

நமக்கு சில நேரங்களில் பண நெருக்கடி ஏற்படும்போது கடன் வாங்குவது ஒன்றே அதற்கான தீர்வாக இருக்கிறது. அதற்காக பணம் கொடுப்பவரை கண்டுபிடிப்பது என்பதே பெரும் போராட்டமாகிவிடுகிறது. இந்தப் போராட்டத்தை நடத்த நாம் தயாராக இல்லை என்றால் பணப் பிரச்னை நம் வாழ்க்கையை இருளாக்கிவிடும்.
அத்தகைய சந்தர்ப்பங்களில் நாம் சிறிதும் மனசோர்வு அடையாமல் நம்பிக்கையுடன் போராட வேண்டும். கடன் கேட்க செல்பவரிடம் தயக்கத்துடன் கடனை கேட்காமல் நம்பிக்கையுடன் கேட்டால் மட்டுமே அந்த பணம் நமக்கு கிடைக்கும்.
நம்பிக்கையுடனும், உறுதியாகவும் நமக்கு கடன் ஏன் தேவை என்பதை ஒளிவு மறைவு இல்லாமல் விளக்கிச் சொல்வதோடு, எவ்வளவு காலத்தில் திருப்பி தரமுடியும் என்பதை தெளிவாக கூறினால் மட்டுமே உறுதியாக நமக்கு கடன் கிடைக்கும்.
அவ்வாறு கூறும்போதுதான் கடன் கொடுப்பவர் நமக்கு பணம் திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்து பணத்தை கொடுப்பார். இவையெல்லாம் சரியாக அமைந்தால் மட்டுமே நீங்கள் கடன் பெற முடியும்.
மேலும் நமக்கு ஏற்பட்டிருக்கிற பண நெருக்கடிக்கு கடன் மட்டும் வழி இல்லை. நாம் செய்யும் வேலையையே அதிக நேரம் உழைக்கும்போது வருமானம் கூடுதலாக கிடைக்க வாய்ப்புண்டு. அல்லது வேறு வேலை ஏதாவது செய்து பண நெருக்கடியை ஈடு கட்டலாம்.
எதிர்பாராத செலவுகளை நாம் எதிர்பார்க்க முடியாது .சில பெரிய செலவுகளை முன்கூட்டியே எதிர்பார்க்கலாம். அதேபோல போராட்டம் என்பதும் இப்படித்தான் வாழ்க்கையில் இருக்கும் என்பதையும் பட்டியல் போட்டுக் கூறமுடியாது. மேலும் போராட்டம் இல்லாமல் வாழ்க்கையே இல்லை. நம்முடைய கஷ்டங்களை போராடித்தான் வெற்றிகொள்ள வேண்டும்.
போராட்டம் எவ்வளவு முக்கியமோ அதுபோல நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் நெருக்கமான உறவு வைத்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் நாம் போராடினாலும் மற்றவர்களின் ஆதரவும் நமக்கு தேவை.
ஒருவன் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் ஏதோ ஒரு நெருக்கடியின்போது மற்றவர்களின் ஆதரவையும் அனுசரணையும் பெறவேண்டியவனாகவே இருக்கிறான். நம்முடைய கஷ்டத்தை மற்றவர்களிடம் முழுமையாக பகிர்ந்து கொள்ளாவிட்டாலும் அவர்களுடைய ஆதரவு நம்முடைய போராடுகின்ற வலிமையினை அதிகப்படுத்துகிறது என்பது மறக்க முடியாத உண்மையாகும்.
ஆகவே போராட்டமே புது வாழ்வின் அத்தியாயம் என்பதை உணர்ந்து தயக்கமில்லாமல் போராடி தடையின்றி வெற்றி பெறுங்கள்.