
அடக்கமுடைமையே எல்லா நன்மைகளுக்கும் நற்பாதை வகிக்கின்றது.
எளிமையும் மரியாதையும் உயர்ந்த நற்பண்புகளாகும்.
பணியுடன் பழகாதவனும், நாணந்தரும் செயல்களிலிருந்து விலகிக்கொள்ளாதவனும் உண்மையான மனிதனாக மாட்டான்.
எவன் சாந்த குணத்தைப் பெற்றிருக்கின்றானோ, அவன் நன்மையான பகுதியை உடையவன்.
நல்ல அறிவு எந்த மூலையில் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அதைத் தேடிச்செல்.
மக்களிடம் அன்பாக இருங்கள்; கடுமையாக இருக்காதீர்கள்; அவர்களுக்கு ஊக்கமளியுங்கள்; அவர்களை ஒதுக்கி தள்ளாதீர்கள்.
பேராசை வறுமையைக் குறிக்கிறது, ஆசை இல்லாமை செல்வத்தைக் குறிக்கின்றது.
தன்னுடைய சிறு குழந்தைகளிடம் அன்பு காட்டாதவனும், மூத்தவர்களுக்கு மரியாதை செலுத்தாதவனும் என் அன்பிற்குரியவன் அல்லன்.
கைத்தொழிலும், மோசடியில்லாத வியாபாரமும் தூய்மையான சம்பாத்தியமாகும் .
வியாபாரத்தில் உண்மை சொன்னால் அபிவிருத்தி ஏற்படும், பொய் சொன்னால் வியாபாரம் குறையும்.
எவருடைய சொல்லும் செயலும் பிறரைத் துன்புறுத்த மாட்டாதோ, அவனே மனிதன் ஆவான்.
வாய்மை சொர்க்கத்திற்கு அழைத்துச்செல்லும்.
தன் பிழையை உணர்ந்து உண்மையாகவே விரும்பி வருந்துபவன் குற்றமிழைக்காதவனுக்கு ஒப்பானவன்.
தனக்கு இடையூறு செய்தவன் ஒருவன் தன் அதிகாரத்தின் கீழ் இருக்கும் போது, அவனை மன்னித்து விடுகின்றவன் இறைவனுக்கு அருகில் இருப்பான். அவன் மிகவும் மரியாதைக்குரியவன்.
மறதி என்பது அறிவின் துரதிர்ஷ்டம், அறிவை தகுதியற்றவரிடம் உபயோகிப்பது அதனையே இழப்பதற்கு ஒப்பாகும்.
முறைப்படி மரணம் வரும் வரையில் அதனை விரும்பாதீர்கள்.
ஒரு மனிதன் இவ்வுலகை விட்டுப் பிரிந்துவிட்டால் உலக ரீதியான எல்லாத் தொடர்புகளும் அறுந்து விடுகின்றன. ஆனால் மூன்று விதமான செயல்கள் மாத்திரம் அவனைப் பின் தொடர்கின்றன.
1) அவன் செய்த தருமங்கள். அதாவது மக்கள் காலங்காலமாக பயன் பெறும் பொருட்டு அவன் செய்து விட்டுச்சென்ற தர்ம காரியங்கள்.
2) பயன் அளிக்கக்கூடிய கல்வி
3)அவனுக்காக ஆண்டவனிடம் பிராத்தனை செய்துவரும் நல் ஒழுக்கமுள்ள குழந்தைகள்.
மதம் என்பது தூய்மையான வாக்கும், கொடையும் ஆகும்.
சோதனைக் காலங்களில் பொறுமையாக இருப்பவர்களும், பிழைகளை மன்னிப்பவர்களும் நேர்மையாளர்கள் ஆவார்கள்.
தன் பெற்றோர் தனக்குப் பிழை செய்திருப்பினும் அவர்களுக்கு நன்மையே செய்தல்வேண்டும்.
நற்குணமுள்ள மனைவியே ஒருவருக்கு ஒப்பில்லாத பெருஞ் செல்வமாகும்.
ஒருவர் மூன்று நாட்களுக்கு மேலாக தனது சகோதரனுடன் பேசாமலிருப்பது முறையல்ல. இவ்விருவரும் எதிர்ரெதிரே சந்திக்கும் போது ஒருவர் இந்தப் பக்கமாகவும், மற்றொருவர் அந்தப் பக்கமாகவும் முகம் திருப்பிக் கொள்கிறார்கள். இந்த நிலையில் அவ்விருவரில் எவர் சலாம் சொல்வதில் முந்திக்கொள்கின்றாரோ அவர்தான் சிறந்தவர்.
இறைவன் மனிதர்களுக்கு சிறிதும் அநீதி இழைப்பதில்லை, ஆனால் மனிதர்கள் தங்களுக்கு தாங்களே அநீதி இழைத்துக்கொள்கிறார்கள்.