
நாம் வாழ்ந்து வரும் காலத்தில் எத்தனை விதமான மனிதர்களை சந்திக்கிறோம். அதுபோன்ற மனிதர்களால் நமக்கு நிறைய அனுபவம் கிடைக்கிறது. அதில் நல்ல அனுபவங்களை நாம் பின் பற்றுவதே நமக்கு சாதகமாக அமையலாம்.
மாவு இருக்கும் வகையில்தான் பலகாரம் நன்றாக அமையும். அதேபோலத்தான் நமக்கு கிடைக்கும் அனுபவங்களுமாகும்.
சிலருக்கு ஆசை அதிகம் இருக்கும். அதைக்கட்டுப்படுத்த வேண்டும். அதிக ஆசை, அதிக நஷ்டம் என்ற தத்துவம் புாிந்து வாழ்வதே நல்லது.
எதைக்கொண்டு நிரப்பினாலும் நிரம்பிவிடும். ஆனால் ஆசை மட்டும்தான் நிரம்பவே நிரம்பாது. அதை நாம் அடுத்தவர்களிடமிருந்து வாடகையில்லாமல் வாங்கக்கூடாது. அதற்காக வாடகைக்கும் வாங்குவது ஆபத்தானதே!
அதேபோல சிலரிடம் குறை சொல்லும் பழக்கம் நிரந்தரமாக வாழ்ந்துவரும். அது எப்போதுமே தவறான செயலாகும். குறை இருந்தாலும் குறை ஒன்றும் இல்லை என்பதை நினைத்தாலே குறையில்லைதான். யாருமே என்னை புாிந்து கொள்ளவில்லை, என்ற உளவியல் கருத்தை மாற்றி மற்றவர்கள் இப்படித்தான் எனப்புாிந்து கொள்வதே பிரச்னைகளுக்கான தீா்வாகும். பொதுவாக குறை சொல்லும் பழக்கம் தவிா்ப்பதே நல்லது.
அதேபோல அடுத்தவர்கள் வாழ்க்கை முறை, அவர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களின் வருமானம் என்ன, பின்புலம் என்ன, அவர்களால் மட்டும் எப்படி பகட்டான வாழ்வு வாழமுடிகிறது என்ற பூதக்கண்ணாடி ஆராய்ச்சி தேவையில்லையே!
நமது வாழ்க்கையை நாம் எப்படி நோ்மையாக வாழவேண்டும், என்ற நெறிமுறைகளோடு வாழலாமே! அதேபோல நாம் கொஞ்சம் வசதி குறைவாக இருக்கும்போது நமது சொந்தமோ அல்லது நட்பு வட்டங்களோ பிரதிபலன் எதிா்பாராமல் உதவிகள் செய்யும் நிலையில் நாம் கூடுமான வரையில் அவர்களது உதவிகளை தவிா்ப்பதே நல்லது.
ஒருவர் தொடா்ந்து ஏதாவது ஒரு வகையில் நமக்கு நமது குடும்ப சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு உதவி செய்யும் நிலையில் நமது தன்மானத்தை அடகு வைக்கக்கூடாது.
ஒரு காலகட்டத்தில் ஏதாவது ஒரு நிலையில் சொல்லிக்காட்டும் சந்தர்ப்பம் ஏற்படும்.
அந்த நேரம் நமக்கு சொல்கடன் தேவையா? அளவுக்கு மீறினால் அமிா்தமும் நஞ்சுதானே. ஆக, நமக்கு கிடைத்திருக்கும் வாழ்வு குறைவானதோ, அல்லது நிறைவானதோ. எங்கும் எதிலும் நிதானம் கடைபிடித்து வாழ்வதே சிறப்பான வாழ்வாகும்!
அதிக ஆசை, பிறர்வாழ்வு கண்டு ஆதங்கம் அடைதல், குறைகண்டுபிடித்து அதையே சொல்லிவாழ்வது, அடுத்தவர்களின் உதவியை தொடர்ந்து வாங்கிக்கொள்வது ,அடுத்தவர்களின் சொல்பேச்சு, இவைகளை தவிா்த்து நோ்மறை எண்ணங்களோடு வாழ்வதே சிறப்பானதாகும்!