

கடினமாக உழைத்தால் மட்டும் போதாது. கவனமாக உழைக்க வேண்டும். இந்த வார்த்தைகளை படித்துவிட்டு, கடந்து செல்ல பார்க்காதீர்கள். கடின உழைப்பு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உள் வாங்குங்கள். அதோடு கவனமாக இருந்தால், அச்சாணி என்னும் உடல் பாதுகாப்பாக இருக்கும்.
உழைப்பின் வியர்வைத்துளிகள் முக்கியமானவை. வாழ்க்கையை கட்டமைக்க உதவும். கடின உழைப்பில் வரும் கண்ணீர் துளிகள், அதனை சிதைத்து விடும். ஏனெனில், கடின உழைப்பு என்பது லகான் கட்டிய குதிரை போன்றது. அதனால் நேராக மட்டுமே பார்க்க முடியும். அதுபோல் தான் நீங்கள் செய்யும் கடினமான உழைப்பும்.
வாழ்க்கையில் கடினமாக உழைத்து முன்னுக்கு வந்தேன் என்று மகிழ்ந்து பெருமையுடன் சொல்வது சுலபம். அதற்கு அவர்கள் தந்த விலை, எப்படி இருக்கும் என்று நினைத்து பார்க்கவே பரிதாபமாக இருக்கும். அவர்கள் உடல் மிதமிஞ்சிய வேலை பளுவில் இயங்கி இருக்கும். அப்போது உடலை பாதுகாக்க தவறவிட்டிருப்பார்கள். மற்றொன்று மனம் அழுத்தம். அதனால், வாழ்க்கையில் பல நல்ல தருணங்களை இழந்து இருப்பார்கள்.
நேரம் அறிந்து உழைப்பவர்கள் வீண்போவதில்லை. ஏனென்று சொன்னால், அவர்களுக்கு தன் நலத்தையும் பார்த்துக் கொண்டு, குடும்பத்தையும் செவ்வனே பார்த்துக்கொள்ளும் மனம் இருக்கும். அப்போது மன அழுத்தம் ஏற்ப்பட அவர்களுக்கு வாய்ப்பில்லை.
தன் உயர்வுக்காக தன் குடும்பத்தின் உயர்வுக்காக நினைத்து பாடுபடுவது தான் உழைப்பு. அதில் தங்களுடைய சிரமங்களை எப்படி மகிழ்வுடன் ஏற்கும் மனநிலை உருவாகும். சோம்பல் இல்லாத ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கும். இப்படி அறிந்து புரிந்து தினமும் உழைக்கும் மனிதர்கள்தான், உயர்வான இடத்திற்கு சென்று, சாதனைகள் படைத்து, அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்து காட்டுகிறார்கள்.
சிறகுகள் ஒடிந்த பறவைகள் வான் நோக்கி பறக்க முடியாது. அதேபோல்தான், நம் உழைப்பும் புரிந்துகொள்ள முயற்சி செய்வோம். உடலும் மனமும் சிறகுகள்போல் இருக்க வேண்டும். இதில் உடலை வருத்தியோ, அல்லது மன அழுத்தத்திலோ எந்த உழைப்பும் இருந்தால், நம்மால் எதையும் சாதிக்க முடியாது என்பதை உணர்ந்து மிகுந்த பொறுப்புடன் செயலாற்றும் தன்மை நம்மிடம் உருவாக வேண்டும்.
அதேபோல், தனக்கு மிஞ்சிய எதையும் தன் தலையில் சுமந்து, அதற்காக கால நேரம் பார்க்காமல், உழைத்து, உடல் என்னும் ஆணிவேரை வெட்டி, காலத்தோடு கலந்து விடாதீர்கள். உழைப்பே புருஷ லட்சணம் என்பது உண்மை. அதோடு, குடும்ப தலைவன் என்ற மாபெரும் பணியும் நமக்கானது என்பதில் கவனமாக இருங்கள்.
உழைக்கும் வர்க்கம்தான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கான முதுகெலும்பு என்பதில் யாருக்கும் ஐயமில்லை. உழைப்பே உயர்வு மறுக்கவில்லை. உழைப்பு இல்லையேல் வெற்றி இல்லை என்பது நிதர்சனமான உண்மை மாற்றுக் கருத்து இல்லை. இப்படி யெல்லாம் சொல்வது மனித வாழ்வில் உயர்ந்த சிந்தனையின் வெளிப்பாடு.
நாம் மேற்கொள்ளும் உழைப்பு நம் உடலைப் பலப்படுத்தும் விதமாகவும் மனதிற்கு கஷ்டங்கள் வராமல், அதனை உறுதிப்படுத்தும் விதமாகவும் இருக்க வேண்டும். இந்த அடிப்படை உணர்வுகளோடு பயணிக்கும் வாழ்க்கை சிகரம் தொடும்!