

நாம் எந்த ஒரு இலக்கை அடையவேண்டுமானாலும் வாழ்வின் ஒவ்வொரு அனுபவத்தையும் ஒரு தேர்வாக, அறை கூவலாக கருதி இருந்தாலும் கூட, தேர்வுக்கு செல்லும்பொழுது எவ்வளவு பொறுப்போடும், கவனத்தோடும் கடமையாற்றுவோமோ அவ்வாறு நாம் செய்ய பழகிவிட்டோமென்றால் எதுவும் நமக்கு கடினமாகத் தோன்றாது.
மாதாந்திர தேர்வில் சில நேரங்களில் நாம் தோற்றுப் போய்விட்டால் அடுத்த மாதம் வரும் தேர்வில் அதை நன்றாக எழுதி வெற்றி பெறுவதில்லையா? ஒரு ரயிலை தவற விட்டு விட்டோமானால் அதோடு செல்லவேண்டிய பயணம் நின்று போய்விடுமா என்ன? அடுத்து எதில் பயணிக்கலாம் என்று அதில் எண்ணத்தை செலுத்தி மாற்று வழி தேடுவோம்தானே. இதோ இப்பொழுது பல நாட்கள் விமான பயணங்களால் பலர் அவதியுறு கிறார்கள்.
பயணங்களை கூட ரத்து செய்யவேண்டி இருக்கிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான பயணிகளுக்கு சங்கடம்தான். இதையெல்லாம் பொறுத்துதானே போகவேண்டி இருக்கிறது. பொறுமை வாழ்க்கைக்கு தேவை என்பதை இதுபோன்ற நேரங்களில்தான் நாம் புரிந்துகொள்ள முடியும். பல நேரங்களில் நம் எதிர்பார்ப்புக்கு தடைகள் வரத்தான் செய்யும். அவற்றை நாம்தான் திடசித்தத்துடன் எதிர்கொண்டு அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை திட்டமிட வேண்டும்.
சில நேரங்களில் நாம் எண்ணுவதுபோல் எல்லாமே கைகூடி வராது. துன்பங்களும் தோல்விகளும் ஏற்படத்தான் செய்யும். அவற்றை மிகவும் துணிவுடனும், புன்முறுவலுடனும் இடுக்கண் வருங்கால் நகுக என்பதற்கு ஏற்ப எடுத்துக்கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது.
அதுபோன்ற சோதனையான நேரத்தில் தோல்வி மனப்பான்மையில் துவளாமல், எனக்கு எங்கு போனாலும் தோல்விதான். அது என் ராசி என்றெல்லாம் தன்னைத்தானே சங்கடத்துக்கு உள்ளாக்கிக் கொள்ளாமல், இதுவும் கடந்து போகும். கடும் உழைப்பினால் அல்லது கூரிய புத்தியின் திறத்தினால் எதிலும் வெற்றி பெறலாம் என்று நம்பவேண்டும். இது நம்மால் முடியும் என்று அதிகமாக சிந்தித்து கவனமாக செயல்பட்டு கடும் உழைப்பைத் தந்துவிட வேண்டும். கடும் உழைப்பாளர்களாக, எதையும் ஏற்கும் மனப்பக்குவம் பயிற்சி உடையவர்களாக வளர்ந்து வரும்பொழுது தோல்வி நம் பக்கம் வர அஞ்சும்.
எதையும் முடியும் முடியும் என்று சொல்லிக்கொண்டே முயன்றோமானால் வெல்ல முடியாத போரிலும் கூட வென்றுவிட முடியும். அப்படி ஒரு சக்தி நாம் எண்ணும் எண்ணத்திற்கும் உண்டு.
எப்பொழுதுமே அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை திட்டமிட எதிர்பாராது நமக்கு கிடைத்த ஓய்வு நேரத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு தொகையை இவ்வளவுதான் செலவழிக்க வேண்டும் என்று நினைத்திருப்போம். சமயத்தில் கூடுதலாக செலவழிந்து போய்விட்டது என்றால் செலவழித்த தொகையைப் பற்றியயேவா எண்ணிக்கொண்டே இருப்போம். இல்லையே மேலும் சம்பாதிக்க வேண்டும் என்றுதானே ஒவ்வொருவரும் முயற்சி எடுப்போம்.
அதுபோல சென்றவைகளைப் பற்றி செலவாக கருத வேண்டும். பல நேரங்கள் அந்த அனுபவங்களை பாடமாக்கிக் கொள்ள வேண்டும். கசப்பான அனுபவங்களே நமது வளர்ச்சிக்கான உரங்கள் என்று கருதி மேலும் துணிவுடன் நம் அடியை நம்பிக்கையோடும், உறுதியோடும் எடுத்து வைத்தால் நாம் பெறும் வெற்றியை யாராலும் தடுத்துவிட முடியாது!
ஆதலால், துணிவோம்; செயல்படுவோம்; வெற்றி அடைவோம்!