

உண்மையான மகிழ்ச்சியும் மனநிறைவும் நாம் பிறருக்கு கொடுப்பதிலும், உதவுவதிலும், அன்பு காட்டுவதிலுமே உள்ளது. பெறுவதில் மட்டும் கவனம் செலுத்துவது நமக்கு நிறைவைத் தராது. மாறாக கொடுக்கும் பொழுது ஏற்படும் பரவசமான உணர்வுதான் நிஜமான ஆனந்தம், மகிழ்ச்சி. இது தன்னலமற்ற சேவை, தர்மம், பிறருக்கு உதவி செய்வது போன்றவற்றின் மூலம் கிடைக்கும். இந்த மனநிறைவு நாம் பிறரிடமிருந்து பெறுவதில் கிடைப்பதில்லை.
எத்தனை இருந்தாலும் இன்னும் வேண்டும் வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்; அதற்காக அலைகிறோம். பணமில்லாதவர்கள் பணத்திற்காக அலைவதும், பணம் இருப்பவர்கள் அன்புக்காக அலைவதும், நிம்மதியைத் தேடி அலைவதும் என மனித மனமானது எப்பொழுதும் நிறைவு கொள்ளாது குறையுடனேயே இருக்கிறது.
எல்லாவற்றையும் வேண்டும் என்று ஆசைப்பட்டு, ஆசைப்பட்டது கிடைக்காத பொழுது தானும் அல்லல்பட்டு, பிறரையும் வருத்தப்பட செய்து விடுகிறோம். பெறுவதிலேயே கவனமாய் இருப்பதும், பெற்றதை பிறருக்கு கொடுப்பதைப் பற்றி சிறிதும் சிந்திப்பதும் இல்லை. கொடுப்பதில் உள்ள சுகத்தை அறிந்தால் பெறுவதில் உள்ள சுகம் மறையும் என்பதை திருவள்ளுவர் 'ஈத்து உவக்கும் இன்பம்' என்கிறார்.
'அறம் செய்ய விரும்பு' என்கிறார் அவ்வையார். நாம் ஒருவருக்கு உதவி செய்தோம் என்ற மனநிறைவும், இன்னும் கூட செய்யலாமே என்ற எண்ணமும் ஈத்து உவக்கும் இன்பத்தால் விளைவது. மற்றவர்களுக்கு நன்மை செய்யும் இடத்தில் நம்மை வைத்த இறைவனுக்கு நன்றி சொல்லத் தோன்றும். மனதில் ஒருவிதமான அமைதியும், நிறைவும், இன்பமும் பிறக்கும்.
கொடுக்கும் பொழுது உண்டாகும் சுகம் பெறுவதில் உள்ள சுகத்தை விட மேலானது. பிறருக்காக வாழும் பொழுது தான் முழுமையான நிறைவு கிடைக்கும். பல ஆன்மீக போதனைகளும் இந்த கருத்தை தான் வலியுறுத்துகின்றன. ஏனென்றால் கொடுப்பதன் மூலம் ஆன்மா வளர்ச்சி அடைகிறது. பொருட்களைப் பெறுவதால் கிடைக்கும் தற்காலிக மகிழ்ச்சியைவிட தேவையறிந்து பிறருக்கு உதவி செய்வதன் மூலம் ஒரு விதமான திருப்தியும் மனநிறைவும் உண்டாகிறது.
பெறுவதை விட கொடுப்பது மேலானது. ஏனெனில் கொடுக்கும் பொழுது நம் இதயம் விரிவடைகிறது. மகிழ்ச்சி, திருப்தி, அமைதி, மனநிறைவு மற்றும் உறவுகளில் பிணைப்பு என பலவிதமான நிறைவுகளைத் தருகிறது. நம்மிடம் உள்ளதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பொழுது மன நிறைவு ஏற்படுவதுடன், அன்பும் பெருகுகிறது. உறவுகளை பலப்படுத்துகிறது.
வாழ்க்கையில் நம்பிக்கையை அதிகரிக்கிறது; பிடிப்பை உண்டாக்குகிறது. கொடுப்பது என்பது பொருளை இழப்பதல்ல, மாறாக நம் மனதை விசாலமாக்கி அன்பையும், மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகிறது.
உண்மைதானே நண்பர்களே! நாமும் பிறருக்கு தேவையறிந்து கொடுத்து இன்பம் காண்போமா!