
இன்றைய காலகட்டங்களில் நாம் உபயோகிக்கும், கேட்கும் வார்த்தைகள் ஸ்ட்ரெஸ், டென்ஷன் என்பவை. வீட்டிலுள்ள பெண்கள், வேலை பார்க்கும் பெண்கள், சுயதொழில் செய்பவர்கள், பெரிய பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள், ஓய்வு பெற்ற பெரியவர்கள் மட்டுமின்றி படிக்கும் குழந்தைகள்வரை அனைவரையும் ஒருங்கே பாதிக்கும் பிரச்னை ஸ்ட்ரெஸ் என்றால் மிகையல்ல. ஸ்ட்ரெஸ் என்ற மன உளைச்சல் ஏன் ஏற்படுகிறது? அதன் அறிகுறிகள் உடலிலும், மனதிலும் என்னென்ன? அதற்கான தீர்வுகள் என்ன என்பதைப் பற்றி சற்றே விரிவாக இந்த அத்தியாயத்தில்.
உளைச்சல் என்பது நேரடியான அல்லது கற்பனையான ஒரு நிகழ்ச்சி அல்லது செயலை நினைத்து உடலிலும், மனதிலும் ஏற்படும் மிகையான மறுவிளைவே (ரியாக்ஷன்) ஆகும். மன உளைச்சல் நம்முடைய எண்ணம், நம்பிக்கை, நோக்கம் போன்ற அகக்காரணிகளாலோ அல்லது நெருங்கிய உறவினரின் இழப்பு, வாழ்க்கை மாற்றம் மற்றும் வேறு துயர சம்பவங்கள் போன்ற புறக்காரணிகளாலும் ஏற்படலாம்.
நாம் எந்த வேலையை செய்யவேண்டும் என்றாலும் ஒரு உத்வேகம் தேவை. எதிலும் ஒரு உந்துதல் இருந்தால் மட்டுமே உடலும், மனமும் அச்செயலை செய்வதற்கு தேவையான வகையில் தன்னை தயார் செய்து கொள்ளும்.
இச்செயலுக்கு நமக்கு ஓரளவு ஸ்ட்ரெஸ் தேவையே. இதைத்தான் நேர்மறை அழுத்தம் என்று அழைக்கிறோம். அதேபோல் ஒரு ஆபத்தான சூழலில் மாட்டிக் கொண்டோம். தப்பித்து ஓடவோ, எதிர்த்து சண்டையிடவோ வேண்டுமென்றால் அதற்கு நம் உடலுக்கும்.
மனதிற்கும் தெம்பு அல்லது சக்தி வேண்டும். இதுவும் தேவையான அழுத்தமேயாகும். ஆனால் இவ்வாறு அவசியத்திற்கு என்றில்லாமல் கற்பனையான பயத்தினாலும், பதற்றத்தினாலும் உடலிலும், மனதிலும் அடிக்கடி இவ்வழுத்தம் ஏற்பட்டால் அது நாள்படவும் தொடர்ந்தால் உடலிலும், மனதிலும் ஒரு தளர்வையே ஏற்படுத்தி விடும். அதிகமாய் இழுக்கப்பட்ட ரப்பர் பேண்ட் அல்லது எலாஸ்டிக்பட்டை எப்படி தளர்ந்துவிடுமோ அதுபோல.
சரி இந்த ஸ்ட்ரெஸ் என்ன மாதிரி அறிகுறிகளை உண்டு செய்யும் என்று பார்த்தால், ஆரம்ப அறிகுறிகள் அதிக இதயதுடிப்பு, வேகமான மூச்சு, உடல் சூடு குறைந்து விடுதல், அட்ரீனல் சுரப்பியின் செயல்பாடு அதிகரித்தல் போன்றவைகளாகும். இது நாள்பட தொடர்ந்தால் வீட்டிலோ, வேலையிலோ, பள்ளியிலோ உற்சாகமின்மை, தனிமையாய் இருக்க விரும்புதல், சாப்பாட்டு பழக்க வழக்கங்களில் மாற்றம் தூக்கமின்மை அல்லது அதிகமாய் தூங்குதல், கோபம், எரிச்சல், உடற்சோர்வு, தலைவலி போன்றவைகள் உண்டாகும்.
இது மேலும் தொடர்ந்தால் மன அழுத்தம் என்ற டிப்ரஷனில் கொண்டு விட்டுவிடும். இதை இந்நிலையிலேயே முயற்சியுடன் மாற்றிக் கொண்டோம் என்றால் மேற்கொண்டு விளையும் சிக்கல்களில் இருந்து விடுவித்துக் கொள்ளலாம். அதற்கான வழிமுறைகள் என்னவென்று பார்ப்போம்.
உடலளவில்
தினமும், குறைந்தது 1/2 மணி நேரம் ஒரு உடற்பயிற்சி. நடைப்பயிற்சி, சைக்கிள், ஓட்டம், நீச்சல், நடனம், விளையாட்டு போன்றவையில் ஈடுபடுவது. இது நம் இரத்த ஓட்டத்தையும், இதய, நுரையீரல் செயல்பாட்டையும் இயற்கையாய் அதிகப்படுத்துவதால், மன உளைச்சலின்போதும் இது ஏற்பட்டாலும் உடல் தாங்கிக்கொள்ளும்.
மனதளவில்
எண்ணங்களை ஆராய்ந்து தேவையற்ற எண்ணங்களை களைய வேண்டும். ஒரு தாளில் தேவையற்ற பயம், கூச்சம், சந்தேகம், கோபம், காம எண்ணங்களை எழுதி பின் இது எனக்கு வேண்டாம் என்று கிழித்து விடலாம். தினமும் 20 முதல் 30 நிமிடம் ஏதாவதொரு தியானம் செய்யலாம். தியானத்தின் முடிவில் நம்மைப் பற்றி உயர்வாகவும், தைரியமாகவும் உருவகப்படுத்தி மனதில் பதியச் செய்யலாம்.
உடல் தளர்த்தல் என்ற பயிற்சியின் மூலம் உடல் தசைகளை தலையிலிருந்து கால்கள்வரை படிப்படியாக தளர்த்தி பின் அதே அமைதியான மனநிலையில் நம்மை நாமே உயர்வாக நினைத்து மனதில் நிலை நிறுத்தலாம்.
நண்பர்களுடன் கஷ்டங்களை பகிர்ந்துகொள்வது. பிரச்னைக்குரிய நபர்களிடம் மனம்விட்டு பேசிவிடுவது, எதையும் லேசாக எடுத்துக் கொள்வது, கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் நினைத்து மருகாமல் நிகழ்காலத்தை நிறைவாய் வாழ நினைப்பது போன்றவைகள் மன உளைச்சலற்ற நிறைவான வாழ்வைத்தரும்.