
நம் வாழ்க்கையில் நமக்கு வருகின்ற கஷ்டங்களை நினைத்து தினமும் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு அதை தீர்ப்பது எப்படி என்ற தீர்வை யோசிப்பதே சிறந்ததாகும். அத்தகைய தெளிவான முடிவே நமக்கு வெற்றியை தரும். இதை தெளிவாக புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒரு காட்டில் தவம் செய்துக்கொண்டிருந்த முனிவரை பார்க்க அந்த நாட்டு மன்னர் வந்தார். அந்த முனிவரிடம், ‘சாமி! நான் நிம்மதியாக தூங்கி பல நாட்கள் ஆகிறது' என்றார்.
‘என் நாட்டை தாக்குவதற்காக காத்திருக்கும் எதிரி நாட்டு மன்னன் படை ஒரு பக்கம், சூழ்ச்சி செய்து ஆட்சியை கைப்பற்றலாம் என்று நினைக்கும் துரோகிகள் கூட்டம் ஒருபக்கம், என் நாட்டு செல்வங்களை எல்லாம் கொள்ளையடிக்குற கொள்ளைக் கூட்டம் ஒருபக்கம் என்று பல பிரச்னைகள் இருப்பதால் என்னால் தூங்கவே முடியவில்லை’ என்று சொன்னார்.
அதைக்கேட்ட முனிவரும் பக்கத்தில் இருந்த ஒரு கல்லை எடுத்து மன்னனின் கைகளில் கொடுத்துவிட்டு தியானத்தில் அமர்ந்துவிட்டார். நேரம் ஆக ஆக மன்னரால் அந்த கல்லை கைகளில் தூக்கிக்கொண்டு நிற்கவே முடியவில்லை. ‘சாமி! இந்த கல்லை என்னால் சுமக்க முடியவில்லை. இதை கீழே போட்டுவிடலாமா?’ என்று முனிவரிடம் கேட்டார்.
‘நான் இந்த கல்லை உன் கைகளில்தான் கொடுத்தேன். உன்னை தூக்கி நிற்க சொல்லவில்லையே? என்று சொல்லிவிட்டு மறுபடியும் தியானத்திற்கு போய்விட்டார்.
இந்தக் கதையில் சொன்னதுப்போல்தான். கல்லை தூக்கி சுமக்க சுமக்க அதன் எடைக்கூடிக் கொண்டேதான் போகும். அந்த கல்லை போலத்தான் நம்முடைய பிரச்னைகளும். அது நம் கைக்கு கிடைச்சதும் பிரச்னையிருக்கிறதே என்று தூக்கி வைத்துக் கொண்டிருப்பதா இல்லை அதை சரிசெய்து தூக்கிப் போட்டுவிட்டு போவதா? என்று முடிவெடுப்பது நம்முடைய கைகளில்தான் இருக்கிறது. பிரச்னைகளை கைகளில் தூக்கி சுமந்துக் கொண்டிருப்பது வீண் மனஉளைச்சலையே ஏற்படுத்தி நிம்மதியைக் கெடுத்துவிடும். இதை புரிந்துக்கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள்.