
நேர்மையாக இருப்பது மற்றவர்களிடையே நம்பிக்கை யையும், நல்லுறவயும் வளர்க்கும். உண்மை, வெளிப்படை தன்மை மற்றும் தார்மீக நடத்தையை கடைப்பிடிப்பதன் மூலம் வலுவான சமூக அடித்தளத்தை உருவாக்க முடியும். நேர்மையான ஒருவர் மற்றவர்களால் நம்பப்படுவார்கள். இது வலுவான மற்றும் நம்பகமான உறவுகளை உருவாக்குவதற்கு உதவும். சவாலான காலங்களில் சரியான முடிவுகளை எடுப்பதற்கு இந்த தார்மீக, வலிமைமிக்க நேர்மையானது உதவும்.
உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பது தனிப்பட்ட வாழ்க்கையிலும் மனஅமைதியையும், மனநிறைவையும் தரும். உறவுகளிலும் நேர்மையாக நடந்து கொள்வது நம் மரியாதையை உயர்த்துவதுடன் உறவை பலப்படுத்தி நம் மீது நல்ல மதிப்பு மரியாதையை ஏற்படுத்தும். சமூகத்தில் மரியாதையுடன் நடத்தப்படுவோம். இதனால் சமூகத்தில் நேர்மையின் உயர்வான மதிப்புகள் மக்களின் நம்பிக்கைக்கு உரியதாகி, சமூகத்தின் நலனுக்கு உதவுகின்றன.
நேர்மையாக செயல்படும் பொழுது தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. (Motivational articles) மேலும் சவால்களை எதிர்கொள்ளும் திறனும் வளர்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், நேர்மையாக இருப்பது என்பது நம்பிக்கை யையும் நல்வாழ்வையும் வளர்க்கும் ஒரு சிறந்த வாழ்க்கை முறையாகும். உண்மை பேசுதல், நேர்மையாக நடந்து கொள்ளுதல் மற்றும் மனதில் உள்ளதை ஒளிக்காமல் பகிர்வது போன்றவை நேர்மையின் சிறப்புகளாகும்.
நேர்மை என்பது உறவுகளில் வெளிப்படை தன்மையையும், உறுதியையும் உருவாக்கும். இதனால் நம் தொடர்புகள் நேர்மையாகவும், நேரடியாகவும் அமைந்து விடும். இது ஒரு சமூகத்தின் அடிப்படை நற்பண்புகளில் ஒன்றாகும். நேர்மையான சமூகங்களில் நம்பிக்கையும், நீதியும் வளர்கின்றன. அறிவில்லாத நேர்மை பலவீனமானது, நேர்மையில்லாத அறிவோ மிகவும் ஆபத்தானது என்பார்கள். நேர்மை இல்லாவிட்டால் கண்ணியம் எங்கே இருக்கும்? உண்மையை சொல்வதால் நாம் எதையும் நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நேர்மைக்கு என்றுமே மதிப்பு அதிகம்.
நேர்மையான வாழ்க்கை முறையை பின்பற்ற நம் செயல்களின் விளைவுகளை எதிர்கொள்ளவும், தவறுகளை சரி செய்யவும் தயாராக இருக்க வேண்டும். அதற்கு நம் மனசாட்சிப்படி நடந்து கொண்டாலேபோதும். பொய்கள் ஆழ்மனதில் பாதிப்பை ஏற்படுத்தி குற்ற உணர்வை ஏற்படுத்தும்.
ஆனால் நேர்மையாக வாழ்பவர்களுக்கு குற்ற உணர்வு எதுவும் இன்றி மகிழ்ச்சியான மற்றும் நிறைவான நல்வாழ்வைப் பெறமுடியும். நேர்மையாக வாழ்வதில் சிரமம் இருக்கத் தான் செய்யும். இருப்பினும் மனதில் துணிவுடன் இருந்து ஒழுக்கம் மற்றும் நேர்மையை கடைப்பிடிப்பதன் மூலம் வாழ்வில் முன்னேறலாம்.