
உலகத்தில் பிரச்னை என்று கிடையாது. வாழ்க்கையில் பலவிதமான சூழல்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. உங்களால் புரிந்து கொள்ளமுடியாத சூழல்களை பிரச்னைகள் என்று முத்திரை குத்தி விடுகிறீர்கள். அவ்வளவுதான். வெளிச்சூழல்களை நமக்கு ஏற்றார்போல் எல்லா சமயத்திலும் மாற்ற இயலாது
நீங்கள் புத்திசாலியாக இருந்தால் சாதகமான சூழ்நிலைக்காகக் காத்திருக்க மாட்டீர்கள். சூழ்நிலை எப்படி இருந்தாலும் அதை எப்படி உங்கள் முன்னேற்றத்துக்கு சாதகமாக்கி கொள்வது என்று பார்ப்பீர்கள்.
கல்லறை ஒன்றில் ஒருவன் முட்டி மோதி அழுது கொண்டிருந்தான். அவன் "ஐயோ, கல்யாணமான கொஞ்ச நாளில் உன்னை விதி இழுத்துக் கொண்டு விட்டதே. நீ இறக்காமலிருந்தால் என் வாழ்க்கை இப்படி தடம் புரண்டிருக்குமா" என்று புலம்ப அதைப்பார்த்த ஒருவர் அடடா, உங்கள் துக்கம் என்னை வருத்துகிறது. இங்கே புதைக்கப்பட்டது உன் மனைவியா" என்றார்.
"இல்லை என் மனைவியின் முதல் கணவன்" என்றான் அவன். புரிகிறதா?. ஒருவருக்கு வரமாகத் தோன்றுவது இன்னொருவருக்கு சாபமாகத் தெரியலாம்.
மனிதர்களில் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு துறையில் திறமையான வராக இருப்பர். ஒருவர் புராதனப் பொருட்களை வியாபாரம் செய்து வந்தார். வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு சுற்றுலா பிரயாணியிடம் ஒரு மண்டையோட்டைக்காட்டி அது துவாரகா கிருஷ்ணரின் மண்டையோடு என்று கூற, பிரயாணியும் வாங்கிச் சென்றார். இதைப் பார்த்த இன்னொரு வெளிநாட்டுக்காரர் இது தெரிந்திருந்தால் நானே வாங்கி இருப்பேன் எனக் கூற, உடனே வியாபாரம் செய்பவர் "கவலைப்படாதீர்கள். உங்களுக்காகவே ஒரு சின்ன மண்டையோடு வைத்திருக்கிறேன். அது சின்ன வயது கிருஷ்ணன் மண்டையோடு" என்றார். இப்படி பணம் சம்பாதிப்பதில் வெற்றி அடையலாம். அப்படி பிழைப்பவர்களை புத்திசாலி என்று அழைக்க முடியாது.
அவர்களால் தொழில் தொடர்பற்ற மற்றசூழல்களை அனுசரிக்க முடியாதபோது தொழில் சாமர்த்தியம் அர்த்தமற்றதாகிவிடும். ஒரு குறிப்பிட்ட சூழலை நீங்கள் விரும்பவில்லை என்றாலும் அந்த சூழலை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதில்தான் பிரச்னைக்கான தீர்வு இருக்கிறது. ஒரு அரசன் கெட்ட கனவு கண்டான். அதைப் பற்றி. அறிந்து கொள்ள ஜோசியர்களை வரவழைத்தான். முதல் ஜோசியர் ஓலைச்சுவடியைப் பிரித்துப் பலன் சொன்னார் "கெட்ட சேதி. உன் கண்முன்னே உறவினர்கள், குழந்தைகள் இறப்பார்கள்" என்றான். கோபமடைந்த அரசன் அவரைச் சிறையில் அடைத்தான்.
அடுத்த ஜோசியர் "நல்ல சேதி, உன் ஆயுள் கெட்டி. உன் உறவினர் குழந்தைகள் மனைவி இவர்களுக்குப் பின்னரும் நீ நெடுங்காலம் வாழ்வாய்" என்றார். அரசன் மகிழ்ந்து பொன் பொருள் கொடுத்து அவரை மகிழ்வித்தார். இருவரும் ஒரே விஷயத்தை முதல்வர் முட்டாள்தனமாக வரும், மற்றொருவர் புத்திசாலித்தனமாக வும் வெளிக்காட்டினர்.
பிரச்னையாக இல்லையா என்பது நிகழ்வில் இல்லை. கிடைத்ததை வைத்து வாழ்வில் மேல்நோக்கி போவது எப்படி என்று பார்ப்பதால் புத்திசாலித்தனம்.