
குடும்பம் என்றால் ஆயிரம் பிரச்னைகள் வரத்தான் செய்யும் ஏற்ற இறக்கம் இல்லாத குடும்பங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இங்கே யாரும் சந்தோஷமாக வாழ்வதாக தொியவில்லை.
ஆனால் சந்தோஷமே இல்லை என்றும் கருத்தில் கொள்ளமுடியாது.
அதே நேரம் சின்ன விஷயங்களைக்கூட பொிதாக்கி பூதக்கண்ணாடி ஆராய்ச்சி செய்வதால் பலன் ஏதும் கிடையாது. பொதுவாக உடன்பிறந்த சகோதரர் களிடையே கருத்து வேறுபாடு ஏற்படும் நிலையில் மூன்றாம் நபர்களிடம் சொல்லி தீா்வு காண்பதைப்போல முட்டாள்தனமான காாியம் எதுவுமே இல்லை எனலாம்.
விஷயம் கை மீறிப்போகும் நிலையில் சாதக பாதகங்களை அலசி ஆராயவேண்டிய நிலை வந்தால் அடுத்த நபரிடம் சொல்லுவதால் தவறில்லைதான், அதுவும் ஆபத்தானதே. ஆனால் நமக்கு நாமே பேசி தீா்வு காணவேண்டிய சிறிய விஷயங்களைக்கூட மனம் விட்டுப்பேசி தீா்வு காண்பதே சிறந்த ஒன்றாகும். அப்போது நம்மிடம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், விவேகமும், நிதானமும், இருக்கவேண்டுமே!
இதுபோலவே மாமியாா் மருமகள் சண்டை. இது சமையலறைக்குள் ஒருவரை ஒருவர் கலந்து பேசி மனம்விட்டு ஒத்துப்போகும் பக்குவம் வந்தாலே நல்லது. நமது மாமியாா், நமது மருமகள் என்ற உறவின் நிலைபாடுகளுடன் பரஸ்பர புாிதல் இருந்தாலே அங்கு அமைதியே நிலவும். மாமியாரோ மருமகளோ யாராய் இருந்தாலும் ஒருவரைப்பற்றி ஒருவர் வெளி மனிதர்களிடம் குறைசொல்லாமல் இருப்பதே உசிதம். இதற்கு உதாரணமாக ஒன்றைச்சொல்லலாம்.
சிதறும் என்பதற்காக தேங்காயை உடைக்காமலே இருந்தால் அழுகல்தான் மிச்சமாகும். அதுபோலத்தான் மனமாச்சர்யங்கள் களையாவிட்டால் வாழ்க்கையானது புரையோடிப்போன புண்கள் போலவே ஆகிவிடுமே!
மேலும் ஒரு உதாரணமாக நான்கு சுவற்றுக்குள் இருக்கிற கணவன் மனைவி சச்சரவானது வெளியே தொியாத வரையில் சுமுகமே.
அது கதவைத்திறந்து கொண்டு வெளியே வந்துவிட்டால் வெள்ளரிப் பழம்போல் வெடித்தே விடுமல்லவா!
கணவன் மனைவியின் புாிதல் இல்லா வாழ்க்கையானது சங்கடத்தையே தரவல்லதாகும். மனைவி கணவனிடம் ஆவேசப்பட்டு கருத்து வேறுபாடுகளைக்களையாமல் தகப்பனாா் வீட்டுக்குப் போய்விடுவதால் என்ன வரப்போகிறது?
இது போன்ற சூழலில் பெண்ணின் தகப்பனாா் உடனே மாப்பிள்ளையிடம் கலந்துபேசி சுமூக தீா்வை எட்ட வைக்க முயற்சி செய்யவேண்டும்.
எந்த கருத்து வேறுபாடாக இருந்தாலும் பேசினால்தான், அதாவது மனம் விட்டு ஈகோவை விட்டொழித்து பேசினால்தான் மனமாச்சர்யம் கலைய வழி உண்டு. அதுவல்லாது பெண்ணின் தகப்பனாா் மாப்பிள்ளை வீட்டாாிடம் பேசுவதைத் தவிா்த்து பெற்ற மகளுக்காக ஒருதலைப்பட்சமாக இருந்தால் விளைவு விபரீதம்தானே!
இதற்கும் ஒரு உதாரணமாக "உறவுகள் சிதையும் என்பதற்காக உண்மையை உடைத்துப் பேசாவிட்டால் கவலையும் அழுகையும் தான் மிச்சமாகும்" என்பதை இரு தரப்பினர்களும் உணர்வதே நல்லது.
பொதுவாக நேரம், காலம், மீனம், மேஷம், பாா்த்து எதையும் தள்ளிப்போடாமல் உடனுக்குடன் பேசித் தீா்வு காண்பதே ஆரோக்கியமான உறவுக்கு வழிவகுக்கும். பதறிய காாியம் சிதறும், அதேபோல பேசாத பிரச்னை வளரும் என்பதை நினைவில் கொள்வோமாக!