
ஒவ்வொரு மனிதனின் முடிவான, இறுதியான ஒட்டு மொத்தமான நோக்கம் என்ன தெரியுமா? மகிழ்ச்சியாக இருப்பதுதான்.
கவலையை முறியடித்து எப்போதும் மகிழ்ச்சிகரமாகவே வாழ விரும்பினால் எப்போதும் பெரிதாகவே சிந்தியுங்கள்.
வாழ்வில் முன்னேற மட்டுமல்ல; நாம் எப்போதும் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும். இதற்காகப் பெரிய திட்டங்களை நம்பிக்கையுடன் சிந்தித்தால் போதும். பெரிய நம்பிக்கைகளை அடைய நமக்குத் தடையாக இருப்பது நமது வாழ்க்கைச் சூழ்நிலை அல்ல.
எதிர்மறைச் சிந்தனைகளையே தொடர்ந்து நினைப்பதுதான். இதனால்தான் பயந்துகொண்டே இருந்தது, நடந்து விடுகிறது.
இதற்கு மாறாக வெற்றியையே, பெரிய அளவில் கனவு கண்டதையே, 'நடந்துவிடும் நடந்துவிடும்' என்று நம்பிக்கை குறையாமல் உறுதியுடன் சிந்தித்தால் போதும்; நிச்சயம் நல்லதே நடந்துவிடும்.
தொடர்ந்து நல்ல எண்ணங்களையும், விரும்பும் வெற்றியையும் சிந்தித்தால் அவை உறுதியாக நிஜமாகிவிடும். இரு வழிகள் உள்ளன. இந்த இரண்டையும் தொடர்ந்துபின்பற்றினால் நம் மனம் விரும்பிய மகிழ்ச்சியான வாழ்வும் வெற்றியும் உறுதியாக உண்டு.
‘’அறிவைவிடக் கற்பனை முக்கியம்" என்ற ஆல்பாட் ஜன்ஸ்டீனின் பொன் மொழியைப் பின்பற்றி, உங்களுக்குப் பிடித்தமான ஒன்றைப் பெரிய அளவில் செய்து முடிப்பதாக கனவு காணுங்கள். அதாவது, கற்பனையில், 'இப்படிப்பட்ட வாழ்க்கைதான் வேண்டும்' என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.
அடுத்து, நீங்கள் கற்பனை செய்த வாழ்க்கையை நிஜத்தில் அடைய துணிவுடன் முயற்சியில், செயலில் இறங்குங்கள்.
துணிவுடன் செயலில் இறங்கினால்தான் இலட்சியங்களுக்கு மட்டுமல்ல; பிரச்னைகளுக்கும் தீர்வுகாண முடியும். துணிவுடன் செயல்பட முன் வராததால்தான் அனைத்தும் கடினமாகத் தெரிகிறது 'உலகில் ஒரு சிறிது துணிவு இல்லாததால்தான் பல திறமைகள் சிதறிப் போகின்றன என்கிறார். பிரிட்டன் பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரேலி.
'எப்போதும் பெரிதாகவே சிந்தியுங்கள்' என்று இவர்தான் அடிக்கடி கூறுவார். மேலே குறிப்பிட்ட இரண்டு பொன்மொழிகளையும் கூற முழு அளவு தகுதி படைத்தவர் இவர். காரணம், பிரிட்டிஷ் பிரதமரான ஒரே யூதர் இவர் மட்டுமே. அந்த அளவிற்கு பெரிய கனவைக் கண்டு அதை நிஜமாக்கிக்கொண்டவர் இவர்.
நாமும் இவரைப்போல் வாழ்வில் உயரமுடியும். பெரிய லட்சியத்தை நமது கற்பனைக்கு ஏற்ப நம்பிக்கையுடன் அமைத்துக்கொள்ள வேண்டும். பிறகு துணிவுடன் செயலில் இறங்கவேண்டும்.
கனவு காணவும், செயலில் இறங்கவும் துணிவுடன் செயல்பட்டால் நாம் நினைத்தது எல்லாம் நடக்க ஆரம்பிக்கும்.
லட்சியத்தை நினைவில் வைத்துக்கொண்டு தடைகளின் மூலம் தோல்விச் சிந்தனைகள் நமது மூளைக்குள் புகுந்துவிடாமல் பார்த்துக் கொண்டால் எப்போதும் வெற்றிதான்' என்ற செயல் நோக்கத்துடன் உற்சாகமாக முயற்சி செய்யுங்கள்.இதனால், எதிர்மறைச் சிந்தனைகளைச் சிந்திக்காமல் இருப்பதால், நீங்கள் நினைத்ததைப்போல் நடக்க ஆரம்பித்துவிடும்.
தடைகள் எதிர்ப்படும் போதும், தோல்விச் சிந்தனைகள் தோன்றும் போதும் உங்களின் பெரிய கனவை அடைய என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே உறுதியாகச் செய்து வாருங்கள். இதுவே வாழ்வின் மிக முக்கியமான வெற்றி ரகசியம். பயன்படுத்தப் பயன்படுத்த, உங்கள் வாழ்க்கை மிக சுகமாக அமையும்.