
"பிறரைப்போல நன்றாக வாழவேண்டும்" என நினைப்பது தவறில்லை. ஆனால், விலை உயர்ந்த செல்போன் வைத்திருப்பதும், காரில் செல்வதும், புதிய வீடு கட்டுவதும்தான் வெற்றியின் அடையாளம்' என நினைப்பதில்தான் சிக்கல்கள் உருவாகின்றன.
அடுத்தவர்களின் பொருட்கள்தான் அவர்களுக்கு மரியாதையையும் மகிழ்ச்சியையும் தருகிறது என்ற எண்ணம் ஒருவரது மனதில் உருவாகும்போது பல்வேறு எதிர்பாராத நிகழ்வுகள் நிகழ்ந்து விடுகிறது. இதனால்தான் நம்மிடம் இல்லாமல் இருக்கும் பொருட்கள் மற்றவர்களிடம் இருந்தால் அவற்றை நாம் வெற்றியின் சின்னங்களாக நினைத்துக்கொள்கிறோம்.
மற்றவர்கள் வைத்திருக்கும் விலை உயர்ந்த பொருட்கள்தான் அவர்களது வெற்றியை உறுதி செய்கிறது என்ற எண்ணத்தை வெற்றியடைய விரும்புபவர்கள் தவிர்ப்பது நல்லது.
அளவுக்கு மீறி, அதிக வட்டிக்குக் கடன்வாங்கி விலை உயர்ந்த குளிர்சாதன காரில் செல்பவர்களில் பலர் வாங்கிய கடனுக்கு வட்டிகூட கட்ட முடியாமல் மன அழுத்தத்தோடும் பயத்தால் உருவாகும் வியர்வை துளிகளோடும் அந்தக்காரில் செல்கிறார்கள் என்ற உண்மையை மற்றவர்கள் புரிந்துகொண்டால் வெற்றி என்பது "விலை உயர்ந்த பொருட்கள் மட்டும் வைத்திருப்பது அல்ல என்பது விளங்கும்.
நம்மிடம் இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள் நமக்கு மகிழ்வைத் தரவேண்டுமென்றால் அந்த பொருட்கள் உழைப்பின் வெற்றியாலும், நேர்மையான எண்ணத்தினாலும் வாங்கப்பட வேண்டும். படிப்பைத் தியாகம் செய்து குறுக்குவழியில் வாங்குகின்ற பொருட்கள் அதிக அளவில் வேதனையைத் தந்துவிடும். குறிப்பாக - இளம்வயதில் சிறந்த முறையில் பாடங்களைப் படித்து உண்மையான வெற்றியைப்பெற முயலுவது பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு நல்லது.
வெற்றியாளராக ஒருவர் திகழ என்ன செய்யவேண்டும்?" - என்பதை பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ச்சுனனுக்குச் சொன்ன உபதேசம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
மான அவமானங்கள், ஏமாற்றங்கள், நிலைகுலைந்து போகச்செய்யும் கால சூழ்நிலைகள், நம்பிக்கைத் துரோகங்கள், செய்யும் காரியத்தில் நஷ்டங்கள், வஞ்சக சூழ்ச்சிகள், எதிர்ப்புகள், உறவினர், நண்பர்களின் சூதுகள், அன்பின் இழப்புகள் போன்ற வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளான போராட்டங்களையெல்லாம் மன உறுதியுடனும், துணிச்சலுடனும் எதிர்கொள்கின்ற மனிதனே மிகச்சிறந்த பராக்கிரமம் பொருந்திய வெற்றியாளனாக பரிணமிக்கிறான்"- என்பது பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் வாக்கு.
ஆகவே, இல்லாததை நினைத்து ஏக்கப் பெருமூச்சுக்கள் விட்டு வாடுவதைவிட, இருப்பதைக்கொண்டு மனநிறைவோடு செயல்பட்டு வெற்றியை நோக்கி, நேர்மையோடு பயணம் செய்தால் வெற்றி, நம் பக்கம் தானாக வந்து சேர்ந்துகொள்ளும்.