
சிலர் நடந்து போகும் வழியில் தேவையில்லாத ஒரு பொருள் கிடந்தால் அது நடப்பதற்கும், வாகனங்கள் செல்வதற்கும் தடையாக இருக்கும் என்று எண்ணி அவற்றை அப்புறப்படுத்தி விட்டு செல்வதுண்டு. சிலர் அதைக் கண்டும், காணாதபடி போவார்கள். இன்னும் சிலர் அப்புறப்படுத்தத்தான் ரோடு பெருக்குபவர்கள் இருக்கிறார்களே நமக்கு என்ன வந்தது? அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்று அலட்சியமாக செல்வார்கள். இதுபோல் உலகத்தில் எத்தனை மலர்கள் இருக்கிறதோ, அதன் மணம் எப்படி மாறுகின்றதோ, அதன் குணநலன்கள் எப்படி வித்தியாசப்படுகிறதோ அதுபோன்றதுதான் மனித மனங்களும்.
அறம் கணக்கற்ற பாவங்களை மூடிவிடும் என்கிறது விவிலியம். கல்லை விட கடினமானது மனிதனின் இதயம். இவ்விதயத்தை அறச்செயல்களால் மலரின் மென்மைபோல மாற்ற முடியும். எப்படி என்பதற்கு இந்த ஒரு குட்டிக் கதையை உதாரணமாகக் கூறலாம்.
பொதுமக்கள் நடந்து போகிற பாதையில் ஒருவன் ஒரு கண்ணாடி பாட்டிலை நடுரோட்டில் போட்டு உடைத்துவிட்டு போனான். வீதியெல்லாம் கண்ணாடிச் சிதறல்கள். தெரியாமல் யாராவது மிதித்தால் கால்களை கிழித்துவிடும்.
இப்போது அந்த வழியாக ஒரு ஆன்மீகவாதி வருகிறார். அடக் கடவுளே..! இப்படி கண்ணாடித் துண்டுகளை நடக்கின்ற ரோட்டில் போட்டு இருக்கிறார்களே இதைக் கேட்க ஆட்கள் இல்லையா? என்று சொல்லிவிட்டு ஒதுங்கிப் போய்விட்டார்.
அடுத்து பொதுநல சேவகர். அடடா… இப்படி தெருவுல கண்ணாடி துண்டுகளாக கிடக்கிறதே அரசாங்கம் என்ன செய்கிறது உடனே அரசாங்கத்துக்கு இது விஷயமா மனு எழுதிப்போட வேண்டும் என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
அடுத்து அரசியல்வாதி. இது எதிர்க்கட்சிக்காரர்களின் சதியாகத் தான் இருக்கும். முதலில் இதற்கு ஒரு போராட்டம் நடத்த வேண்டும் என்று சொல்லிவிட்டுத் தாண்டிப் போனாராம்.
கடைசியாக ஒரு பார்வையற்றவர் கையில் இருந்த குச்சியால் தட்டித் தட்டிப் பார்த்துக்கொண்டே வந்தபோது குச்சியில் கண்ணாடி பட்டு கிளிங் என்று ஓசை வந்ததும், உடனே அடடா... கண்ணாடித் துண்டுகள் கிடக்கிறதே. குழந்தைகள், பெரியவர்கள் காலில் குத்தி விடுமே என்று சொல்லிவிட்டு, மெதுவாகக் கீழே குனிந்து கையால் தடவித் தடவிப் பார்த்து கண்ணாடி துண்டுகளை சேகரித்து குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு போனாராம். இதைத்தான் அறச்செயல் என்பது. இதுபோன்ற செயலால்தான் கடினமான இதயத்தையும் மலரின் மென்மையாக மாற்ற முடிவது. 'அறம் செய விரும்பு' என்று ஆன்றோர்கள் சொன்னதும் இதைத்தான்.
ஆதலால், ஒரு செயல் செய்யத் தகுதி உள்ளதாக இருப்பின் அதுவும் அச்செயல் அறச்செயலாக இருப்பின் அதை நன்றாகச் செய்து முடியுங்கள். வாழ்வு வசப்படும் என்பது உறுதி.
நல்ல சொல்
நல்ல செயல்
நல்ல எண்ணம்
இவை என்றுமே
உங்களைக் காத்து
வாழ்வை வசப்படுத்தும்!