

"கடவுளே! எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிக்கல்கள்? நான் என்ன பாவம் செய்தேன்? இவ்வளவு சிக்கல்களுக்கும் யார் காரணம்?" என்று என்றைக்கு நீங்கள் புலம்புகிறீர்களோ அன்றைக்கு ஒரு நிலைக்கண்ணாடி முன் நில்லுங்கள்! உங்கள் சிக்கல்களுக்கு எல்லாம் காரணமானவரை நீங்கள் பார்க்க முடியும்.
ஒரு இலக்கை நோக்கி பயணம் செய்யும்போது இலக்கை அடைய முடியாமல் தடை செய்கின்ற ஒன்றே சிக்கல்.
சிக்கல்களை தீர்ப்பதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் நம்முடைய சிக்கலே, எது சிக்கல், ஏன் சிக்கல், எவ்விதமான சிக்கல் என்று புரிந்துகொள்ள முடியாததுதான்.
ஆம்! நாம் சந்தோஷமாக இருப்பதற்கும், துக்கமாக இருப்பதற்கும் நாம்தான் காரணம். வாழ்க்கையில் வெற்றி அடைந்து சாதனையாளராக இருப்பதற்கும், தோல்வி அடைந்து வறுமையில் துவள்வதற்கும் நாம் மட்டுமே காரணம்.
நீங்கள் சந்திக்கும் மிகப்பெரிய சிக்கல் அல்லது இடர்ப்பாடு, பிற்காலத்தில் நீங்கள் வெற்றி பெறுவதற்கும், மகிழ்வாக இருப்பதற்கும், என்ன செய்ய வேண்டும் என்று கற்றுத் தருவதற்கே உங்களுக்கு அனுப்பப் பட்டுள்ளது. இதை 'சக்சஸ் இஸ் எ ஜர்னி 'நூலில் பிரியன் ட்ரேசி எழுதியுள்ளார்.
ஆகவே பிரச்னைகள் வந்தாலும் தடைகள் வந்தாலும் அது நமக்கு உதவி புரியத்தான் என்ற மனநிலையில் இருந்தால் எத்தகைய பிரச்னைகளையும் எளிதில் கையாளலாம்.
மனைவியின் மரணத்தில் அழிகின்ற உடலைப் பார்த்தான் சாதாரண மனிதன்! அவள் மரணத்தில் அழிகின்ற காதலைப் பார்த்தான் ஷாஜஹான்! முதல் பார்வை சோகத்தில் முடிந்தது!
இரண்டாம் பார்வை தாஜ்மஹால் என்ற சாதனையில் முடிந்தது!
ஒருமுறை நான் கனவு கண்டேன் கனவினில் சொர்க்கம் சென்றேன் சொர்க்கத்தின் கதவுகள் திறந்தன.
உள்ளே சென்று பார்த்தேன்.
அங்கே சேரிகள் இல்லை.
உடனே பூமிக்குத் திரும்பிவிட்டேன்.
இது புனித அன்னை தெரசா கூறியது.
ஆக, நாம் பார்க்கும் பார்வையில்தான் நமக்கான பாதை ஒளிந்திருக்கிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
சூழ்நிலைகளை விட பெரிய ஆற்றல் தம்மிடம் ஒளிந்து இருக்கிறது என்பதை உணர்பவர்களால் மட்டுமே சாதனை புரிய முடிகின்றது.
தேனீக்கள் கொட்டுமே என்று அஞ்சிக்கொண்டே இருந்தால் என்றைக்கும் உங்கள் நாக்கால் தேனின் சுவையை உணரமுடியாது.
இன்று நாம் பார்க்கின்ற ஒவ்வொரு முன்னேற்றமும் சில நாட்களுக்கு முன் சிக்கல்களாக இருந்தவையே! நேற்றைய சிக்கல்கள், இன்றைய முன்னேற்றங்கள்! இன்றைய சிக்கல்கள் நாளைய முன்னேற்றங்கள்!
நம்மில் பலர் நிழலோடு போராடிக் கொண்டிருக்கிறோம். உண்மையான எதிரியை அடையாளம் கண்டுகொள்ளாமல் நிழலோடு போராடி என்ன பயன்? முதலில் சிக்கலின் காரணத்தைக் கண்டு அங்கிருந்து தீர்வுப்போரில் இறங்குவோம். எய்தவனிருக்க அம்பை நொந்து என்ன பயன்.
இருட்டாக இருக்கிறதே! என்று புலம்பிக்கொண்டு இருட்டைப்பற்றிப் பட்டிமன்றம் நடத்துவதை விட்டுவிட்டு என்னால் முடிந்த சிறு விளக்கையாவது ஏற்றுவேன் என்று முயலுவதே உயர்ந்தது! என கவியரசர் தாகூர் கூறியிருக்கிறார்.
நம்முடைய பார்வைகள் சாதனைகளை நோக்கித் தான் இருக்க வேண்டுமேயொழிய, சங்கடங்களை நோக்கி இருக்கக்கூடாது!
நம்முடைய சிந்தனைகள் தொலைநோக்குச் சிந்தனைகளாக இருக்க வேண்டுமேயொழிய, தொல்லைகளை நோக்கிய சிந்தனைகளாக அமைதல் கூடாது!
நம்முடைய செயல்கள் நம்மை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டுமேயொழிய அழிவுப்பாதையில் அழுத்தக்கூடாது!