

உனக்கு தேவையான எல்லா வலிமைகளும் உதவிகளும் உனக்குள்ளேயே உள்ளன. இது விவேகானந்தரின் பொன்மொழி. இந்த பொன்மொழியை உணர்ந்து கொண்டு, நம்பிக்கையோடு வாழ நினைத்தால், பல கவலை ரேகைகள் மறைந்து, புதிய நமக்கான பாதையும், பார்வையும் கிடைக்கும். ஏனென்றால், நம்முள் துளிர்விடும் எண்ணங்களும் செயல்களும் நம்பிக்கையோடு பிறக்கும் என்பதை உணருவோம்.
எதையும் நம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உதிக்கும் இடத்தில், வெற்றியின் பாதை தெரியும். நம் தோள்கள் வலிமையானவை என்று நினைக்கும் உள்ளத்தில், எத்திசை சென்றாலும், வெல்லும் வழியில் பயணிக்க முடியும் என்னும் ஈர்ப்பு சக்தி, உணர்வுகளில் தோன்றி, ஆற்றும் திறமை வலுப்பெற்று, முன்னேறும் இலக்குகளை அடைய எத்தனிக்கும்.
தைரியத்தோடு நிற்கும் மனம் என்றும் சோர்வடைவது இல்லை. தோல்வி கண்டு துவள்வதும் இல்லை. இதை அறிந்து செயலாற்றும் எவருக்கும் வெற்றி நிச்சயம் என்பதை உணருவோம். துணிந்தவனுக்குதான் தூக்குமேடை கூட பஞ்சு மெத்தை. இது சாதாரண பழமொழி அல்ல. போராட நினைக்கும் ஒவ்வொருவரும் வலிமையைக் கொடுக்கும் தன்னம்பிக்கை வரிகள் என்பதை தெரிந்து கொள்வோம்.
வலிமையாக இருப்பது நமக்கு பலம், அதோடு தூய்மையான மனதோடு இருந்துவிட்டால் வரம். வலிமையான திண்ணமும், தூய்மையான மனமும் இணைந்த செயல்திறன், நம்மை உயர்த்தும் சிறகுகளாக பயணிக்கும் என்பது நிச்சயம். ஆகவே, நம் வாழ்க்கை பாதை, இருகண்கள், ஒரே பார்வை போல் இருக்கட்டும்.
துயரத்திலும் தளராமல் இருக்கும் மனப்பக்குவம் உருவாக்கிக் கொள்வோம். எதையும் எதிர்கொள்ளும் துவண்டு போகாத மனமே, விழும்போதும், அரவணைத்து, மீண்டும் முயற்சிக்கவும், செயலாற்றும் துணிவையும் கொடுக்கிறது என்று நம்பிக்கை கொள்வோம்.
வாழ்க்கையை எந்தவிதமான குற்றப் பின்னணி இல்லாமல் பயணிப்போம். நேர்மையாக தடம் பதிக்கும்போதுதான், அது நம்மை உயர்த்தும் உயர்வுக்கான ஏணிப்படிகளாக இருக்கும். அதேபோல் கவலையை சுமக்காமல் பயணிக்கும் மனதுக்கு என்றும் தவறான வழியில் பயணிக்காது என்பதில் உறுதியாக இருங்கள். நேர்வழி செல்லும் பாதை நம்பகமானது. அதில் நேர்மையோடு பயணித்து, மேன்மக்கள் ஆவது நம் நடத்தைக்கானது என்பதை உணர்ந்து பொறுப்புடன் செயலாற்றுங்கள்.
நம் வாழ்க்கையில், வலி ஏற்படின் வலிமையோடு கை சேர்க்கவும், உடைந்துபோகும் மனதிற்கு, ஆறுதல் சொல்லி, தட்டிக்கொடுக்கும் கைகளாகவும், துயரம் வரும்போது, நம் கண்ணீரைத் துடைக்கும் கைகளாகவும், இருப்பது வேறு எதுவும் இல்லை, நம்முள் எழும் அந்த நம்பிக்கை கரங்கள்தான் என்பதை புரிந்து, நம்பிக்கை வேட்கையோடு, வீறுநடை போடுவோம். வெற்றி வாகை சூடுவோம்.
வாழ்வதற்கு பணம் முக்கியம், மாற்றுக்கருத்து இல்லை. பணம் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிக்கும் சக்தி இல்லை என்று உணருங்கள். சுயகெளரவம், உயர்ந்த பண்பு, வலிமையிலும் எளிமை, நேர்மையின் சுவாசம், அன்பின் தேடல் இவை அணைத்து லெட்சுமணக் கோடுகளும் சேர்ந்துதான், முழுமையான வாழ்க்கையை தீர்மானிக்கும் சக்தி உடையது என்று உணர்ந்து, உள்ளும் புறமும் சிறக்க, வாழ்ந்து காட்டும் மனிதர்களாக நிலைப் பெறுவோம். இதுவே நம் ஆன்மாவின் குரல் என்றே போற்றி வாழ்வோம்.
வாழ்க்கையில் நாம் ஆற்றும் செயல் வடிவம், முழுமையாக நம்மை பாதுகாக்கும் அரணாக இருக்கட்டும்!