
நாம் எந்த வேலையை செய்தாலும் முழு மனதோடு அதில் ஈடுபட்டு செய்தால்தான் அந்த வேலை முழுமை பெறும். அதைத் தவிர அந்த வேலையில் உள்ள நுணுக் கங்களையும் சிறந்த முறையில் கற்று தெரிந்துகொள்ள முடியும்.
ஒரு 'சிற்பி' தனது சிலை வடிக்கும் திறமையால் நாட்டில் சிறந்து விளங்கினார். ஒருநாள் நாட்டின் மன்னர் அந்த சிற்பியை அழைத்தார்.
உங்களுக்கு வயது சுமார் 95 ஆகிறது. இந்த வயதிலும் நீங்கள் நாட்டின் சிறந்த சிற்பியாக விளங்குகிறீர்கள், சிலை வடிக்கும் திறமை உங்களுக்கு பிறவியிலேயே உருவானதா? அல்லது நீங்கள் ஏதேனும் சில நுணுக்கமான யுக்திகளை பயன்படுத்தி சிறப்பான சிற்பி என்னும் வெற்றி வாழ்க்கையை அடைந்தீர்களா?" எனக் கேட்டார் மன்னர்.
அதைக்கேட்ட சிற்பி அமைதியாகப் பதில் தந்தார்.
"எனது வெற்றிக்குக் காரணம் ஒன்றே ஒன்றுதான். மிகவும் கவனமாக எனது வேலையைச் செய்வதுதான் எனது சிறப்புக்குக் காரணம். நான் சுமார் 15 வயதில் சிலை வடிக்கும் வேலையைப் பழக ஆரம்பித்தேன். சிலையை உருவாக்கும்போது எனது கையிலுள்ள உளி மற்றும் கல் மீதுதான் கவனம் செலுத்துவேன்.
வேறு எந்த விதத்திலும் ‘கவனச்சிதறல் ஏற்படாமல் பார்த்துக்கொள்வேன். அப்போது நான் எதைப் பற்றியும் கவலைப்படவும் மாட்டேன். இப்போது மிகச்சிறந்த சிலையை உருவாக்குவது என்பது எனது வாழ்க்கையின் முக்கிய நோக்கமாக மாறிவிட்டது. இதுவே, எனக்கு மகிழ்ச்சியானதாகவும், விருப்பமானதாகவும் மனநிறைவைத் தருவதாகவும் அமைந்துவிட்டது. எப்போதும் எனது வேலையில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். இதுவே, எனது வெற்றிக்குக் காரணம்" என்றார் சிற்பி.
இது கதையல்ல. வாழ்க்கை வெற்றிக்கான வழிமுறை.
எனவே, உங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்குவதற்குத் தகுந்த துறையை இளம்வயதிலேயே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் துறையில் வெற்றி பெறுவதற்காக ஒவ்வொருநாளும் நேரம் ஒதுக்குங்கள். விடுமுறைக் காலங்களில்கூட வெற்றிக்கு வழிவகுக்கும் செயல்களில் ஈடுபடுங்கள். அப்போதுதான் விடுமுறைக் காலங்கள்கூட வெற்றிக்கான காலமாக மாறும்.
மேலும் ஏற்றுக்கொண்ட வேலையை மிகவும் நேசித்து, கவனம் சிதறாமல் அதில் நம்மால் ஆன புதுமையை புகுத்த முற்பட்டால் அந்தத் துறையில் நம்மை விட வேறு யாரும் உயர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள்.