
குடும்பம் என்பது மனித வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய கட்டமைப்பு. வாழ்க்கையை நெறிப்படுத்துவது நம் வாழ்வது எல்லாமே அந்த குடும்பம்தான் தாங்கிப்பிடிக்கிறது.
ஒரு சிறு தவறு செய்தால் கூட போதும், நீ ஒரு குடும்பஸ்தன் இப்படி செய்யலாமா என்று நாம் கேட்போம். அப்படி என்றால் என்ன அர்த்தம் குடும்பம் என்ற கட்டமைப்பில் இருப்பவர்கள் எவ்வளவு நேர்மையாகவும் தூய்மையாகவும் ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
ஒருவன் தவறு செய்கிறான். அவனுக்கு குடும்பம் என்பது ஒன்று இல்லை என்ற சூழ்நிலையில் அவனை இந்த உலகம் எப்படி பேசுகிறது? அவனுக்கு குடும்பமும் கிடையாது ஒன்றும் கிடையாது அவன் அப்படித்தான் இருப்பான் என்றெல்லாம் பேசுகிறோம். நம் வாழ்க்கையில் நமக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தது குடும்பம்தான்.
எல்லாருமே இல்வாழ்க்கை சிறந்து விளங்க வேண்டும் என்றுதான் விரும்புவோம். ஆனால், யார் யாரெல்லாம் அந்தந்த சூழ்நிலைகளை சரியாக கடந்து போகிறார்களோ அவர்கள் மட்டும்தான் இல்லறத்தை அடுத்த கட்டத்திற்குக் எடுத்து செல்கின்றனர்.
இல்லத்தைப் பராமரிப்பதிலும் பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும் ஒரு பெண்ணின் பங்கு தலையாயது. அதுபோல, பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும் அளப்பரியது.
ஆனால், இருவரும் வேலைக்குச் செல்லும் இந்த காலத்தில், இது ஆணுக்கு, இது பெண்ணுக்கு என்று குடும்பப் பொறுப்புகளை இனம் பிரிக்க இயலாதபடி வாழ்க்கைச் சமத்துவம் ஆகிவிட்டது..
இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால், கணவன் மீது மனைவியோ, மனைவி மீது கணவனோ, ஆதிக்கம் செலுத்தாமல் இருக்கவேண்டும்.
அன்பால் சாதிக்கும் மனநிலையைக் கொண்டு இருந்தால்தான் குடும்பத்தில் சண்டை, சச்சரவு இல்லாமல் மகிழ்ச்சியாக எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழமுடியும்.
கடைசிவரை துணையாக இருக்கப்போவது குடும்பம். அதற்கு முதலிடம் கொடுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணைவரை/துணைவியரை உலகின் முக்கிய மனிதராய் நடத்துங்கள்.
குழந்தைகளுடன் கூடுதல் நேரத்தைச் செலவிடுங்கள்., பசுமையான நினைவுகளைக் குடும்பத்துக்குள் உருவாக்குங்கள். குடும்பம் என்ற கட்டமைப்புதான் நம் வாழ்க்கையை உயர்த்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.