
நம் வாழ்க்கைப் பாதையில் குறுக்கிடும் தடைகள் பல. பல நேரங்களில் நம் பச்சாதாபமே கூடத் தடையாக அமைவதுண்டு. வெளிநாட்டில் கஷ்டப்பட வேண்டாமென்று மகனின் வெளிநாட்டு வேலைக்கு தந்தை தடை போடலாம். இப்படி நண்பர்கள், உறவினர்கள் காதலியர் போடும் தடைகளால் வாழ்க்கையை முடமாக்கியவர்கள் ஏராளம். இதை நன்கு கவனித்தால் நமக்குத் தடை நாமே. தோல்விகளை வரிசையாக சந்தித்துவிட்ட பின் எதைப் பார்த்தாலும் தோல்வி நோக்குடனே பார்க்கிறோம்.
விக்டர் ஃப்ராங்க்லின் என்ற எழுத்தாளர் ஜெர்மனியில் ஹிட்லரால் அடைக்கப்பட்ட கைதிகளின் மனநிலையை தன் நூலில் குறிப்பிடுகிறார். இருண்ட அறையில் கைதிகள் பல மாதங்கள் வாழ்ந்தபோது நாள்தோறும் வெளிச்சத்தையும், சூரிய ஒளி பற்றியும், தென்றல் காற்று பற்றியும் பேசுவார்கள். ஒருநாள் விடுதலையான பிறகு வெளியே வர அவர்கள் கண்கள் கூசின. பலர் வெளியே வந்ததும் கூட மரநிழல்களிலும், ஒளி குறைந்த பகுதிகளிலும் ஒளிந்து கொண்டார்கள்.
இதுதான் இன்று பெரும்பாலானோர்களின் நிலை. இருண்ட வாழ்விலிருந்து வெளிச்சத்திற்கு வரமுடியாத நிலை. அப்படி வந்தாலும் இருளுக்கே ஓடத்துடிக்கும் மனநிலை.
சுவாமி விவேகானந்தர் "ஓய்வு எடுக்க ஆரம்பித்தால் நீங்கள் துருப்பிடித்த ஆரம்பித்து விடுவீர்கள் என்றார். நம் முன்னேற்றத்தைத் தடுக்கும் தீய எண்ணங்களை ஓழிப்பதே நம் கடமையாகும். வானையும், கடலையும் பற்றி அறிவது மட்டும் அறிவல்ல. அல்ஜீப்ராவையும், அசோகனின் பொற்காலத்தைப் பற்றித் தெரிந்து கொள்வது மட்டும் அறிவல்ல. நம்மைப் பற்றித் அறிந்து கொள்வதே மிகவும் தேவையான அறிவாகும். உங்கள் பலத்தைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பலமின்மையை அடையாளம் கண்டு அதை ஒழியுங்கள். அதைவிட சிறந்தது உங்கள் பலமின்மையை பலமாக மாற்றுங்கள்.
நண்பர்கோடு அரட்டை அடிப்பது பழகுவது உங்கள் பலமின்மை என்றால் ஆயுள் காப்பீட்டு நிறுவன முகவராக ஆகுங்கள். உங்கள் அரட்டையே உங்களுக்குப் பாலிசி பெற்றுத்தரும். தடைக்கற்களை படிக்கட்டுகள் ஆக மாற்றுங்கள்.
கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஒரு பேட்டியில்" நான் சாதாரணமாக விளையாடிக் கொண்டிருந்தேன் விக்கெட்டுகள் சரியச்சரிய அவற்றின் எண்ணிக்கை உயர் ஆரம்பித்ததும் எனக்கு விழிப்புணர்வு ஏற்பட்டது. அகில உலகில் சாதனை படைக்கும் அளவிற்கு என்னுள் ஏதோ இருக்கிறது என்ற விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. அதற்குப் பிறகு நான் எந்த விவகாரங்களிலும் அக்கறை காட்டவில்லை. விளையாட்டு ஒன்றுதான் என் குறிக்கோளாக இருந்தது அதன் விளைவு சாதனை படைக்க முடிந்தது" என்றார்.
தன்னால் முடியும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டதன் விளைவுதான் கபில் தேவ் சாதனைக்கு வித்து என்பதைக் காணும்போது நமக்குள்ளும் ஏன் அந்த விழிப்புணர்வு ஏற்படக் கூடாது?. ஆகவே நமக்குள் நம்மைத் தேடுவோம். தேடி எடுத்து புதையலை வைத்து அவனியை விலைக்கு வாங்குவோம்.