேறு. அந்த நேரத்திலும் மனதை கட்டுப்படுத்திக் கொண்டு நன்றாக படித்து இன்று உனக்கு மருத்துவம் படிப்பதற்கு இடம் கிடைத்திருக்கிறது என்பதை கேள்விப்பட்டதும் எனக்குப் பெருமை பிடிபடவில்லை. ஆதலால் ஒருமுறை உன்னை நேராக வந்து வாழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் வந்தேன். இன்னும் நன்றாக படித்து டாக்டர் ஆகி நல்ல சேவை செய்து மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் என்று கூறிவிட்டு வெளியில் சென்றார்.
அதைப் பார்த்துக்கொண்டிருந்த அந்த பெண்ணின் அம்மா இப்படி உண்மையான திறந்த மனதுடன் ஒரு சிலர் பாராட்டினால் போதும். உண்மையான அன்பு என்பது இதுதான். உன்னை நன்றாக புரிந்துகொண்டு பாராட்டிருக்கிறார் பார். மற்ற கவலைகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு படிப்பதில் கவனம் செலுத்து, காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினார். அதன் பிறகு அந்தப் பெண்ணின் முகத்தில் மலர்ந்த மகிழ்ச்சியை காணவேண்டுமே. அதுதான் பாராட்டுக்கு உள்ள தனிச்சிறப்பு.
மற்றவர்கள் கஷ்டப்பட்டு எதை செய்து முன்னேறினாலும் அவர்களை திறந்த மனதுடன் அனைவரும் பாராட்டினால், அது அவர்களின் மற்ற சுமைகளை இறக்கிவைத்து மென்மேலும் வளர நல்ல ஊக்க சக்தியைத்தரும். ஆதலால் நாமும் மற்றவர்களைப் பாராட்டுவோம். நம்மையும் மற்றவர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வோம்.