

சிந்திக்காமல் வாழ்ந்தால் வாழ்க்கை ஒரு சுமை. சிந்தித்து வாழ்ந்தால் வாழ்வு ஒரு சுவை. உண்மை எதிலும் உண்மை. ஒளிவு மறைவில்லாத வாழ்வு. அதுவே உன்னத வாழ்வு. ஒருவன் எப்போதும் திறந்த மனத்தோடும் திறந்த உள்ளத்தோடும் வாழ்தல் அவசியம்.
நாம் நன்றாக யோசித்துப் பார்த்தால் தவறான வாழ்வு மேற்கொள்ளும்போது மட்டுமே நாம் பொய் கூற வேண்டி வருகிறது என்ற உண்மையை உணரலாம். இந்தப் பொய்யான வாழ்வு நமக்குத் தேவையில்லையே! பொய்மையுடன் வாழ்கின்ற ஒருவனது வாழ்க்கை எப்போதுமே வறண்ட பாலைவனமாகத்தான் இருக்கும்.
நேர்மை வழியில் நடக்கும்போது நாம் எவர்க்கும் எதற்கும் அஞ்சவேண்டியதில்லை. எவர்க்கும் எதையும் நாம் மறைக்க வேண்டிய அவசியமுமில்லை. ஒரு மனிதனின் வாழ்வு திறந்த புத்தகமாய் இருத்தல் வேண்டும். உண்மைக்கு மதிப்பளித்தல் என்பது வாய்மை பேசுதல் மட்டுமன்று, நேர்மையின் வாழ்வும் அதுவே. தவறுகள் செய்யும் போது தவற்றை ஒத்துக் கொள்வது கூட வாய்மைதான். தவற்றைத் திருத்திக்கொள்வதும் உண்மையே. இனி இதுபோல் செய்தல் கூடாது என்று நினைக்கும்போதே வாய்மை வந்துவிடுகிறது.
முதலில் நமது தவறுகளை நாமே நியாயப்படுத்திக் கொள்ளல் கூடாது. அப்படி நியாயம் கற்பிக்க ஆரம்பித்தால் பொய்மை பெருகும். 'இதுதான் வாழ்வு' என்று ஒரு கோடு போட்டுக் கொண்டு நாம் வாழ்தல் வேண்டும். இந்தக் கட்டுப்பாடு நமக்கு மிகவும் அவசியமானதொன்று. மனம் போன போக்கில் நாம் போகக் கூடாது. இதனைத்தான் கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடலில், "கண்போன போக்கிலே கால் போகலாமா? கால்போன போக்கிலே மனம் போகலாமா? மனம்போன போக்கிலே மனிதன் போகலாமா...? மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?" என்று கேட்கிறார்.
எது உண்மையான வாழ்வு என்றால், சட்டங்கள், நியாயங்கள். தருமங்கள் மீறப்படாத வாழ்வே சத்திய வாழ்வு. தவறு செய்து, தவற்றின் தீமை கண்டு, மனிதனின் குறைகள் காலம் காலமாக உணரப்பட்டதன் விளைவே இந்தச் சத்தியம். இந்த நீதிகள், இது நமது ஆன்றோர்களின் ஆயிரமாயிரம் ஆண்டு அனுபவத்தால் உருவாக்கப்பட்ட தர்மம்.
வாய்மை என்பது சிறந்த அறம், வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல அறங்களில் தலையானது இது. எனவே வாழ்வில் பொய்மையை விலக்கி நாம் உண்மைக்கு என்று மதிப்புத் தரும் வேண்டும்.
நாகரிகக் காலத்தின் வெளிப்பாடுதான் உறவு. அதுதான் பாசம். அதுவே வாழ்வின் அடிப்படை அதுவே கட்டுப்பாடு. இந்த உறவு என ஒன்று மட்டும் உருவாக்கிடப்படவில்லை எனில் சட்டம் இருக்காது. சமத்துவம் வராது. பாதுகாப்பு இருக்காது.ஏன், நீதிகள் கூட நிலைக்காது. மனிதன் சுயநல விலங்காய் வாழ்வான்.
தியாகம், அன்பு, இரக்கம், விட்டுக்கொடுத்தல் என்ற உணர்வு களுக்கு இந்த உறவுகள் மட்டுமே அடிப்படை. இதுவே மனிதனை மனிதனாக்குகிறது. பண்பட வைக்கிறது. எனவே வாழ்வில் உறவை வளர்ப்போம்!
உண்மைக்கு முதலிடம் கொடுத்து நமது வாழ்வைத் தொடங்கி 'உண்மையே வாழ்வின் உயிர்' என்பதை உணர்ந்து கொள்வோம்!