
வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் ஒரு நுட்பமான கோடுதான் இருக்கிறது. தோல்விக்கான காரணத்தை நீங்கள் கவனியாமல் விடுகிற அளவுக்கு நுட்பமான கோடு. தோல்வியை, தோல்விக்கான காரணங்களைக் கையாள்வதில் மனோபாவம் முக்கிய பங்குவகிக்கிறது.
ஆப் வித்ரா சிகாகோவில் பூஞ்சைக்காளான் பற்றிய (Mycology) துறையில் துணைப்பேராசிரியர். அவர் 'ஸ்ட்ரா -கார்' என்கிற செயற்கைத் தோலைக் கண்டுபிடித்தார்.
ஸ்ட்ரா காரை மேல் தோலுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். அது இணக்கமானது, ஒட்டிக்கொள்ளும் தன்மை உடையது. உறிஞ்சக் கூடியது. நீரும், காற்றும் உட்புக இடமளிக்கும், ஆனால் பாக்டீரியாவைத் தடுத்துவிடும். வெள்ளை அணுக்கள் தன்னைக் கடந்து செல்லவும், சரும உயிரணுக்கள் வேறிடத்தில் குடியேறவும், வளர்ச்சியுறவும் அது இடமளிக்கும்.
ஸ்ட்ரா-கார் எளிதில் கிடைக்கக்கூடிய கச்சாப் பொருள்களிலிருந்தே செய்யப்படுகிறது. ஆழப்பதிப்பதிலும் (Implant). பைபாஸ் அறுவை சிகிச்சையிலும் அது சம்பந்தப்படுகிறது.
ஸ்ட்ரா-காரை தயாரிப்பதற்கு இருபத்தி ஐந்து ஆண்டுகள் முன்பே அதைப்பற்றி அவர் யோசிக்கத் தொடங்கி விட்டார். அப்போது காளான் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தவர் பிசின் போன்ற ஒருபொருளை தற்செயலாய் கண்டறிந்தார். அதுபுண்கள், தீக்காயங்கள் இவற்றில் சிசிக்சையளிக்க உதவும் என்று பட்டது. மற்ற ஆராய்ச்சிகளுக்கு நேரம் ஒதுக்கியாக வேண்டிய நிலையில் தன்னுடைய யோசனையை 1978- வரை ஒத்திப்போட்டார்.
ஸ்ட்ரா-கார் தயாரிக்கப்பட்டு, நான்காண்டுகள் கழித்த பிறகே அது நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. தன்னுடைய தயாரிப்புக்கு பேடன்ட் (Patent) வாங்க வெகுவாய் சிரமப்பட்டார். ஆனால், சட்டத் தடைகளைக் கடந்து இறுதியில் தமது குறிக்கோளை அவர் அடையவே செய்தார்.
காளான் தொற்றைக் குணப்படுத்தக் கூடிய களிம்பையும் (Crudeaway) அவர் தயாரித்தார்.
ஆராய்ச்சியாளரின் வாழ்க்கையே முயல்வதும் தோற்பதும் மீண்டும் முயல்வதுமாயிருக்கிறது.
வித்ரா கூறுவார், தவறுகள் நேரும்போது ஏனோதானோ என்று இருந்துவிடாதீர்கள். ஒவ்வொரு சாத்தியத்தையும் நன்கு ஆராய்ந்து பாருங்கள்.
''நீங்கள் கண்டிராத வழியை இன்னொருவர் கண்டிருப்பார்"
நீங்கள் ஆராய்ந்திராத கோணத்தில் அவர் ஆராய்ந்திருப்பார். அவரைச் சந்தியுங்கள். உங்களைவிட ஆக்கவளமுள்ளவர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து உழையுங்கள். உதவக் கூடியவர்களைக்கொண்ட ஓர் அமைப்பு எப்போதுமே இருக்கிறது.
தோல்வி எத்தகையதாயினும் நட்பார்ந்த விதத்தில் சேர்ந்து செயல்படுகிறபோது பயனளிப்பதாகிவிடும்.
தோல்வியிலும் ஆக்கபூர்வ மனோபாவத்தைப் பராமரியுங்கள். அதைக்கொண்டு தோல்வியையும் மதிப்புமிக்க ஒரு சொத்தாக்கிக் கொண்டுவிட முடியும்.