
ஒரு மனிதனுக்கு வாக்கு மிக மிக முக்கியம். அதை எந்த மனிதரிடம் கொடுக்கப்படுவதாக இருந்தாலும் சரி. இதில் அறியாத குழந்தையாக இருந்தாலும் சரி, பெரிய மனிதராக இருந்தாலும் சரி எந்த நிலைகளில் உள்ள எந்த மனிதர்களிடம் வாக்கு கொடுப்பதாக இருந்தாலும் அந்த வாக்கில் உண்மையும் உறுதியும் இருக்க வேண்டும்.
ஒரு மனிதன் நாணயஸ்தனாக மாறுவதே அந்த மனிதனின் வாக்கில் உள்ள உண்மையயும் உறுதியும்தான். பொதுவாக யாரும் யாருக்கும் வாக்கு கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுத்தால் அதை கடைபிடிக்க முடியுமா முடியாதா என்பதைத் தெளிவாக சிந்தித்துதான் கொடுக்க வேண்டும்.
எதற்கெடுத்தாலும் வீண் வாக்குகளை அள்ளி வீசுவதில் எந்த ஒரு பயனும் இல்லை. மற்றவர்களால் தங்களுக்குத் காரியங்கள் சாதகமாக நடக்க வேண்டும் என்பதற்காக, மற்றவர்களைத் திருப்தி படுத்துவதற்காக, தாற்காலிக சூழ்நிலைகளை சமாளிப்பதற்காக வாக்குகளை அள்ளி வீசுவதில் எந்த பயனும் இல்லை.
இப்படிப்பட்ட பொறுப்பற்ற செயல்களினால் எத்தனை பேர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது? எவ்வளவு முன்னேற்றங்கள் தடைபட்டுப் போகின்றன? அப்படி அள்ளி வீசப்படுகின்றன வாக்குகளை நிறைவேற்ற முடியாமல் போகும்போது அவைகளை சமாளிப்பதற்காக, வாக்கு தவறியதை மூடி மறைப்பதற்காக அளவிட முடியாத பொய்யும் புரட்டுகளும், காரணங்களும் ஜோடித்து வேறு கொடுக்கப்படுகின்றது.
இதனால் தற்காலிகப் போலி தீர்வும், தப்பித்துக் கொள்கின்ற, பிரச்னைகளிலிருந்து விடுபடுகின்ற மாயையான வாய்ப்புகள்தான் உருவாகுமே தவிர, நிலையான நீண்ட காலத்துக்குரிய உண்மையானத் தீர்வும் விடுதலையும் அடைய முடியாமல் போகிறது.
இத்தகைய செயல், தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கின்ற, தனக்குத்தானே செய்து கொள்கின்ற துரோகம். இதுபோன்ற துரோகச் செயல்களால் சம்பந்தப்பட்ட ஒருவருக்கு மற்றவர்களால் செய்யப்படுகின்ற தீமைகளையும், துரோகங்களையும் விடத் தனக்குத்தானே செய்து கொள்கின்ற துரோகங்கள்தான் அளவிட முடியாதது.
அதனால்தான் அவரவருடைய வாழ்க்கையும், உள்ளமும், மனமும் அவர்கள் அறியாமலேயே அவர்கள் உணராமலேயே பற்பல பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகுகின்றது. வாக்கு தவறுதல் என்பது ஒரு தவிர்க்க முடியாத காரியம். வாக்கு தவறுவதற்கான உண்மைக் காரணம் கொடுக்கப்பட வேண்டும். வாக்குத் தவறுதலின் உண்மை நிலையையும் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். மீண்டும் வாக்கு தவறாமல் வாக்கு தவறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் உண்மையாகவும் உறுதியாகவும் இருக்கவேண்டும். காலம் உயிருக்குச் சமம். அந்தக் காலக்கட்டொழுங்கோடு காரியங்களை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும்.
கொடுத்த வாக்கின்படி குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் இருக்க வேண்டும். கால நேர கட்டொழுங்கும் நேர நிர்வாகமும் ஒரு மனிதனை உயர்த்துவதற்காக செயல்பாட்டு வழிமுறைத் திட்டங்களில் மிக மிக முக்கியமான ஒன்றாகும். இந்த வழிமுறைகள் திட்டத்தை முழுமையாக பழகிக்கொண்டு கடைபிடிக்க வேண்டும்.
பழக்கங்கள்தான் வழக்கங்கள் ஆகின்றன. அந்த வழக்கங்கள் வாழ்க்கையாகி விடுகின்றது. இதன் அடிப்படையில் காலநேரக் கட்டொழுங்கை , வாக்கு கொடுத்தபடி முறையாக முழுமையாக செய்திட கடைபிடித்திட பழகிக்கொள்ள வேண்டும்.