
காதல் இல்லாத உயிரே இல்லை. பொதுவாக காதல் என்றாலே ஒரு ஆணும் பெண்ணும் நேசிப்பதாகத்தான் இவ்வுலகத்தில் கருதுகிறார்கள். ஆனால் அது தவறு. காதல் என்றால், கணவன் மனைவிக்கும், சகோதர சகோதரிகளுக்கும், உற்றார் உறவினர்களுககும், பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கும், நண்பர்களுக்கு இடையிலும் இப்படி யாருடன் வேண்டுமானாலும் கொண்டுள்ள நேசத்தை குறிக்கும்.
காதல் என்பது ஒரு தரப்பட்சமாகவோ அல்லது இருதரப்பிலும் இருக்கலாம். ஆக ஒருவர் இன்னொருவரை நேசிப்பதுதான் வழக்கமாக இருக்கிறது, இல்லையா?? நீங்கள் எப்போதாவது யோசித்து பார்த்தீர்களா, ஏன் நம்மை நாமே காதலிக்க கூடாது?? என்று.
நம்மை நாமே காதலிக்கவில்லை என்றால், நம்மை அடுத்தவர்களோ அல்லது நாம் அடுத்தவர்களையோ நேசிப்பதால் என்ன லாபம்??
நீங்கள் உங்களை தனக்குத்தானே நேசிக்க ஆரம்பித்தால்தான் காதலின் பரிபூர்ண ஆனந்தம் கிடைக்கும்.
நீங்கள் ஏன் தேவையின்றி அடுத்தவர்களோடு ஒப்பிட்டு கொண்டு உங்களை தாழ்த்திகொள்ள வேண்டும்? இதற்கு காரணம் என்ன என்று யோசித்து பார்த்தால் உண்மை புரியும். அதாவது நீங்கள் உங்களை நேசிக்காத தருணத்தில் உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்கிறீர்கள். நாம் எல்லோருமே எதாவது ஒரு விதத்தில் தனித்துவம் வாய்ந்தவர்கள். ஆகவே, உங்களுக்குள்ளும் ஏராளமான திறமைகளும் கற்பனைகளும் பொதிந்து கிடக்கும். அதைக் கண்டறியும்போது உங்கள் திறன் தானாகவே மேம்படும். உங்க சுயமரியாதையை நீங்களே ஏன் குறைத்துக்கொள்ள வேண்டும்.
நீங்கள் தனக்குத்தானே உங்களை நேசித்து பாராட்டி பெருமை படுத்தி கொள்ளுங்கள். உங்களை நீங்கள் எப்போது நேசிக்க தொடங்குவீர்களோ அப்போதுதான் அடுத்தவர்களிடம் நீங்கள் கொண்ட காதலின் மதிப்பு கூடும்.
தனக்குத்தானே வெறுப்பை உண்டாக்கிக் கொள்ளாதீர்கள். உங்களின் மீது நீங்களே வெறுப்பாக இருப்பது என்பது தனக்குத்தானே தலையில் சேற்றை அள்ளி போட்டு கொள்வதற்கு சமமாகும். முதலில் நீங்கள் உங்களை சந்தோஷமாக வைத்திருக்க முயற்சி செய்யவும். எனக்கென்ன, முக்கால் வாசி வாழ்க்கையில் கஷ்டத்தை முழுவதும் அனுபவித்துவிட்டேன், இனி வாழ்ந்தால் என்ன? இல்லை இந்த உயிர் போனால்தான் என்ன? என்று ஒரு சில பேர் தனக்குத்தானே புலம்பிக் கொண்டு தன்னையே இழிவு படுத்திக் கொள்வார்கள். இது எந்த விதத்தில் நியாயமாகும்? ஒருவேளை இதையே நீங்கள் அடுத்தவர்களிடம் பேசினால் அவர்களின் மனம் கஷ்டபடும் இல்லையா? அதைப் போலதானே உங்கள் மனமும் கஷ்டப் படும். உங்கள் மனதை நீங்களே ஏன் குத்திக் கொல்ல வேண்டும்?
தோல்வியை கண்டு பயப்படாதீர்கள். ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் தோல்விகளை நீங்கள் ஏற்கத் தொடங்கும்போது, நீங்கள் உங்களை மன்னிக்கவும் கற்றுக்கொள்ள ஆரம்பிப்பீர்கள். பிரச்னைகளை தீர்க்க தீர்வுகளையும் தேட ஆரம்பிப்பீர்கள்.
உங்களை நீங்களே காதலிக்கும்போது தான் ஆரோக்கியமான உணவுகளை எடுப்பது உங்களை அழகுபடுத்துவது, உங்கள் எடையை பராமரிப்பது, உடற்பயிற்சி செய்வது, முகத்தில் புன்னகை என்று நீங்களே உங்கள் அன்றாட வாழ்க்கையை மாற்றி அமைத்து கொள்ள தொடங்குவீர்கள்.
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் உங்களை நேசிக்க ஆரம்பிக்கும்போது தான் உங்களை நீங்களே கவனித்துக்கொள்ள ஆரம்பிப்பீர்கள். உங்க மன மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்பட ஆரம்பிக்கும்.
ஆதலில், தனக்குத்தானே காதல் செய்வீராக!