
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’’ என்றார் வள்ளுவர். மனிதப் பிறவி எப்பொழுது முழுமை அடைகிறது என்றால் பிறருக்கு தன்னால் உதவிக்கரம் நீட்டி வாழவைக்கும் பொழுதுதான். நீர் நிறைந்த தடாகத்தைத்தேடி அன்னப் பறவைகளும், நீர் வாழ் உயிரினங்களும் எப்படி தாமாக வருகின்றனவோ அதுபோல உதவுகின்ற மனம், உயர்ந்த குணம் இருந்தால் அவர்களைத்தேடி இன்பமும், புகழும் வந்து சேரும் என்பது உறுதி. அதற்கான புகழ்பெற்ற ஒரு குட்டிக் கதை இதோ.
தனக்கு வயதான நிலையில் தனது இடத்திற்கு சீடர்களில் ஒருவரை தேர்வு செய்து வைத்திட எண்ணிக் கொண்டிருந்தார் குரு. சீடர்களை தனித்தனியே கண்டு ஒரு மந்திரத்தை சொல்லி யாருக்கும் சொல்லிக் கொடுத்துவிடாதே. அவர்கள் எல்லா நலன்களையும் பெற்றுவிடுவார்கள். உன்னை மதிக்கமாட்டார்கள் என்று கூறினார்.
கடைசியாக வந்த சீடனுக்கும் அவ்வாறே அந்த மந்திரத்தை சொல்லிக்கொடுத்து மற்றவர்களைப் போன்று எச்சரிக்கை செய்து அனுப்பினார். அந்த சீடனும் மக்கள் நிறைந்த ஓர் இடத்திற்குச் சென்று தனக்குக் குரு கற்றுக்கொடுத்த மந்திரத்தை சொன்னதோடு அதன் பலன்களையும் விளக்கமாகச் சொன்னார். ஏற்கனவே குருவிடம் மந்திர மொழிகளைக் கேட்ட சீடர்கள் இது அறிந்து குருவிடம் சென்று குருவே! தாங்கள் யாருக்கும் சொல்லக்கூடாது என்று சொன்ன மந்திரத்தை இவன் எல்லோருக்கும் சொல்லிவிட்டான். எனவே இவனை மடத்திலிருந்து வெளியேற்றுங்கள் என்றும் முறையிட்டனர்.
"நான்தான் வெளியேறப் போகிறேன். அந்த சீடன்தான் பெற்ற பயனை எல்லோரும் பெறவேண்டும் என்னும் உயர்ந்த எண்ணத்தோடு இருக்கிறான். அவனே இந்த மடத்தை தலைமை தாங்கி தொடர்ந்து நடத்துவதற்கு தகுதியானவன் என்றார் குரு".
வாழை, தென்னை போன்ற மரங்களை நினைவில் கொள்ளவேண்டும். அதன் அனைத்து உறுப்புகளும் மனிதன் முதற்கொண்டு ,விலங்குகள், புழு பூச்சிகளுக்கும் பயன்படுகிறது. அதுபோல் நம் வாழ்வின் அனைத்து நாட்களிலும் நாம் மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் உதவி செய்து வாழ்வதே உன்னதமான வாழ்வாகும்.
யார் உங்களுக்கு உதவுகிறார்களோ, அவர்களை மறந்து விடாதீர்கள்...
யார் உங்களை நேசிக்கிறார்களோ, அவர்களை வெறுத்து விடாதீர்கள்...
யார் உங்களை நம்புகிறார்களோ, அவர்களை ஒருபோதும் ஏமாற்றிவிடாதீர்கள்...!