

"உலகம் கெட்டுப் போய்விட்டது" என்ற சொற்றொடர் அனைவர் வாயிலிருந்து வரும் ஒரு பொதுவான சொற்றொடராக மாறிவிட்டது. ஒவ்வொருவரும் தன்னை நல்லவராக மாற்றிக் கொள்வதுதான் நம் உலகத்தை மாற்ற ஒரே ஒரு சுலபமான வழி. ஒவ்வொரு மனிதரும் பொறுப்புள்ளவராகவும், சட்டங்களை மதித்து செயல்படுபவராகவும் தன்னை மாற்றிக்கொண்டால் இந்த உலகம் தூய்மையாகிவிடும்.
மேலும் ஒவ்வொரு மனிதனும் தன்னை நேர்மையுள்ளவனாகவும், சேவை மனப்பான்மையுடன் செயல்படுபவனாகவும் மாற்றிக்கொண்டால் அமைதி நிறைந்த நல்ல உலகத்தை உருவாக்க இயலும். வெளிப்படையாக தோன்றும் முன்னேற்றத்தைவிட ஒருவனுடைய உள்ளத்தில் தோன்றும் முன்னேற்றமே மதிப்பு வாய்ந்தது.
அவன் நிறைய படித்து பல பட்டங்கள் வாங்கி இருக்கிறான். மிகப்பெரிய பதவியில் இருக்கிறான். சகல வசதிகளை கொண்ட பெரிய பங்களாவில் தங்கி ஆடம்பரமாக வாழ்ந்து வருகிறான். காரிலும், விமானத்திலும் நிறைய இடங்களுக்கு சென்று வருகிறான் என்பது வெளிப்படையாக தெரியும் முன்னேற்றம்.
இவற்றைவிட அவன் 'போதும்' என்ற மனத்தை வளர்த்துக்கொண்டு, தன்னிடம் இருப்பவற்றை நன்கு அனுபவித்து, அவனுடைய மனம் சொல்படி ஆடாமல், மனதை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்து, தேவையற்ற கவலைகளை வரவழைத்து வருத்திக்கொள்ளாமல், சிரித்த முகத்துடன் தன்னுடைய சுயலாபத்தை பற்றி சிறிதுகூட நினைக்காமல், மனித இனத்தின் பொது நலத்தை நாடி, இரவும் பகலும் உழைத்து வந்தால்தான் அவன் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து வருகிறான் என்பது தெளிவாகும்.
இறப்பு சோகமானது என்றாலும் தனக்கு கிடைத்த மனித வாழ்க்கையை நன்கு பயன்படுத்திக் கொண்டு, சந்தோஷமாக வாழாமல் துன்பம் நிறைந்ததாக மாற்றிக்கொண்டு வேதனைப்பட்டு வருவதுதான் அதைவிட சோகமானது.
மனித வாழ்க்கை நிரந்தரமானது அல்ல என்று தெரிந்திருந்தாலும், நிறைய மனிதர்கள் உலகத்தில் நிரந்தரமாக தங்குவதை போன்று நினைத்துக்கொண்டு சொத்து, செல்வம் போன்றவற்றை சேர்ப்பதில் தங்களை வருத்திக்கொண்டு மகிழ்ச்சியுடன் சிரித்து வாழ்ந்து வருவதையே மறந்து விட்டிருக்கிறார்கள்.
ஒருவன் தான் சாகும்போதுதான் சம்பாதித்த செல்வத்தை சுமந்து கொண்டு போகப்போவதில்லை இவன் நல்லவன், நியாயமாகவும், நேர்மையாகவும், யாரையும் ஏமாற்றாமல் வாழ்ந்து வந்தான் அனைவரையும் உள்ளன்புடன் நேசித்து தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தான் என்று அனைவரும் பேசும்படி வாழ்ந்து வரவேண்டும்.
அமைதி இருக்கும் இடத்தில்தான் நல்லவை பிறக்கும் என்பதால் நம்முடைய உலகத்தில் அமைதி நிலைத்திருக்கும்படி பார்த்துக் கொள்வது மனித இனத்தின் தலையாய கடமையாகும்.