

தை மாதம் பிறந்திருக்கும் வேளையில், புதையல் போல் நம்முள் புதைந்து கிடக்கும் மூடநம்பிக்கையை வளர்க்கும் எதிர்மறை எண்ணங்கள் தோன்றும் அறியாமை என்னும் மடமையை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிந்துவிட்டு, நேர்மறை எண்ணங்களை விதைப்போம்.
வாழ்க்கையில் மனிதனுக்கு மனிதன் மாறுபடும் ஜாதி, மதம், இனம் போன்ற வேறுபாடுகள் களைந்து, எல்லோரும் சமத்துவ, சகோதரத்துவ உணர்வுடன் மனதில் ஒன்றிணைந்த தீப ஒளி ஏற்றி, சாதியை வளர்த்துக் கொண்டு பகைமை என்னும் தீண்டாமையை, தீதிது என்று நினைத்து, ஒன்றுபட்டு வாழ்ந்து காட்டுவோம்.
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் இன்று முதல், இதுவரை நம்மோடு தொற்று நோயாக பரவிக்கிடக்கும் தீமைகள் தரும் எண்ணங்களை நம்முடைய மனதில் இருந்து அகற்றி, நற்குணம் படைக்கும் பல நல்ல ஆக்கப் பூர்வமான முன்னேற்றம் தரும் எண்ணங்களை விதைத்து வாழ்ந்து உயரும் நிலை அடைவோம்.
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஆகச்சிறந்த மனித ஆற்றல் கொண்ட சிற்பிகளாக வாழ்ந்து சாதனை பல நூறு படைத்து, வையகம் நம் கையில் என்று நினைத்து, அதோடு நாம் அனைவரும் நம்பிக்கையோடு வாழப் பிறந்தவர்கள் என்று நினைத்து, வாழ்வாங்கு வாழ்ந்து காட்டுவோம்.
வாழ்க்கையில் ஒவ்வொரு நிலைகொண்டு செயலாற்றும் தன்மை கொண்ட நம்மிடையே, வேற்றுமை மறந்து ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு வாழ்ந்து காட்டுவோம். திசை எட்டும் நல் வாழ்வியல் தேர் வடம் பிடித்து, நற்றினை செயல்திறன் விதைப்போம்.
வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் கடமையே என்று விட்டேத்தியாக வாழாமல், பூஞ்சோலை மலர்களைப் போல் வாசத்தை மனதில் ஏற்றி, வாழும் கலை அறிந்து, வாழ்க்கை சிறப்பாக அமைத்து, ஒவ்வொரு நாளையும் நம்பிக்கையோடு, பூர்ண சந்திரன்போல், முழுமனதோடு சிறந்து வாழ்ந்து காட்டுவோம்.
வாழ்க்கையில் அறம் சார்ந்து வாழ்வதற்கு, முதலில், இந்த நல்ல நாளில், ஒவ்வொருவரும் தனக்குள் சபதம் ஏற்று, எதிர்வினை ஆற்றும் சொல்லோ அல்லது செயலோ மற்றும் அதனை சார்ந்த மற்ற எந்த எதிர்வினையோ இல்லாமல், நம்முடைய வாழ்க்கை தரம் உயரும் உயர்வான, ஆக்கப்பூர்வமான செயல் ஆற்றும் எண்ணம் கொள்வோம்.
வாழ்க்கையில் பெண்ணினம் தூற்றும் மனோபாவம் கொண்ட அகம்பாவம் வேரறுத்து, மனித இனத்தில் இருப்பது ஆண், பெண் இனம் இரண்டும் சரிநிகர் சமானம் போற்றும் மாட்சிமை தாங்கிய வண்ணம் நம் எண்ணம் எப்போதும் இருக்கும் மனம் கொண்டு வாழ்ந்து காட்டுவோம். பூமி முதல் வான் வரை இருவரின் கரங்கள் இணைந்து சிகரம் தொடுவோம்.
வாழ்க்கையில் இன்று முதல் மனதில் இருக்கும் பொறாமை குப்பையை அகற்றுவோம். அடுத்தவர்களை மனம் நோகச் செய்யும் அறிவற்ற செயலை செய்ய மறுப்போம். உழைப்பால் உயர்ந்தவர்களைக் கண்டு வெறுப்பும் கள்ள உள்ளம் களைவோம். நல்லப் பொழுதை தூங்கிக் கழிக்கும் சோம்பல் அகற்றுவோம்.
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஐயன் வள்ளுவனின் உலகப் பொது மறை குறள் வழித் தடம் பதித்து வாழ்ந்து காட்டுவோம். ஆன்றோர் சான்றோர் வாழ்ந்த நெறிப் பற்றி வாழ்வோம். இன்றைய நன்நாளில் ஒவ்வொரும் தொடக்க புள்ளிவைத்து, அதன் மையப் பகுதியில் நின்று வாழ்ந்து உயர்வோம்!