

நம்மை நேசிக்கும் ஒருவரை நாம் மதிப்பதில்லை. நாம் நேசிக்கும் ஒருவரோ நம்மை சிறிதும் மதிப்பதில்லை. இதில் மதிப்பது அல்லது மதிக்காதது என்பதைத்தாண்டி அன்பை பலருக்கும் கையாள தெரிவதில்லை என்பதே உண்மை. அன்பை கொடுப்பதில் பாரபட்சம் பார்க்கக் கூடாது. அன்பும் அக்கறையும் வாழ்வில் மிகவும் முக்கியமானது. சின்ன சின்ன விஷயங்களுக்கும் பிறரை மனதார பாராட்டக் கற்றுக்கொள்ள வேண்டும். மனதாரப் பாராட்டுவதும், அன்பான வார்த்தைகளை வெளிப் படுத்துவதும் அவர்களை மட்டுமல்ல, நம்மையும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும்.
சிலர் மீது அன்பு பாராட்டினால் அவர்கள் அதனால் மகிழ்ச்சி கொள்ளாமல் பயம் கொள்வார்கள். இதில் ஏதேனும் உள்குத்து இருக்குமோ என்று அச்சப்படுவார்கள். இதனால் அவர்களுக்கு என்ன ஆதாயம் என்று மனதால் தேட முற்படுவார்கள். இந்தப் போக்கு முற்றிலும் தவறு. முதலில் இதிலிருந்து நாம் வெளிவர வேண்டும்.
நாம் நேசிக்கும் ஒருவர் நம்மை மதிக்கவில்லை என்றால் அவர்களிடம் இருந்து சற்று விலகி இருந்து, தக்க சமயத்தில் அன்பை வெளிப்படுத்த வேண்டும். இதன் மூலம் அவர்கள் நம்முடைய உண்மையான அன்பை உணர்ந்து கொள்வார்கள். அன்பால் எதையும் மாற்ற முடியும். வாழ்க்கை அழகாக இருக்க அன்பும், பரிவும், பாராட்டும் குணமும் அவசியம்.
நேசிப்பது என்பது ஒருவரின் நிறை குறைகளோடு, உண்மையாய், எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி, நிரந்தரமாய் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நேசிப்பதுதான் சிறந்தது. மற்றவர்களை நம்மிடம் அன்பு செலுத்தும்படி கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் நம்மை அன்புக்கு தகுதியானவர்களாக ஆக்கிக்கொள்ள முடியும். பிறரிடம் அன்பு செலுத்த தயங்காதவர்களாக உருவாக்கிக்கொள்ள முடியும். நம்மை நேசித்தவர்கள் உதாசீனப்படுத்திய பின்பும் அவர்களை வெறுக்க தோன்றாது. இதுதான் நேசிப்பதின் சிறப்பு.
நாம் நேசிக்கும் நபர்கள் செய்யும் தவறுகள் கூட நமக்குப் பெரிதாக தெரிவதில்லை. மன்னித்து விடுகிறோம். அத்துடன் அவர்கள் பேசாததை நினைத்து கவலைப்படவும் செய்கிறோம். அவர்கள் புறக்கணித்தாலும் வலியச்சென்று பேச முற்படுகிறோம். அவர்களுக்காக காத்திருக்கவும் செய்கிறோம். இதெல்லாம் நாம் அவர்களை உண்மையாக நேசித்ததின் அடையாளமாகும். நேசம் என்பது சுவாசிப்பதுபோல. ஆத்மார்த்தமாக அதுவாகவே வரவேண்டும். நேசித்து பார்க்கும்பொழுதுதான் அதன் உண்மையான ஆனந்தம் நமக்குப் புரியும். வாழ்கின்ற வாழ்க்கையே அற்புதமானதாகத் தெரியும். உண்மையான நேசம் மனதைவிட்டு என்றும் அகலாது.
நேசிப்பது என்பது ஒரு கற்றல் செயல் முறையாகும். முதலில் நம்மை நாமே நேசிக்கத் தொடங்குவது மற்றவர்களை நேசிப்பதற்கும், வாழ்க்கையை அனுபவிப்பதற்கும் உதவும். அனுபவங்கள் மற்றும் வாழ்க்கை சூழ்நிலைகள் யாரை நேசிப்பது என்பதை நமக்கு கற்றுக்கொடுக்கும்.
நாம் அன்புடன் செய்யும் சின்ன செயல் கூட ஒருவரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிடும். உலகில் அன்பைவிட வலிமையானது எதுவுமில்லை.