

எல்லா ஆறுகளிலும் பெருகிவரும் தண்ணீர் முடிவில் கடலில் போய்க் கலக்கிறது. கடல் அமைதியில்லாமல் ததும்பி, வெறியுடன் கரைகடந்து வெளியில் வருவதில்லை. மாபெரும் சமுத்திரம், எண்ணற்ற ஆறுகளில் இருந்து வரும் தண்ணீரை தன்னுள் தாங்கிக் கொண்டு எப்போதும் ஒன்று போலவே அமைதியுடனும் கம்பீரத்துடனும் காட்சி தருகிறது.
இதேபோன்று மனம் என்ற கடலில், ஆசைகள், ஏக்கங்கள் போன்றவை ஆறுகள்போல வந்து கலக்க முயற்சித்தாலும், சமுத்திரத்தைப் போன்று மனத்தை அமைதியாகவும், கலங்காமலும் இருக்கும்படியாக நாம் வைத்துக்கொள்ள வேண்டும்.
தொட்டியில் விடப்பட்டுள்ள ஒரு சிறிய மீன், தொட்டியிலுள்ள தண்ணீரைக் கலக்கிவிடுகிறது. ஆனால், சமுத்திரத்திலுள்ள தண்ணீரை ஆயிரக்கணக்கான பெரிய திமிங்கிலங்களால் கூட கலக்க முடிவதில்லை. சாதாரண மனிதர்கள், தொட்டியிலுள்ள தண்ணீரைப் போன்றும், முற்றும் கற்றுணர்ந்த மகான்கள் சமுத்திரத்தைப் போன்றும் காட்சி தருகிறார்கள்.
சாதாரண மனிதனை மிக அற்பமான விஷயங்கள்கூட, நன்கு கலவரப்படுத்தி ஆட்டிவைத்து விடுகின்றன. தம் சுயநலத்தைக் கருதாது உலக மேன்மைக்காகப் பாடுபடும் பெரிய மனிதர்களைப் பெரிய நிகழ்ச்சிகள் கூட சற்றும் கலக்குவதில்லை.
மரங்கள் தூங்க வேண்டுமென்பதற்காகக் காற்று தன் கடமையைச் செய்யாமல் ஓய்ந்து விடுவதில்லை. நாளை பெரிய அழிவு ஏற்படக்கூடாது என்பதற்காகச் சூரியன் நாளைக்கு உதிக்காமல் இருந்து விடுவதில்லை. ஆகையால், நடக்கப்போகும் ஒரு நிகழ்ச்சி, நாம் வருத்தப்பட்டாலும், வருத்தப்படாவிட்டாலும் கட்டாயம் நடக்கத்தான் போகிறது. நடக்கப்போகும் அந்த நிகழ்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
அப்படியிருக்கும்போது, அவற்றைக் குறித்து ஒருவன் வருத்தப்பட்டுக் கொண்டு, தன்னைக் கலக்கிக் கொள்வதில் அர்த்தம் இல்லை. ஓட்டைகள் நிறைந்த ஓலைக் குடிசை ஒன்றிலிருந்து மழை கொட்டும்போது கூரையிலுள்ள ஓட்டைகளின் வழியாக தண்ணீர் குடிசை முழுவதும் வீழ்ந்து குடிசையை நோக்கி வருகிறது. அந்த ஓலைக் குடிசையைப் போன்று, ஒருவன் தன் மனத்தை வைத்திருந்தால், பொறாமை, காமம், ஆசை போன்ற கெட்டவை உள்ளத்தில் புகுந்து மூழ்க வைத்து அழித்தேவிடும். வேண்டாத கெட்ட குணங்களைத் தம் மனதிற்குள் புகுந்து விடாதபடி, மிக ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
வானை முட்டும் மலை, கொடூரமாகக் கர்ஜித்துக் கொண்டு தாக்கும் இடியையும், சுழன்று வீசும் புயல் காற்றையும், கொட்டும் மழையையும் கண்டு சிறிது கூட அசைவதில்லை. அவற்றைக் கண்டு பயந்து நடுங்கி அதிர்ந்துபோய் விடுவதில்லை. அதேபோன்று முற்றும் கற்றுணர்ந்த பெரியவர்கள், மலையைப் போன்று கம்பீரமாகக் காட்சி தருவார்கள். பிறரின் குற்றச்சாட்டுகள், பழிச்சொற்கள், புகழ்ச்சிச் சொற்கள் போன்றவை அவர்களிடம் எவ்விதமான சலனத்தையும் ஏற்படுத்துவதில்லை.
ஒருவன், ஆயிரக்கணக்கான போர்களில் வெற்றி மாலை சூடிய வனாக இருக்கலாம். ஆனால், தன் மனத்தை வென்றவன்தான் மிகப் பெரிய வீரன். மனம் சொல்கிறபடி ஆடாமல், தான் விரும்பும் நல்ல எண்ண ஓட்டங்களையே மனத்தில் நிலைநிறுத்தச் செய்பவனால்தான். வாழ்க்கையில் முன்னேற முடியும்.