

பல நாட்கள் பட்டினி கிடந்தவன்தான் உணவின் அருமையை நன்கு அறிவான். கஷ்டப்பட்டவனுக்குத் தான் சுகத்தின் அருமை நன்கு தெரியும். தான் வாழ்ந்து வருவதை விட மோசமான நிலைக்கு ஒருவன் உட்படும்போது தனக்கு கிடைத்திருக்கும் சௌகரியத்தின் பெருமையை அவன் உணர்ந்து கொள்கிறான். இந்த உண்மையை விளக்கும் கதை ஒன்று.
புடா பெஸ்ட் என்ற நகரில் ஒரு சிறிய அறையில் எட்டு பேர்களுடன் ஒருவன் தங்கி இருந்தான். அவர்களுடன் சிறிய அறையில் காலம் கழிப்பதற்கு அவனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவன் விரும்பிய தனிமை கிடைக்காததால் வாழ்க்கை அவனுக்கு சலித்து விட்டது.
தன் மத குருவிடம் சென்ற அவன், ஒரு சிறிய அறையில் நாங்கள் ஒன்பது பேர் வாழ்ந்து வருவதால் தனிமை சிறிதும் கிடைக்காததால் கஷ்டமாக உள்ளது.இதிலிருந்து விடுதலை பெற்று வாழ்க்கையை அனுபவித்து வாழ எனக்கு ஒரு வழி காட்டுங்கள் எனக் கேட்டுக் கொண்டான்.
அதற்கு மத குரு ,உன்னுடைய அறையில் ஒரு ஆட்டையும் கட்டி வைத்து கொண்டு, ஒரு வாரம் கழித்து என்னை வந்து சந்தித்து உன் வாழ்க்கை எப்படி இருந்தது என்பது பற்றிச் சொல் என்று கூறினார்.
ஒரு வாரம் கடந்ததும் மத குருவிடம் ஓடி வந்து, ஐயா! அசுத்தம் பிடித்த ஆட்டிலிருந்து வரும் துர்நாற்றத்தை எங்களால் சகித்துக் கொள்ள முடியாமல் வாழ்க்கையை நரகமாகிவிட்டது என்று முறையிட்டான். அதற்கு மத குரு, அந்த ஆட்டை துரத்திவிட்டு ஒரு வாரம் கழித்து மீண்டும் என்னை வந்து பார் என்று சொல்லி அனுப்பினார்.
ஒரு வாரம் கழித்து அவன் மத குருவை சந்திக்க வந்த போது சந்தோசமாக, அந்த அசுத்தம் பிடித்த ஆடு இப்போது எங்கள் அறையில் இல்லாததால் உலகம் இப்போது மிகவும் அழகாக காட்சி தருகிறது. நாங்கள் ஒன்பது பேரும் ஒவ்வொரு நிமிடத்தையும் இப்போது அனுபவித்து வாழ்ந்து வருகிறோம். வாழ்க்கை மிகவும் இன்பம் நிறைந்ததாக மாறிவிட்டது என்று கூறினான்.
ஒருவன் வாழ்ந்து வரும் வாழ்க்கையைவிட கஷ்டம் நிறைந்த வாழ்வை வாழும் போது தான் தற்போது வாழ்ந்து வரும் வாழ்க்கையின் அருமையை தெரிந்து கொள்ள முடிகிறது.' நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்' என்பது கூட இதற்காக சொல்லப்பட்ட வார்த்தை தான்.
ஆகவே வாழ்க்கை வெற்றியின் மாபெரும் ரகசியமாக இருக்கின்ற வாழ்க்கையை இன்பம் நிறைந்ததாக மாற்றிக்கொண்டு வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.