நம் நிம்மதி நம்மிடமே: மகிழ்ச்சிக்கான வழி நமது கையில்தான்!

Motivational articles
Our peace lies within us...
Published on

குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் தற்காலத்தில் இருக்கும் ஒரு பிரச்னை மன அழுத்தமாகும். மாறிவரும் வாழ்க்கைச் சூழல், நகரமயமாக்கல், தனிக் குடும்பச் சூழ்நிலை, உடல் பிரச்னைகள், உறவுகளில் ஏற்படும் நெருக்கடிகள் என வாழ்க்கையில் மன அழுத்தம்  ஏற்பட நமக்கு பல காரணங்கள் இருக்கின்றன.

நமக்கு ஏற்படும் இந்த மன அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டுவர நம்மால் முடியும். ஆனால் அதற்கான தீவிரமான முயற்சிகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தம் நாம் அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்படுவதை தவிர்க்க வைக்கிறது. நம்மை அதிக நேரம் தூங்கச்சொல்லி  சும்மா இருக்க வைக்கிறது. மனதினை அமைதிப்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

நமது  ஒட்டுமொத்த மன நலனுக்காக தினமும் சில நிமிடங்கள் தியானப் பயிற்சியில் ஈடுபடலாம். தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் மிதமான சூரிய ஒளியில் ஒரு மணிநேரம்  நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

தினமும் காலையில் நம்மால் செய்யப்படும் யோகாப் பயிற்சி நமது மனதை நாள் முழுவதும் அமைத்திப் படுத்தும். அதனால் நம்மால் நமது செயல்களில் முழுகவனத்தை செலுத்தி செயல்பட முடியும். மேலும் இவை நமது உடலில் எண்டோர்ஃபின் ஹார்மோனின் அளவை அதிகரித்து நம் மனநிலையை மேம்படுத்தும்.

உடல் நலத்தையும் மன ஆரோக்கியத்தையும் அதிகரிக்க வாரத்திற்கு 150 நிமிட உடல் செயல்பாடுகள் அவசியம் என்கிறது உலக சுகாதார அமைப்பு. உடல் ஆரோக்கியத்திற்காகவும் மூளையின் ஆரோக்கியத் திற்காகவும் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரதங்கள் நிறைந்த சமச்சீரான உணவை உட்கொள்ளலாம். இரவில் 7 முதல் 9 மணி நேர ஆழ்ந்த தூக்கம் நம் ஒவ்வொருவருக்கும் அவசியம். இது உடலையும் மனதையும் ஒருமுகப்படுத்தி உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இதையும் படியுங்கள்:
இன்முகமும் இனிமையான வார்த்தைகளும் வாழ்வின் ஜீவநாடி!
Motivational articles

மேலும், குடும்பம், நண்பர்கள், சமூகத்துடன் நாம் இணைந்திருக்கும் போது நமது மனதில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. குடும்பத்தினர், நண்பர்களுடன் நேரம் செலவிடுவது, சமூக செயல்பாடுகளில் ஆர்வம் காட்டுவது நமது வலிமையை மேம்படுத்துவதுடன்  நமது மனநிலையை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.

நமது வாழ்க்கைக்கென ஒரு குறிக்கோளை வைத்துக்கொள்ளுவது நல்லது. ஒவ்வொரு நாளுக்கும் என ஒரு குறிக்கோள் வைத்து அதை நோக்கி செயல்படும் போது நமது உடலும் மனமும் வலிமை பெறுகிறது. வாழ்க்கையிலும் முன்னேற்றத்தை காணமுடிகிறது.

நாம் பெறும் வெற்றிகள் நமக்கு நம்பிக்கையை அளிக்கின்றன. இறைவன் வாழ்வில் நமக்கு கொடுத்துள்ளவற்றிற்கு தினமும் நன்றி சொல்லும் பழக்கம் நம்மை மேன்மைக்கு கொண்டு செல்லும். நமது நன்றியுணர்வை ஒரு நாட்குறிப்பில் எழுதிவைத்துக் கொண்டு அவற்றை தினமும் படித்து வரலாம்.

நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கும் அல்லது நன்றி தெரிவிக்கும் விஷயங்களைப் பட்டியலிடும்போது நம்மிடம் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.அதனால் நம்மால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்..ஸ்மார்ட்போன், கணினி ஆகியவற்றைப் பார்ப்பதை குறைத்துக் கொள்ளுவதன் மூலம் நமது கண்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். இது நம் நினைவாற்றலை அதிகரித்து நம் வேலையில் அதிக கவனம் செலுத்த உதவும்.நமது தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, முறையான நேர மேலாண்மையை பின்பற்ற வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உங்களுக்கு முன்கோபம் இருக்கிறதா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!
Motivational articles

அதிகமாக சோர்வு ஏற்படுவதை தவிர்க்க அன்றாடப் பணிகளுக்கு இடையே நமக்கு விருப்பமான  வேலைகளில் ஈடுபடலாம். நமக்கு பிடிக்காத சிலவற்றுக்கு கவலைப்படாமல் 'நோ' சொல்லவும் கற்றுக்கொள்ளுவது நல்லது. ஒருவேளை மனஅழுத்தம் அதிகமாக இருந்தால், மனநல ஆலோசகரை அணுகுவதற்கு சற்றும் கூச்சப்படக் கூடாது.

நம்முடைய உடல் மற்றும் மன நலம் நமக்கு மட்டுமின்றி நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் முக்கியம் என்பதை நினைவில் கொண்டு செயல்படுவதில் நாம் அக்கறைக் காட்ட வேண்டும். மொத்தத்தில் நம் நிம்மதி நம் கையில்தான் என்பதை உணர்ந்து நாம் நமது அன்றாட வாழ்வை கொண்டு செலுத்தவேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com