
நம் அன்றாட வாழ்வில் நாம் எதிர்நோக்குவது எப்போதும் பிரச்னைகளைத்தான். பிரச்னைகளை நம் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கங்கள். அதனால் ஐயோ… பிரச்னை வந்துவிட்டதே என்று கலங்காமல் அடுத்த வினாடியே இந்தப் பிரச்னையை சமாளிப்பது எப்படி என்று யோசிப்பவன்தான் வாழ்வில் வெற்றி அடையும் மனிதன்.
இன்றைய சூழலில் அன்றாடம் புதுப் புதுப் பிரச்னைகள் வந்தவண்ணம் இருக்கின்றன. குறிப்பாக வேலை பார்க்கும் சூழல் முன்பு போல் இல்லாமல் முற்றிலும் மேற்கத்திய பாணியில் மாறிவிட்டது. அதில் பல நன்மைகள் இருந்தாலும் சில பிரச்சினைகளும் உள்ளன.
இன்று வேலை செய்யும் இளைஞர்களுக்கு இரண்டு முக்கிய பிரச்னை. ஒன்று அவர்களுடைய ஊதியம். இரண்டு செய்யும் வேலையில் மனத்திருப்தி. இதில் ஏதாவது ஒன்றில் பிரச்சினை வந்தால் கூட அவர்களது இரவு தூக்கம் கெட்டுவிடும்.
காரணம் இன்றைய சமுதாய சூழல் அப்படி. வேலையில் திருப்தி என்பது மிக முக்கியமான அம்சம். முதலில் வேலைக்கு சேரும் போது இந்தப் பிரச்சினையின் ஆழம் இளைஞர்களுக்குப் புரியாது. அப்போது கிடைக்கும் சம்பளம் மட்டுமே பெரிதாகத் தெரியும்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அது செல்லரிப்பது போன்று அவர்களை அரித்துவிடும். இந்த திருப்தியற்ற உணர்வு முதலில் மெல்ல நுழைந்து பின் அது அவர்கள் மனத்தை முழுமையாக ஆக்கிரமித்து கடைசியில் அவர்களுடைய தனித்தன்மையை ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் எல்லாவற்றையும் குலைத்துவிடும்.
அதோடு அவர்களை மனதளவில் செயலற்று போகச் செய்துவிடும்.
அதனால் இந்த மாதிரி உணர்வு ஏற்படும்போது அதிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள முயலவேண்டும். அதற்கு எந்தச் சூழலையும் சமாளிக்க முடியும் என்று 'என்னால் முடியும்' என்ற எண்ணம் அந்த இளைஞனுக்குள் இருக்க வேண்டும். சாதாரணமாக செய்து கொண்டிருக்கும் வேலையில் தனக்குப் போதுமான திருப்தி இனி இந்த நிறுவனத்தில் இதற்கு மேல் வளர்ச்சிக்கு வாய்ப்பில்லை என்ற சூழ்நிலை வரும் போது தன்னுடைய அந்த மனநிலையை புரிந்து கொண்டுதான் தேடும் திருப்தி வேறு இடத்தில் அதாவது வேறு நிறுவனத்தில் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
அப்படித் தேடுவதில் தவறேயில்லை அப்படி மாறும்போது நாம் மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அவைகளைக் கடைபிடித்தால் ஒரு புதிய அனுபவத்தை நாம் உணரலாம்.
நாம் விரும்பாத சூழ்நிலையிலிருந்து வெளியே வரவேண்டும் என்று முடிவு செய்தவுடன் நாம்தான் அதற்கான முதல் முயற்சியை எடுக்க வேண்டும். நாம் இருக்கும் சூழ்நிலை நமக்கு மூச்சு முட்டுவது போன்று நிலையை ஏற்படுத்தும் போது அதைவிடசிறந்த சூழலைத் தேடி போகவேண்டும்.
இப்போது செய்து கொண்டிருக்கும் வேலையையே வேறு ஒரு நிறுவனத்தில் செய்வது என்பது நிச்சயமாக ஒரு சிறந்த மாற்றம். அது உங்கள் மனக்கவலையைத் தீர்க்கும் மருந்தும் இல்லை. காரணம் இந்த மாற்றத்தினால் உங்கள் சூழலும் உங்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் மட்டுமே மாறுகிறார்களே தவிர உங்களுக்கு சலிப்பைக் கொடுத்த வேலை மாறப்போவதில்லையே. அதனால் இதைத் தவிர மாற்று வழிகள் இருக்கின்றனவா என்று யோசித்துப் பார்த்து என்னால் முடியும் என்ற வார்த்தையை மனதில் நிறுத்தி அடுத்த கட்டத்தை அடைய முற்பட வேண்டும்.