

உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள நீங்கள் எவற்றை செய்யலாம் என்று கருதி அவற்றை நடைமுறைப்படுத்த தயங்கினீர்களோ, அதை உடனடியாக செய்ய ஆரம்பியுங்கள்.
உதாரணமாக ஆற்று நீரில் நீச்சல் அடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், தண்ணீர் மீது உள்ள பயத்தின் காரணமாக ஆற்றில் இறங்கவிடாமல் தடுத்துவிடுகிறது.
உங்களுடைய நண்பர்கள் அனைவரும் ஆற்று நீரில் விளையாடி மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்வதை ஏக்கத்துடன் கரையில் அமர்ந்தவாறு பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இப்படி இருப்பதை விடுத்து, நீச்சல் தெரிந்த உங்கள் நண்பர்களிடம் உங்களுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க உதவும்படி கேட்க வேண்டும். இடுப்பில் ரப்பர் டியூப்பை கட்டிக்கொண்டு தைரியமாக அவர்கள் முன்னிலையில் ஆற்றில் குதித்தால், தண்ணீரைப் பற்றிய பயம் சில மணி நேரத்திலேயே முற்றிலும் மறைந்துவிடும்.
பொதுக்கூட்டங்களில் பேசி நல்ல பேச்சாளர் என்று பெயர் எடுக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்தாலும், கூட்டத்திற்கு முன் நிற்பதை நினைக்கும் போதே பயம் உங்கள் நாக்கை அசைய விடாமல் செய்து, கை கால்கள் உதற ஆரம்பித்து அவமானப்பட வேண்டி இருக்குமோ என நினைப்பீர்கள்.
ஆரம்பத்தில் இந்த நிலை இருந்தாலும் உள்ளத்தில் உள்ள பயத்தை தூக்கி எறிந்து தைரியமாக பேச ஆரம்பித்தால் விரைவில் மற்றவர்கள் மதிக்கும் ஒரு பேச்சாளராக உங்களை உயர்த்திக் கொண்டு இருப்பதை நீங்கள் காண்பீர்கள்.
ஒருவனுடைய நம்பிக்கையை பயம் அழித்து, முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும் அவனுடைய பாதையின் குறுக்கே கடக்க முடியாத தடுப்பு சுவரை உருவாக்கிவிடும். ஆகவே பயத்தை வென்றவனுக்குதான் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்.
மிகச் சிறிய இறக்கைகளால்தான் மிகப்பெரிய கருவண்டு பறக்கிறது. கருவண்டின் எடை, அதனுடைய இறக்கைகளின் பரப்பளவு, அது இறக்கைகளின் உதவியைக் கொண்டு உருவாக்கும் காற்றழுத்தம் போன்றவற்றைக் கணக்கிட்ட அறிஞர்கள் அந்த வண்டு பறப்பது சாத்தியமில்லை என்று கூறுயிருக்கிறார்கள்.
அறிஞர்களின் அபிப்ராயத்தை பற்றி அந்த வண்டுக்கு ஒன்றும் தெரியாது. அது பறக்கிறது. அறிஞர்கள் முடியாது என்ற காரியத்தை செய்து காட்டுகிறது.
யாராவது உங்களிடம் 'உங்களால் முடியாது' என்று கூறினால் அதை நம்பி மட்டும் விடாதீர்கள். கடுமையான முயற்சி செய்து வண்டு பறப்பதைப்போல நீங்களும் கடின முயற்சிகளை எடுத்துக்கொண்டு முடியாது என தடுக்கப்பட்ட காரியங்களை செய்து முடியுங்கள்.
உங்களுடைய முன்னேற்றத்திற்கு உதவப் போகும் ஒரே நபர் நீங்கள் மட்டும்தான் என்பதால், நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து இந்த வினாடியே முன்னேற்றத்திற்கு திட்டம் ஒன்றை தீட்டி அதை உடனடியாக செயல்படுத்த ஆரம்பியுங்கள்.