
பணமோ, பதவியோ, அழகோ, அறிவோ ஆண்டவன் ஒன்றாய் அனைவருக்கும் கொடுத்ததில்லை. ஐந்து விரலும் ஒன்றாய் அமைவதில்லை. அதுபோலவே மனிதர் வாழ்வும். எல்லாவற்றையும் விஷயத்திலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் மனிதருக்குள். ஆனால் அனைவருக்கும் ஒன்றாய் ஆண்டவன் கொடுத்தது நேரம் மட்டுமே. அரசன் முதல் ஆண்டி வரை அனைவருக்கும் ஒன்றாய் கிடைத்திருப்பது ஒரு நாளின் 24 மணி நேரம்..
அந்த நாளின் ஒவ்வொரு மணித்துளியும் நாம் எவ்வாறு உபயோகப்படுத்துகிறோம் என்பதில்தான் நமக்குள் வேறுபாடு இருக்கிறது. கெட்டிக்காரர்கள் தங்கள் நேரத்தை சரியாக திட்டமிட்டு வாழ்க்கையில் தங்களை முன்னேற்றிக் கொள்வர். ஆனால் எப்பொழுதும் நேரத்தை மதிக்காமல் மனம் போனபடி வாழ்பவர்கள்.. வாழ்க்கையில் பெரிதாய் எதுவும் சாதிக்க முடியாமல் ... எனக்கு நேரம் சரியில்லை என்று பழியை நேரத்தின் மேல் போடுவார்கள்.
நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கெடுப்பவர்கள் நாட்டை கெடுப்பதுடன் தானும் கெட்டார் என்ற கவியின் வரிகளுக்கேற்ப நேரத்தை வீணாக கழித்துவிட்டு, நேரமில்லை என்று புலம்புபவர்கள் பலர் உண்டு. டைம் மேனேஜ்மென்ட் என்பது மிகவும் முக்கியம்.. சரியானபடி திட்டமிட்டு பயன்படுத்தினால் 24 மணி நேரத்தில் எத்தனையோ வேலைகளை எளிதாக முடிக்கலாம். நேரமில்லை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.
வாழ்க்கையில் முன்னேறியவர்கள் சரிதத்தை கேட்டால் அவர்கள் அகராதியில் "நேரமில்லை" என்ற சொல்லே இருக்காது. திட்டமிட்டு பயனுள்ளதாய் பொழுதை கழித்தால், ஒவ்வொரு மணித்துளியும் உபயோகமானதே. நேரத்தை சரியானபடி உபயோகமாய் பயன்படுத்த, திட்டமிடல் மிகவும் அவசியம்.
அந்தக் காலத்தில் என் ஆச்சி சொல்லுவாள்… "வேலையறிஞ்சு வேலை பார்த்தால் விரல் மடக்க நேரமில்லை" ன்னு… எனவே திட்டமிட்டு நேரத்தை விரயமாக்காமல் பயன்படுத்தினால் நேரம் போதவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை.
வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்கள் நேரத்தை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். "காலம் கண் போன்றது நேரம் பொன் போன்றது". வாழ்க்கையில் வெற்றிபெற இதை என்றும் மறத்தலாகாது.