வீட்டில் எப்போதும் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்க இதை செய்தாலே போதுமே!

Mahalakshmi worship
Mahalakshmi
Published on

வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குமே வரக்கூடிய ஒன்றுதான். வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்தால் பணம், புகழ், செல்வச் செழிப்பு தானாகவே வந்து சேர்ந்துவிடும். அவ்வாறு மகாலட்சுமி தாயாரை நமது வீட்டிற்குள் வரவைப்பதற்கு நாம் செய்ய வேண்டிய சின்னச் சின்ன விஷயங்களையும் அதனால் கிடைக்கும் பெரிய பலனையும் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

வீடு என்பது மங்கலகரமும், மகிழ்ச்சியும் ஒன்று சேர்ந்ததாய் இருக்க வேண்டும். அதற்கு முதலில் வீட்டின் வாசற்படியிலே மங்கலகரமாக கோலம் போட்டு, வீட்டின் வாசற்பகுதியில் நல்ல வாசனை மலர்களை வைக்க வேண்டும்.

வீட்டிற்குள் நுழையும்போதே வருபவர்கள் காணும்படி கற்பக விநாயகரின் படம் வைக்க வேண்டும். அப்படி வைக்கும்போது வீட்டிற்குள் எந்த தீயசக்திகளும் நுழையாது. அடுத்ததாக, வீட்டிற்கு உள்புறம் பார்ப்பது போல மகாலட்சுமியின் படம் வைக்க வேண்டும். பலரும் மகாலட்சுமியின் படத்தை வீட்டிற்கு வெளிப்புறம் பார்ப்பது போல வைப்பார்கள். அவ்வாறு செய்யக்கூடாது.

வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதிலும் பூஜையறையையும், சமையலறையையும் மிகவும் தூய்மையாக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். பூஜையறையில் நல்ல நறுமணம் எப்போதும் வீசிக்கொண்டே இருக்க வேண்டும். இதனால்தான் ஊதுபத்தி, சாம்பிராணி இதையெல்லாம் போட வேண்டும் என்று சொல்வார்கள். நெய் விளக்கு தீபம் போட்டு தெய்வத்தை வணங்க வேண்டும். வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்கள் மற்றும் கன்னிப் பெண்களுக்கு குங்குமம் கொடுத்து வழி அனுப்பி வைக்க வேண்டும். வீட்டிற்கு வரும் விருந்தினரை மகிழ்ச்சியோடு வரவேற்று அவர்களுக்கு சாப்பிட ஏதாவது தர வேண்டும். அப்படியில்லையேல் கண்டிப்பாக ஒரு டம்ளர் தண்ணீராவது தர வேண்டியது மிகவும் அவசியமாகும். வெள்ளிக்கிழமை பூஜையறையில் நாணயத்தை மகாலட்சுமியை நினைத்து பூஜை செய்து ஒரு தட்டில் குவியலாக வைத்திருந்தாலும் மகாலட்சுமியின் கடாட்சம் கிட்டும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் உடலைப் பற்றி உங்களுக்குகே தெரியாத 20 உண்மைகள்!
Mahalakshmi worship

குபேரனுக்கு உணவு வகைகளில் ஊறுகாய் மிகவும் பிடித்த பொருள். அதனால் வீட்டில் எப்போதுமே ஊறுகாய் மற்றும் உப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும். அது மட்டுமில்லாமல், மஞ்சள் வீட்டில் குறைவின்றி எப்போதும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

வெள்ளிக்கிழமையன்று மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெற்று தரும் ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரத்தை சொல்வது மகாலட்சுமியின் அருளை முழுமையாகப் பெற்றுத் தரும். வீட்டில் உள்ள பூஜையறையில் சாமி படங்களை வாரம் ஒருமுறை நன்றாகத் துடைத்து, பொட்டு வைத்து வழிபடவேண்டும்.

பூஜையறையில் காலை, மாலை இருவேளையும் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். அவ்வாறு செய்யும்போது வீட்டின் முன்பக்க வாசலை திறந்து வைத்திருக்க வேண்டும். பின்பக்க வாசலை கட்டாயம் மூடிவிட வேண்டும். ஏனெனில், முன்பக்க வாசல் வழியாக மகாலட்சுமியும், பின்பக்க வாசல் வழியாக மூதேவியும் வருவதால் அவ்வாறு சொல்லப்படுகிறது. எனவே, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகுவதற்கு இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதுமானது. மகாலட்சுமி தாயார் வீட்டில் எப்போதும் வாசம் செய்வாள் என்பதில் ஐயமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com