
நம்முடைய வாழ்க்கையில் எத்தனை பிரச்னைகள் வந்தாலும், அதை தைரியமாக எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். பிரச்னையை கண்டு பயந்து ஓடிக்கொண்டிருந்தால், வாழ்நாள் முழுவதும் ஓடிக்கொண்டேயிருக்க வேண்டியதுதான். இதை புரிந்துக் கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒரு சின்ன பெண் வயலோரமாக நடந்து சென்றுக் கொண்டிருந்தபோது, அவளுடைய காலில் ஒரு முள் குத்தி விடுகிறது. அந்த சின்ன பெண்ணும் வீட்டில் நொண்டிக் கொண்டேயிருக்கிறாள். இதைப் பார்த்த அப்பா, ‘உன் காலை காட்டும்மா! நான் முள் எடுத்து விடுகிறேன். காலில் ஏதாவது முள் மாட்டியிருக்கபோகிறது’ என்று அக்கறையாக கேட்டார்.
அதற்கு அந்த சின்ன பெண், ‘வேண்டாம்பா! எனக்கு யாரும் முள் எடுக்க வேண்டாம். முள்ளை எடுப்பதை நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது’ என்று சொல்கிறாள். இதைக்கேட்ட அப்பாவும் சரி என்று விட்டுவிடுகிறார்.
நேரம் ஆக ஆக அந்த சின்ன பெண்ணுக்கு கால் மிகவும் வலிக்க ஆரம்பிக்கிறது. அந்த குட்டி பொண்ணும் தன்னுடைய அப்பாவிடம் சென்று, ‘அப்பா! கால் ரொம்ப வலிக்கிறது. இப்போது அந்த முள்ளை எடுத்து விடுங்கள்’ என்று கூறுகிறாள். அப்பாவும் அந்த குட்டி பொண்ணிடம், ‘கண்ணை மூடுமா!’ என்று சொல்லிவிட்டு அந்த முள்ளை வேகமாக எடுத்து விடுகிறார்.
இப்போது அப்பா சொல்கிறார், ‘இந்த சின்ன முள் குத்திய பிரச்னைக்கு பயந்து நீ இந்த வலியை காலையிலிருந்து சாயங்காலம் வரை அனுபவித்திருக்கிறாய்! உனக்கு வரும் பிரச்னைகளை பார்த்து நீ பயந்து ஓடினால், வாழ்க்கை முழுக்க நீ பயந்து ஓடிக்கொண்டேதான் இருக்க வேண்டும். அதற்கு பதில் ஒருமுறை அந்த பிரச்னையை எதிர்த்து நின்று பார். அதற்கு பிறகு அந்த பிரச்னை உன் வாழ்க்கையில் எத்தனை முறை வந்தாலும், நீ பயந்து ஓட மாட்டாய்!’ என்று கூறினார்.
இந்த கதையில் வருவதுப்போல, நாமும் சில சமயங்களில் சின்ன பிரச்னையை எதிர்க்கொள்ள பயந்து அந்த முயற்சியை செய்யாமலேயே கைவிட்டிருப்போம். பிரச்னைகளை ஒருமுறை எதிர்த்து நின்று போராடித்தான் பாருங்களேன். இதை தெளிவாக புரிந்துக் கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள்.