

பொதுவாக பெரியோர்கள் கூறுவது உண்டு, ஏதாவது ஒரு சாமான் இல்லை என்றால் இல்லை, இல்லை என்று கூறாதே அப்படியே ஆகிவிடும் என்று. மேலும் கெட்ட வார்த்தைகளை தவிர்ப்பதும் நல்லது என்று அவர்கள் அடிக்கடி கூறிக்கொண்டே இருப்பார்கள். ஏன் தெரியுமா?
சாஸ்திரங்களின்படி ரிஷிகளும் முனிவர்களும் நம் கூடவே இருப்பார்கள். மேலும் அவர்கள் எப்போதும் ததாஸ்து ததாஸ்து என்று கூறிக்கொண்டு நம்மை ஆசீர்வதித்து கொண்டே இருப்பார்கள். ததாஸ்து என்றால் அப்படியே ஆகட்டும் என்று பொருள்.
நாம் என்ன கூறினாலும் அல்லது எதை நினைத்தாலும், அவர்கள் அதற்கு அப்படியே ஆகட்டும் என்று நம்மை ஆசீர்வதிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் எப்போதும் என்னிடம் பணமே இல்லை என்று புலம்பும்போது அவர்கள் ததாஸ்து என்று கூறிய ஆசீர்வதித்தால் அந்தப் பணம் நம்மிடம் இல்லாமலேயே போய்விடும்.
ஆகவேதான் பெரியோர்கள் நம்மிடம் எதாவது ஒரு பொருள் இல்லை என்றாலும், என்னிடம் இல்லை என்று கூறாமல் வாங்க வேண்டும் என்று சொல்லுமாறு வற்புறுத்தினார்கள். அவ்வாறு சொல்லும்போது அந்தப் பொருளை நாம் வாங்கும்படி நமக்கு ஆசிர்வாதம் கிடைக்கும்.
அடுத்தபடியாக யாரையாவது நாம் கடினமான வார்த்தைகளை கூறினால் அதுவும் அப்படியே பலித்துவிடும். நம்மில் பல பேர் அடுத்தவர்களை கடினமாக பேசினால் தன்னுடைய மரியாதை அதிகமாகும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. அடுத்தவர்களை கடினமாக பேசும்போது ஒரு பக்கம் அவர்களுடைய மனம் வேதனைப்படும்.
மற்றொரு பக்கம் நீங்கள் அவர்களை என்ன பேசுகிறீர்களோ அதை அப்படியே நீங்களே அனுபவிப்பீர்கள் உதாரணத்திற்கு நீங்கள் யாரையாவது நீ நன்றாகவே இருக்கமாட்டாய் என்று கூறினால் அந்த சொல்லால் ஏற்படும் விளைவு உங்களைத்தான் பாதிக்கும். மேலும் அடுத்தவர்களின் மனதிலும் உங்களைப் பற்றி ஒரு கெட்ட சிந்தனைதான் இருக்கும்.
உங்களின் மதிப்பு உயரவேண்டும் என்றால் அடுத்தவர்களை கடினமாகவோ அல்லது கிண்டலாகவோ பேசாதீர்கள். மேலும் வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி, பொது இடங்களிலும் சரி, கூடியவரை எதிர்மறையான பேச்சுக்களை பேசாதீர்கள். நேர்மறையான எண்ணங்களை பேசும்போது நம்மிடம் அதற்கான வாய்ப்பு இல்லை என்றாலும் முனிவர்களின் ததாஸ்து எனற ஆசீர்வாதத்தால் நாம் என்ன நினைக்கிறோமோ அல்லது என்ன சொல்கிறோமோ, நிச்சயமாக நமக்கு அது கிடைக்கும்.
வீட்டிலே நல் வார்த்தைகளை பேசினால் நிச்சயமாக லட்சுமி தேவி நம் வீட்டில் எப்போதும் வசம் இருப்பாள். நம்முடைய நாக்கை நாம் எப்போதும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். அதாவது நம் நாக்கிலிருந்து வரும் சொற்கள் நற்சொற்களாகவே இருக்க வேண்டும். மேலும் நற்சிந்தனையோடும் நேர்மறை எண்ணத்தோடும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் கண்டிப்பாக நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் எப்போதும் இருக்கும்.