
அரிது அரிது மானிடனாய் பிறத்தல் அரிது' என்ற சொல்லுக்கு ஏற்ப மானிட பிறவி எடுத்த நாம் எல்லோரையும்போல் பிறந்தோம், வளர்ந்தோம், இருந்தோம், மடிந்தோம் என்றில்லாமல் ஏதாவது செய்ய வேண்டும் என்ற சாதனை வேண்டும்: எல்லா மனிதனுக்கும் தான் அடைய வேண்டும் என்ற இலக்கு ஒன்று இருக்கவேண்டும்.
முதலில் நாம் சாதிக்க வேண்டியது என்ன என்று இனம் கண்டு கொள்ள வேண்டும். அப்படி நாம் சாதிக்க நினைப்பதைப் பற்றி யோசிக்கும் போது முதலில் நாம் செய்யவேண்டியது ஒரு சின்ன சுய பரிசோதனை. அந்தச் சுயபரிசோதனை உண்மையானதாக இருக்க வேண்டும் .முதலில் நமக்கு நாமே உண்மையாக இருந்தால்தான் நம்மால் நாம் செய்யும் வேலைக்கு நம்முடன் பணியாற்றுபவர்களுக்கு உண்மையாக இருக்க முடியும்.
நம்முடைய ஒவ்வொரு செயலிலும் செய்கையிலும் பேச்சிலும் உண்மை இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் நினைத்த வாழ்க்கையை விரும்பிய இலக்கை நம்மால் அடைய முடியும்.
அதை விடுத்து சுயபரிசோதனை ஆரம்பக் கட்டத்திலேயே நாம் 'பொய் சொல்ல ஆரம்பித்துவிட்டால் அப்புறம் நம் வாழ்வில் முன்னேற்றம் என்பது கனவில் மட்டுமே நடக்கும் ஒரு நிகழ்வாகிவிடுமே தவிர நிஜத்தில் நடக்கும் ஒன்றாகக் கண்டிப்பாக இருக்காது.
சுயவிமர்சனம் என்பது சும்மா நம்முடைய தகுதிகளை மட்டும் அலசிப் பார்ப்பது இல்லை. அதோடு நிற்காது சுயவிமர்சனம். ஒரு குறிப்பிட்ட வேலைக்கு ஏற்ற உடல் வலிமையும், மன வலிமையும் நம்மிடம் இருக்கிறதா என்று பார்ப்பதும் சுயவிமர்சனம்தான்.
சில நேரங்களில் குறிப்பிட்ட வேலைக்கு ஏற்ற ஆற்றல் இருக்கலாம். ஆனால் அந்த வேலையைச் செய்வதற்கான மன வலிமை நம்மிடம் இல்லாமல் போகலாம். சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட வேலைக்குச் செல்ல நமக்கு ஆசை இருக்கலாம். ஆனால் அதற்கேற்ற உடல் வலிமை நம்மிடம் இல்லாமல் போகலாம். இவற்றையும் அலசுவதுதான் சுயவிமர்சனம்.
சுயவிமர்சனம் என்பது முழுமையாக ஆராய்ந்து பார்த்து எடுக்கும் சரியான முடிவாக இருந்தால்தான் நாம் நுழையும் துறையில் நம்மால் பிரகாசிக்க முடியும். முடிவு சரியானதாக இருக்க இந்த நியாயமான சுயவிமர்சனம் உதவும். முடிவு எடுக்துவிட்ட பின் நம்முடைய இலக்கு என்ன என்று நிச்சயம் செய்துகொள்ள வேண்டும். இந்த இரண்டும் நம் வாழ்வின் முக்கியமான செயல்கள். இதில் சிறு தவறு நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமை.